டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: மூத்த திரைக்கலைஞர் ‘டெல்லி’ கணேஷ் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்து, தன்னுடைய அடையாளத்தை அழுத்தமாகப் பதித்தவர் டெல்லி கணேஷ். 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவரது நகைச்சுவைக் காட்சிகள் இன்றளவும் மக்களால் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் அளவுக்குச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவராக திகழ்ந்தார்.

வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரையிலும் டெல்லி கணேஷ் பல தொடர்களில் நடித்து முத்திரை பதித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தில் உருவான இளைஞன் திரைப்படத்திலும் டெல்லி கணேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைத்துறை வரலாற்றில் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் பல நகைச்சுவை, குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்தவரான அவரது மறைவு திரையுலகிற்குப் பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவு: தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ், உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது. தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது போன்ற விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார். இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா : விஜயகாந்துக்கு நல்ல நண்பர், அவருடன் அதிக திரைப்படங்களில் கூட நடித்திருக்கிறார். அவருக்கு புகழாரத்தை எப்பொழுதும் சூட்ட தவறியதில்லை. மிக நல்ல ஒரு நண்பரை இழந்திருக்கிறோம். அவருடைய இழப்பு அவரின் குடும்பத்திற்கு மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் பேரிழப்பாகும். நாடக நடிகர்களுக்கும், திரையுலகினருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

The post டெல்லி கணேஷ் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: