கிருஷ்ணகிரி : ரூ.233.34 கோடி மதிப்பில் எண்ணேக்கோல் அணை கால்வாய் அமைக்கும் பணி 51 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொல் அணைக்கட்டில் இருந்து வலது மற்றும் இடது புறத்தில் இருந்து, தென்பெண்ணை ஆற்றில் வெள்ளக்காலங்களில் வரும் உபரிநீரை, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக ரூ.233.34 கோடி மதிப்பில் 73.32 கி.மீ துரத்திற்கு கால்வாய் மற்றும் தொட்டிப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கிருஷ்ணகிரி அணைக்கு மேல்பகுதியில் 16 கி.மீ. தொலைவில் எண்ணேகொல் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டின் வலது புறத்தில் சுமார் 50.65 கி.மீ., தொலைவிற்கும், இடதுபுறத்தில் 22.67 கி.மீ., தொலைவிற்கும் என மொத்தம் 73.32 கி.மீ., தொலைவிற்கு பிரதான கால்வாய்கள் மற்றும் தொட்டிப்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்திற்கு வலதுபுற கால்வாய்க்கு தேவையான 207.59 மில்லியன் கன அடியும் மற்றும் இடதுபுற கால்வாய்க்கு தேவையான 161 மில்லியன் கன அடியும் என மொத்தம் 368.59 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க ஏதுவாக கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எண்ணேகொல் அணைக்கட்டின் வலதுபுற கால்வாய், பெல்லம்பள்ளி, கூளியம், செம்படமுத்தூர், அகரம், சோக்காடி, பெல்லாரம்பள்ளி, கத்தேரி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, பன்னிஅள்ளி மற்றும் கரடிஅள்ளி ஆகிய கிராமங்களின் வழியாக, தர்மபுரி மாவட்டம் தும்பலஅள்ளி அணையை சென்றடைகிறது. இத்திட்டத்தில் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் அமைக்கும் பணி தற்போது 51 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 3,408 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேலும் இந்த திட்டம் செயல்படுத்தினால் 29,942.05 மெட்ரிக் டன் கூடுதல் உணவு உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி திருவண்ணமாலை பெண்ணையாறு வடிநில வட்டம் நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் தமிழ்செல்வன், நீர்வளத்துறை பொறியாளர்களுடன் குருபரப்பள்ளி, போலுப்பள்ளி, பெல்லம்பள்ளி, அகரம் மற்றும் கத்தேரி பகுதிகளில் கள ஆய்வு செய்தார். அப்போது, இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
தற்போது 51 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நில எடுப்பு பணிகளை விரைந்து முடித்து, இத்திட்டத்தினை உரிய நேரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில், மற்ற துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். இதனிடையே தற்போது இந்த பணி தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கால்வாய் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்கள் இல்லாத நிலையில், அவரது வாரிசுதார்களால் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
நிலம் தங்களுக்குத் தான் சொந்தம். கால்வாய் அமைக்க கையகப்படுத்தும் நிலத்திற்கான இழப்பீட்டு தொகையை தங்களிடம் தான் வழங்க வேண்டும் எனக்கூறி வருகின்றனர். ஆனால், நிலத்தின் பட்டா யார் பெயரில் உள்ளதோ, அவர்களுக்கு தான் இழப்பீடு வழங்க இயலும் என்ற நிலையில், தற்போது பிரச்னை பூதாகரமாக உருவெடுத்துள்ளது. இதனால், கால்வாய் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். எனவே, பிரச்னைக்கு விரைவில் தீர்வு கண்டு, கால்வாய் அமைக்கும் பணியினை விரைந்து முடித்திட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் எண்ணேகொல் கால்வாய் பணியில் தாமதம் appeared first on Dinakaran.