வந்தவாசி : வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி ஊராட்சியை இணைக்கும் முயற்சியை கைவிடக் கோரி பொதுமக்கள் கருப்புக் கொடியுடன் மறியல் போராட்டம் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். வந்தவாசி நகராட்சியுடன் பாதிரி அமையப்பட்டு மும்முனி கீழ் சாத்தமங்கலம், செம்பூர், சென்னாவரம் ஆகிய ஊராட்சிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பாதிரி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தினை நகராட்சியுடன் இணைக்க கூடாது.
நகராட்சியுடன் இணைந்தால் 100 நாள் வேலை திட்டம் மூலமாக கிடைக்கும் வருவாய் இழக்கும் நிலை ஏற்படும். மேலும் வீட்டு வரி உயர்வு ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து நேற்று தாலுகா அலுவலகம் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனர். மேலும் வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகள் மறியல் போராட்டம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனை அறிந்த வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் தலைமையிலான போலீசார் பாதிரி கிராமத்திலிருந்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் தடுத்தனர்.
அப்போது மறியல் போராட்டம் செய்ய முயன்றவர்களை எச்சரிக்கை செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்போது அப்பகுதியிலேயே கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து 3 குழுக்களாக ஊராட்சி மன்ற தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பொன்னுசாமியிடமும், நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளர் சோனியா விடமும், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடிஓ பரணிதரனிடமும் ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
The post பாதிரி ஊராட்சியை வந்தவாசி நகராட்சியுடன் இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் appeared first on Dinakaran.