பிரான்மலை கொடுங்குன்றீஸ்வரர் கோயில்
பிரான்மலை கொடுங்குன்றீஸ்வரர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி தாலுகாவில் அமைந்துள்ளது. இது ஒரு மலை கிராமம். அங்குள்ள பிரான்மலையில்தான் இந்தக் கோயில் அமைந்துள்ளது. இந்த மலை கிராமத்தில் கொடுங்குன்றீஸ்வரர் மற்றும் பைரவர் கோயில்கள் உள்ளன. பிரான்மலை 2,000 அடி உயரத்தில் உள்ள கோட்டை மலையாகும். இது கிழக்குத் தொடர்ச்சி மலையின் கடைசி வெளிப்பகுதியாகும்.
பிரான்மலையை மன்னர் பாரி வள்ளல் ஆண்டதாகக் கூறப்படுகிறது. இம்மலை மேரு மலையின் ஒரு தொகுதி என்றும், ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையின் போது மலையின் ஒரு சிறு துண்டு வீசப்பட்டது. அதுதான் இந்த பிரான்மலை என்கிறது புராணம். மேலும் இம்மலை சிவலிங்க வடிவில் இருப்பதால், பிரசந்திரகிரி, காடோரகிரி என்றும் அழைக்கப்படுகிறது. பிரம்மா, சரஸ்வதி, சுப்ரமணியர் மற்றும் நந்தி இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த மலைக் கோயிலில் உள்ள சிவபெருமான் மங்கைபாகர் என்றும் பார்வதி தேவி தேனம்மாள் என்றும் அழைக்கப்படுகிறார். இந்த மலையில், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணத்தை சித்தரிக்கும் ஒரு இயற்கை கல் சிற்பம் உள்ளது.
பிரான்மலை கோயில் அழகான ராஜ கோபுரம் மற்றும் ஐந்து விமானங்கள் உள்ளடக்கிய பரந்த வளாகமாகும். பாதாளம், பூலோகம், சொர்க்கம் என மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். பாதாள லோக கோயிலில் கொடுங்குன்ற நாதர் வடிவிலும், நடு அடுக்கு கோயிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதர் வடிவிலும், குகை போன்ற மேல் அடுக்கில் மங்கை பாகராகவும் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மங்கை பாகர் சிலை ஒன்பது மூலிகைகளால் ஆனது. இக்கோயிலில் நந்திகள், கொடிமரங்கள், பலி பீடங்கள் எதுவும் இல்லை. முருகப் பெருமான் இங்கு மயிலுக்கு பதிலாக யானையுடன் காட்சியளிக்கிறார். ேகாயிலின் ஸ்தல விருட்சம் உறங்காபுளி மரம். புளி மரத்தின் இலைகள் மடிக்காமல், புளி காய்கள் பழுக்காமல் கீழே விழும். மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், இங்கு சூரியனின் கதிர்கள் ஆறு மாதங்களுக்கு, பொதுவாக அக்டோபர்-நவம்பர் முதல் மார்ச்-ஏப்ரல் வரை தொடர்ந்து கருவறையில் விழும்.
இம்மலை சங்க காலத்தில் மன்னர் பாரி வள்ளல் ஆட்சி செய்த பறம்பு நாட்டின் தலைமைப் பதியாக விளங்கியது. புலவர் பெருமான் கபிலர், வள்ளல் பாரியின் உள்ளம் கவர்ந்த உயர் பண்பாளர். அவர் பறம்பு மலையில் பாரியோடு உடனிருந்து பல காலம் வாழ்ந்ததால், பறம்புமலை தமிழ்ப்பதியாகவும் சிறந்தது. மேலும் சிவமணம் கமழும் தெய்வ திருப்பதியாகவும் திகழ்ந்தது. இப்படி தலைமைப் பதியாகவும், தமிழ்ப் பதியாகவும், தெய்வத்திருப்பதியாகவும் பெருமை பெற்ற பறம்பு மலை, 7-ம் நூற்றாண்டில் ‘திருக்கொடுங்குன்றம்’ என்று அழைக்கப்பட்டிருப்பதை
திருஞானசம்பந்தர் சுவாமிகளின் திருவாக்கால் அறிய முடிகிறது.
பாதாளம், பூமி, கயிலாயம் ஆகிய முப்பெரும் பகுதிகளாக சிந்தரித்து அமைக்கப்பெற்றுள்ளது இந்தத் திருக்கோயில். மலையின் அடிவாரத்தை பாதாளமாகவும், அதற்கு மேல் உயரப் பகுதியை பூமியாகவும், அதன் மேல் உச்சிப் பகுதியைக் கயிலாயமாகவும் கொண்டுள்ள ஆலய அமைப்பு வித்தியாசமானது. இம்மூன்று பகுதித் திருக்கோயில்களையும் உள்ளடக்கிக் கொண்டு, மிகப்பெரிய திருச்சுற்று மதில் எழுப்பப்பட்டுள்ளது.
மலையின் அடிவாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கித் தொடங்கும் பாதை தென்படும். ஆலயத்திற்குச் செல்லும் இந்த வழியில் மேற்கு முகமாகக் கட்டப்பட்டுள்ள துரைராஜா மண்டபத்தை அடைந்ததும், வடக்குப் பகுதி மதிலுக்கிடையே திருக்கோயிலின் பிரமாண்டமான பிரதானத் திருவாசல் உள்ளது. திருவாசலைக் கடந்ததும் திருக்கோயிலின் தெற்கு மதிலுக்கும், வடக்குப் பகுதி மலையின் அடிவாரப் பாறைக்கும் இடையே கல்தளம் கொண்ட பாதையின் கிழக்குக்கோடியில் மதுபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. இது ‘தேனாடி தீர்த்தம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதில் தீர்த்தமாடி கொடுங்குன்றநாதரைத் தரிசித்தால், வாய்க்காத மகப்பேறு வாய்க்கும் என்பதும், தீராத நோய்கள் உடனடியாக அகலும் என்பதும், செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து வரும் என்பதும் ஐதீகம்.
பாரிவேள், முல்லைக் கொடிக்குத் தேரளித்த காட்சியை திருக்கோயிலின் பூமிப் பகுதியில் சுதைச் சிற்பமாகத் திகழ வைத்திருப்பது பொருத்தமாகவும், பொலிவூட்டுவதாகவும் இருக்கிறது. அதற்கு மேற்கே பிரான்மலையில் பிரசித்தி பெற்ற பைரவர் திருக்கோயில் உருவாக்கம் கொண்டுள்ளது. தெற்கு முகமாக உள்ள பைரவர் சன்னிதியின் முன் மண்டபத்தில், மேற்கு தூணில் கிழக்கு முகமாகக் கருப்பர் சுவாமியும், கிழக்குத் தூணில் மேற்கு முகமாகச் சன்னாசிக் கருப்பர் சுவாமியும் பைரவ மூர்த்திக்கு முன்னோடிகள் போல் அமர்ந்துள்ளனர்.
பாறையைக் குடைந்து நீண்ட சதுர வடிவில் தூண்களே இல்லாது அமைக்கப்பட்டுள்ளது, கோயிலின் கருவறை. குடவரையைச் செதுக்கும்போது, பாறையிலேயே அம்மையும், அப்பனும் திருமணத் திருக்கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளனர். இதற்கு கற்பூர ஆரத்தி கிடையாது. திருக்கயிலாயத்தில் அம்மையப்பர் வீற்றிருந்து அருள்பாலிப்பது போலவே, திருக் கொடுங்குன்றத்திலும் திருமணக் கோலத்துடன் இருப்பதால், இத்திருத்தலம் ‘தென் கயிலாயம்’ எனப் பெயர்ப்பெற்று விளங்குகிறது. மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து நேரடியாக பிரான்மலைக்கு பேருந்து உண்டு. பிரான்மலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே கோயில்
இருக்கிறது.
தொகுப்பு: திலகவதி
The post ராஜகோபுர தரிசனம்! appeared first on Dinakaran.