திருச்சி, நவ.10: திருச்சி கலையரங்கில் ‘போதைப்பொருட்கள் இல்லாத திருச்சி’ மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை வகித்து பேசியதாவது:
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் இறையன்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழ்நாடு முதல்வர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, மாநிலம் முழுவதும் போதை பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மத்தியில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போதை பொருட்கள் நடமாட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்கிடுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சாின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வார்டுகள், கிராமங்கள் தோறும், போதை பொருள் தொடர்பான துறை அலுவலர்களை கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ‘போதை இல்லா தமிழ்நாடு’ என்ற நிலையை உருவாக்கும் வகையில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு, விழிப்புணர்வு தொடர்பான குறும்படங்கள் திரையிடப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று திருச்சி கலையரங்கத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களுக்காக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் முனைவா் இறையன்பு பேசுகையில், மாணவா்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் முற்றிழுமாக ஒழிக்கப்பட வேண்டும். அறியாத சிறு வயதினரிடையே, இப்பழக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். போதைப் பழக்கத்தால் ஒருவர் பாதிக்கப்படும் போது, அவர் மட்டுமின்றி அவருடைய குடும்பம் உட்பட, சமுதாயமும் பாதிக்கப்படுகிறது. போதை பழக்கத்திற்கு அடிமையான ஒருவா் தன் பொன்னான காலம், உடல் நலம், செல்வம் ஆகியவற்றுடன் தன் வாழ்நாளையே இழக்க நேரிடுகிறது.
நேரம் மனிதனுக்கு மிக முக்கியமானது. அதை நாம் அனைவரும் மிகச்சாியாகவும், பயனுள்ள வகையிலும் பயன்படுத்த வேண்டும். விரையமான நேரத்தை திரும்பபெற இயலாது. எனவே நீங்கள் நல்லொழுக்கத்தை பேணுபவா்களாக திகழ்வதோடு, போதை பழக்கத்திற்கு ஆளானவா்களை மீட்டெடுக்கவும் உதவிட வேண்டும். போதை உள்ளிட்ட தீய பழக்கம் உடைவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் போதை பொருள் விற்பது தொடா்பாக தொிய வந்தால், அதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் தகவல் அளிக்க வேண்டும். நீங்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும்.
நீங்கள் ஒவ்வொருவரும், போதை பழக்கத்தின் தீமை குறித்து தொிவிப்பதன் மூலம் 20 நபா்களையாவது போதை பழக்கத்தில் இருந்து மீட்டு, அரசின் நோக்கமான 100% போதை பொருளில்லா தமிழ்நாட்டை உருவாக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வகையில் மாணவர்கள் செயல்பட துவங்கினால் போதை பொருளில்லா திருச்சி மாவட்டத்தை உருவாக்க முடியும் என மாணவா்கள் மற்றும் மாணவ தூதுவா்களுக்கு விழிப்புணரவு ஏற்படுத்த வேண்டும் என்றார். கருத்தரங்கில் கலந்து கொண்ட பள்ளி, கல்லூரி மாணவ தூதுவா்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணா்வு வில்லைகளை தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளா் இறையன்பு அணிவித்தார்.
தொடா்ந்து, போதை பழக்கத்தினால் ஏற்படும் நோய்கள் குறித்து டாக்டர் கோவிந்தராஜ், போதை பொருள் பயன்பாடு ஒரு அறிமுகம் என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் டாக்டர் பாரதி, வளா்இளம் பருவத்தினாின் போதை பொருட்கள் பயன்பாடு-சமூக உளவியல் சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்து உதவி பேராசிரியா் டாக்டர் கார்த்திக்கேயன், போதை பொருள் தடுப்பு மற்றும் குற்றவியல் நடவடிக்கை என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற டிஎஸ்பி ராஜா ஆகியோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவ தூதுவர்களிடம் உரையாற்றி கலந்துரையாடினர். கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைத்து மாணவா்கள் மற்றும் மாணவ தூதுவா்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, டிஆர்ஓ ராஜலட்சுமி, திருச்சி வருவாய் கோட்டாட்சியா் அருள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி கமிஷனர் உதயகுமார், பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவ தூதுவா்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
The post போலீசாருக்கு தகவல் கொடுங்கள் appeared first on Dinakaran.