“என்ன பரிகாரம்?”
பரிகாரம் என்பது அற்புதமான விஷயம். கடந்த கால வினைகளின் விளைவை நிகழ்காலத்தில் சரிசெய்வதற்கான ஒரு வாய்ப்புதான் பரிகாரம். பரிகாரம் என்பதற்கு பல பொருள்கள் உண்டு. செய்த செயலுக்குப் பிராயச்சித்தம் செய்வது, கேடு நீக்கிக் கொள்வது, செய்த செயல் விளைவை பாதிப்பில்லாமல் தடுத்துக் கொள்வது இவைகளெல்லாம் பரிகாரங்களில் வரும். பரிகாரம் என்பது ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறதா என்றால், சில இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், நடைமுறை வாழ்க்கையை அனுசரித்துத்தான் பரிகாரங்கள் சொல்ல வேண்டும். பரிகாரங்களின் தன்மையும் செய்யும் முறையும் காலங்கள் தோறும் மாறும். தசரதன் பிள்ளை வரம் வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் செய்ததாக ராமாயணத்தில் வருகின்றது. அதைப் போன்ற மிகப் பெரிய யாகங்களை இப்பொழுது செய்வதற்கான வசதியும் இல்லை முறையாகச் செய்து தருவதற்கான குருமார்களும் இல்லை.
இந்த யாகங்கள் குறித்து வேதத்தின் பூர்வ பாகமான கர்ம காண்டத்தில் விரிவாக மந்திரப் பிரயோகங்களோடு சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் இப்பொழுது நாம் சொல்லுகின்ற பரிகாரங்கள் வேறு அமைப்பில் உள்ளவை. இந்த பரிகாரங்களை ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள். இதை இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று சில ஜோதிடர்கள் நிர்ணயித்து வைத்திருப்பார்கள். ஆனால் விவரம் தெரிந்த ஜோதிடர்கள் இந்த பரிகாரங்களின் வெவ்வேறு விதங்களை நன்கு புரிந்து கொண்டு சொல்வார்கள்.
ஒரே தோஷத்திற்கு ஒரே விதமான பரிகாரம் என்பது கிடையாது.
சாலையில் ஒரு விபத்து நடக்கிறது. இருவர் வாகனங்களும் மோதிக் கொள்கின்றன. நடந்தது நடந்துவிட்டது இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும். இந்தத் தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும்.
இதற்கான பதில்தான் பரிகாரம் என்று வரும்.
1. இருவரும் சுமுகமாகப் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.
2. அல்லது பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் நஷ்ட ஈடு கொடுத்து சரி செய்து கொள்ளலாம்.
3. அல்லது அவருக்கு ஏற்பட்ட காயத்துக்கோ, வண்டிக்கு ஏற்பட்ட சேதத்துக்கோ அதை ஏற்படுத்தியவர் தம் செலவில் சரிசெய்து கொடுக்கலாம்.
4. அல்லது வழக்கு மன்றம் போகலாம்.
இப்படி கால தேச சூழ்நிலைகளுக்கு ஏற்ற பரிகாரம் அமையும்.
இந்த பரிகாரம் (அதாவது பிரச்னைக்கான தீர்வு) சிலருக்கு ஆயிரம் ரூபாயில் முடியும். சிலருக்கு 10,000 ரூபாயில் முடியும். ஒரு சிலருக்கு வழக்கு மன்றம் வரை போகும். ஜாதகத்திலும் இதே அணுகுமுறைதான். வினை (act) – விளைவு (effect) – தீர்வு (solution) ஜாதக தோஷங்களின் அளவை வைத்து பரிகாரங்கள் சொன்னாலும் அது ஒரே அமைப்பில் இருக்காது.
சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வெவ்வேறு நபர்கள் கொண்டு வந்த ஏறக்குறைய ஒரே மாதிரியான பிரச்னைக்கு மூன்று விதமான பரிகாரங்களைச் சொன்னேன். தோஷம் என்னவோ ஒரே மாதிரியான தோஷம்தான். ஆனால் அந்த பரிகாரம் ஆளுக்கு தகுந்தது போல் மாறியது.
1. ஒருவருக்கு சுதர்சன ஹோமம் செய்யச் சொன்னேன். அந்த சுதர்சனம் ஹோமம் செய்வதற்கு குறைந்தபட்சம் 10,000 ரூபாய் தேவைப்படும். அதைச் செலவு செய்வதற்குரிய ஆற்றல் அவருக்கு இருந்தது.
2. இன்னொருவருக்கு ஒருமுறை, ரங்கம் சென்று ஸ்ரீரங்கநாத பெருமாளையும், தாயாரையும், சுதர்சன மூர்த்தியையும், ஸ்ரீ ராமானுஜரையும் தரிசித்து வாருங்கள். அதோடு அங்கே காட்டழகிய சிங்கர் என்ற கோயில் இருக்கிறது அங்கே சென்று துளசி மாலையைக் கொடுத்து ஒரு அர்ச்சனையை செய்து வலம் வாருங்கள் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும் என்று சொன்னேன்.
3. மூன்றாவதாக ஒருவருக்கு ‘‘நீங்கள் வேறு ஒன்றும் செய்ய வேண்டாம். ஒரு சின்ன லட்சுமி நரசிம்மர் படத்தை பூஜை அறையில் வைத்து, மாலை பிரதோஷ வேளையில், ஒரு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி 45 நாட்கள் வணங்கி வாருங்கள். கொஞ்சம் பானகமோ, சர்க்கரை சேர்த்த பாலோ நிவேதனம் செய்து பருகி வாருங்கள் எல்லாம் சரியாகும் நீங்கள் நினைத்தது நிறைவேறும் என்று சொன்னேன்.
மூன்று பேருக்கும் இந்த பரிகாரங்கள் பலனளித்தன. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான தோஷங்கள்தான். ஆனால், பரிகாரங்கள் அவரவர் நிலைமைக்கும் மனநிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு சொல்லப்பட்டன. பரிகாரங்கள் என்பது எளிமையானதாக இருக்க வேண்டும். செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு முறை ஒரு அன்பருக்கு கண் பிரச்னை வந்தது. ஆபரேஷன் செய்ய வேண்டும். அப்படிச் செய்தாலும் பார்வை வருமா என்பது சந்தேகம்தான் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அவர் ஜாதகத்தில் நேத்திர ஸ்தானமும், ஒளி தரும் சூரியனும், நேத்திராதிபதியும் பாதிக்கப்பட்டிருந்தன. இருட்டுக்குக் காரணமான ராகு திசை நடந்து கொண்டிருந்தது. நான் சொன்னேன்;
“ஒருமுறை திருவெள்ளியங்குடி சென்று, உங்கள் பண வசதிற்கேற்ப தீபத்திற்கு நெய் தந்து, பெருமாளை வழிபட்டு வாருங்கள் சரியாகும்” என்றேன். ஒரு ஜோதிடர் என்னிடம் கேட்டார்;
“எந்த ஆதாரத்தில் இந்த பரிகாரம் சொன்னீர்கள்? ஏதாவது கிரந்தத்தில் இருக்கிறதா?” என்று கேட்டார்.
“கிரந்தத்தில் இருக்கிறதா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்த ஆலயம் அசுர சிற்பி மயன் கட்டிய ஆலயம். அவர் ஜாதகத்தில் அசுர கிரகமான ராகுவின் கிரகண தோஷம் இருந்தது. அதோடு திருமால் வாமன அவதாரம் எடுத்த சமயத்தில், மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டார். மன்னரும் தாரை வார்த்துக் கொடுக்க சம்மதித்தார். வந்திருப்பவர் திருமால் என்பதை உணர்ந்த சுக்கிராச்சாரியார், ஒரு வண்டாக உருவம் எடுத்து, தாரை வார்க்கும் செப்புக் குடத்தின் (கமண்டலம்) துவாரத்தை அடைத்துவிட்டார்.
சுக்கிராச்சாரியாரின் செயலை அறிந்த திருமால், ஒரு குச்சியை வைத்து துவாரத்தை குத்தும்போது, சுக்கிராச்சாரியார், ஒரு கண்ணை இழக்கிறார். ஒளியிழந்த கண்ணுடன், பல தலங்களுக்குச் சென்று வழிபட்டு, நிறைவாக இத்தல பெருமாளை தரிசித்து, மீண்டும் பார்வை பெற்றார் சுக்கிராச்சாரியார். இதனால் இத்தலம் வெள்ளியங்குடி (சுக்கிரன் – வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது.
சுக்கிராச்சாரிக்கு பார்வை கொடுத்த பெருமாள், இவருக்குக் கொடுக்க மாட்டாரா என்ற நம்பிக்கையில் சொன்னேன். அவர் “சரிதான்” என்று போனை வைத்துவிட்டார்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒவ்வொரு மாதிரியான கிரக அமைப்புக்களால் தோஷங்கள் ஏற்படும். எனவே, அதற்கான பரிகாரங்கள் மாறும். சொல்லும் பரிகாரம், கேட்பவர் மனதில் அவநம்பிக்கை தருமானால், அந்தப் பரிகாரம் எத்தனை செலவு செய்து நிறைவேற்றினாலும் பலன் தராது. பரிகாரம் என்பது வழிபாட்டின் ஒரு பகுதிதான்.
பிரச்னையை துணிவோடு எதிர்கொள்ளும் ஒரு நம்பிக்கையின் அல்லது நம்பிக்கையை அதிகப்படுத்தும் ஒரு நடவடிக்கைதான் பரிகாரம்.
எந்தப் பரிகாரம் வருகின்றவரின் மனதிலே நம்பிக்கையை ஏற்படுத்தி அவருக்கு மனோபலத்தையும், ஆத்ம பலத்தையும் தருகின்றதோ அதுதான் சொல்ல வேண்டிய பரிகாரம். அந்த பரிகாரம் யார் சொன்னாலும் நிச்சயம் பலன் தரும்.
The post சொல்ல வேண்டிய பரிகாரம் appeared first on Dinakaran.