ஆனை உரித்த தேவர்

இரண்டாம் ராஜராஜ சோழனால் எடுக்கப்பெற்றது தாராசுரம் ஐராவதீசுவரர் கோயில் எனப்பெறும் ராசராசேச்சரமாகும். அங்கு மகாமண்டபத்து வடபுறச் சுவரில் ‘‘ஆனை உரிச்ச தேவர்’’ என்ற சோழர்கால செந்தூர எழுத்துப் பொறிப்புடன் காணப்பெறும் கோஷ்டத்தில் ஆனை உரித்த தேவரின் திருமேனி காணப்பெறவில்லை என்றாலும், அத்திருமேனி இடம்பெயர்ந்து தற்போது தஞ்சைக் கலைக்கூடத்தில் உள்ளது. பூர்வமீமாம்சை வழிநின்ற தாருகாவனத்து இருடிகள் சிவபெருமானை ஏற்றுக் கொள்ளாது, அவ்வனத்தில் வேள்விகள் புரிந்தனர். அவர்தம் செயலறிந்த சிவபெருமான் பிட்சாடனர் வடிவம் ஏற்று தாருகாவனம் சென்றார்.

திருமாலோ மோகினி வடிவம் எடுத்து வேள்விபுரியும் இருடிகள் முன்பு மயக்கி ஆடல்புரிந்தார். பிட்சாடனாரோ உடலில் ஆடையின்றி அவர்தம் தெருவில் சென்று இருடி பத்தினிகள் இட்ட அன்னத்தை ஏற்றார். அவர்தம் அழகில் மயங்கி அவ்விருடி பத்தினிகள் தங்களை மறந்து சிவபெருமான் பின் சென்றனர். இருடிகளோ மோகினியின் அழகில் வயப்பட்டு வேள்வியை மறந்தனர். பின்னர் தங்கள் நிலை அறிந்து இவை அனைத்தும் பிட்சாடனாரின் செயலே என வெகுண்டு மீண்டும் கடுமையான வேள்வி புரிந்தனர்.

வேள்வித் தீயிலிருந்து வந்த பாம்பு, புலி, மழு, மான், பூதம் ஆகியவற்றை அவர்மீது ஏவிக் கொல்ல முனைந்தனர். அவை அனைத்தையும் தன் வயப்படுத்திய சிவபெருமான்மீது கடுங்கோபம் கொண்டு, கொல்களிறு ஒன்றினைத் தோற்றுவித்து அதனைச் சிவன்பால் ஏவினர். பரமனோ சிற்றுருக் கொண்டு யானையின் உடலினுட் புகுந்து, அதன் வயிற்றைக் கிழித்துத் தூக்கிப் பிடித்தவாறு கால பைரவராக வெளிவந்தார். முனிவர்கள் அஞ்சினர். அருகே குழந்தை முருகனுடன் இருந்த உமாதேவி அஞ்சி நடுங்க, தன் இடுப்பில் உள்ள முருகன் அக்காட்சியைக் காணாதவாறு மறைத்த நிலையில் அஞ்சி ஒதுங்கினாள். அதுகண்ட ஈசனோ சிரித்தார். பின்பு அனைவருக்கும் அருள்பாலித்தார். யானையின் உடலைக் கிழித்தவாறு வெளிப்போந்த ஈசனின் தோற்றத்தைக் காட்டுவதே “கஜசம்ஹாரர்’’ என்னும், ஆனை உரித்த தேவரின் திருவடிவாகும்.

யானையின் உடலைக் கிழித்துத் தூக்கிப் பிடித்தவாறு கடுங்கோபத்துடன் ஆடியபடியே வெளிவரும் காட்சி சிற்பம்தான், தஞ்சை கலைக் கூடத்தில் காணப்பெறுகின்றது. இங்கு கோலகால பைரவராக எட்டுத் திருக்கரங்களுடன் காணப்பெறுகின்றார். இரு கரங்களின் இரு விரல்கள் யானையின் தோலினைத் துளைத்தவாறு அதன் உடலைத் தூக்கிப் பிடித்துள்ளன. யானையின் பின்கால்களும், வாலும் தலைக்கு மேல் காணப்பெறுகின்றன. யானையின் தலைமீது ஈசனின் வலதுகால் அழுத்தி நிற்கின்றது. இடதுகால் புட்டம் வரை உயர்ந்து உடலின் திருப்பத்தைக் காட்டுகின்றது.

ஈசனாரின் கரங்களில் முறையே கபாலம், பாசம், திரிசூலம், உடுக்கை, மழு ஆகியவை உள்ளன. ஒரு கரம் சுசி முத்திரையாகத் தேவியைச் சுட்டி நிற்கின்றது. இக்கோலம் கண்டு பயந்த உமாதேவி, குழந்தை முருகனை இடுப்பில் அமரச் செய்து அஞ்சியவாறு ஒதுங்குகிறார். இச்சிற்பத்தின் நேர் எதிரே நின்றவாறு ஈசனின் திருமுகத்தை நோக்கு வோமாயின் அது கோபத்தின் வெளிப்பாட்டைக் காட்டுவதாக இருக்கும். அதே சிற்பத்தினை 45 பாகை சாய்ந்த கோணத்தில் இடப்புறம் நின்று நோக்குவோமாயின் கோபத்தின் உச்சத்தைப் புலப்படுத்தும். அதுபோன்றே 45 பாகை சாய்ந்த கோணத்தில் உமாதேவி இருக்கும் வலப்புறம் நின்று பார்ப்போமாயின் அதேமுகம் புன்னகை தவழும் கோலத்தில் காணப்பெறும்.

யானையின் உடலிலிருந்து கோபமாக வெளிப்பட்டவர், உமாதேவி அஞ்சியது கண்டு சிரித்தார் என்பதைத் திருநாவுக்கரசர்,

“விரிந்த பல்கதிர் கொள் சூல்வெடி படுதமருகம்கை
தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம்
உரித்து உமை அஞ்சக்கண்டு ஒண்
திருமணிவாய் விள்ளச்
சிரித்து அருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே’’
– எனத் திருச்சேறைப் பதிகத்திலும்,

“உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட
விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கித்
தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலராகித் தாமும்
சிரித்திட்டார் எயிறு தோன்றத் திருப்பயற்றூரனாரே’’

– எனப் பயற்றூர் பதிகத்திலும் பாடியுள்ள கோலத்தைத்தான் இச்சிற்பப் படைப்பில் நாம் காண முடிகிறது. இச்சிற்பத்தைப் படைத்த சோழனின் சிற்பி தேவாரப் பாடல்களில் ஆழங்கால் பட்டாலன்றி இப்படி ஒரு வெளிப்பாட்டைப் படைத்திருக்கவே இயலாது. சிவபெருமான் செய்த எட்டு வீரச்செயல்களில் தாருகாவனத்து இருடிகள் ஏவிய கொல்யானையைக் கொன்று தோலைப் போர்த்திய வீரச்செயல் (கஜசம்ஹாரம்) நிகழ்ந்த வீரட்டமாகப் போற்றப்பெறுவது வழுவூராகும். மயிலாடுதுறை ஆரூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இத்தலத்தில் சோழர்கால செப்புத் திருமேனிகளாக யானை உரித்த தேவர், குழந்தை முருகனை இடுப்பில் தூக்கியவாறு நிற்கும் உமாதேவி ஆகியவை வழிபாட்டில் உள்ளன.

தாராசுரம் ஆனை உரித்த தேவர் கற்சிற்பம் எவ்வாறு ஒரு தனிச் சிறப்புடையதோ, அதுபோன்றே செப்புத் திருமேனிகள் வரிசையில் வழுவூர் படைப்புகள் ஈடு இணையற்ற தனித்தன்மை பெற்றவை.வழுவூர் யானை உரித்த தேவரின் செப்புத் திருமேனியின் திருவாசியே யானை உடலாகத் திகழ்கின்றது. உச்சியில் வாலும், பக்கவாட்டில் யானையின் இரு பின்னங்கால்களும் உள்ளன. பத்தர பீடத்தின்மீது யானைத் தலை திகழ, பெருமானின் ஊன்றிய வலத்திருவடி அதன்மீது அழுந்தியுள்ளது. பக்கவாட்டில் திருவாசியில் இரண்டு முன்னங்கால்களும் தொங்க அருகே இரண்டு குள்ள பூதங்கள் குதூகலித்துத் தாளமிட்டவாறு ஆடி நிற்கின்றன. பெருமானின் இடத்திருவடி புட்டம் வரை உயர்ந்த இடுப்பளவு உடல் திருகிய நிலையில் உள்ளது.

எட்டுக் கரங்களை உடைய இப்பெருமான், முன்னிரு கரங்களால் யானையின் தோலினைத் தூக்கிப் பிடித்துள்ளார். விரல்கள் யானையின் தோலினைத் துளைத்து நிற்கின்றன. வலக்கரங்களில் சூலம், வாள் போன்ற ஆயுதங்களும், இடக்கரங்களில் கேடயம், பாம்பு ஆகியவையும் உள்ளன. ஒரு கரம் சுசி முத்திரை காட்டுகின்றது. காலபைரவர் கோலம் என்பதால், சுடர் விடும் சடாபாரம் உள்ளது. தலையில் கபாலம் உள்ளது. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை நீண்ட மணிக்கோர்வை இடம்பெற்றுள்ளது.

அருகேயுள்ள தனித்த பத்தர பீடத்தின்மீது உமாதேவி ஒரு கையில் குவளை மலர் ஏந்தியவராக இடுப்பிலுள்ள கந்தனை அணைத்துள்ளார். அம்மையின் கோலமோ அஞ்சி ஒதுங்கும் நிலையில் உள்ளது. இவை அனைத்தும் மிக அற்புதமான படைப்புகள் என்றால் மிகையில்லை. எழிலார் இத்திருமேனியைக் கண்ட கண்களோடு புகலியில் திருஞானசம்பந்தர் பாடிய,

“நிழல் திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி அலம்ப நல்ல
முழவொடும் அருநடம் முயன்றினனே
முடிமேல் மதி சூடினை முருகு அமர் பொழில்புகலி
அடியார் அவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே’’
– என்ற பாடலை ஒப்பிட்டுநோக்குவோம்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

The post ஆனை உரித்த தேவர் appeared first on Dinakaran.

Related Stories: