வரும் 20ம் தேதி முதல் 28 வரை கோவாவில் 55-வது சர்வதேச திரைப்பட விழா: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

சென்னை: ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 55-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த திரைப்பட விழா ஏற்பாடுகள் மற்றும் திட்டமிடல் குறித்த கலந்துரையாடல் கூட்டம், சென்னையில் நேற்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது நிருபர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியாவில் இருந்து பல மொழி நடிகர்-நடிகைகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு முதல் 100 கலைஞர்களை கவுரவிக்க இருக்கிறோம். அதேபோல அடுத்த ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை 5 நாட்கள் ‘வேவ்ஸ்’ விழா டெல்லியில் நடைபெறுகிறது. இதுவரை நடந்த விழாக்களில் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மாதுரி தீட்சித் உள்ளிட்ட பிரபலங்கள் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான பிரபலம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.

தென்னிந்திய படங்களுக்கு தணிக்கை கோரி மும்பைக்கு செல்லும் நிலை உள்ளதால், தணிக்கை வாரிய அலுவலகம் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் நிறுவப்பட வேண்டும். ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் படங்களுக்கு கடுமையான தணிக்கை வரைமுறைகள் அமல்படுத்திட வேண்டும் என்று கூட்டத்தில் திரைப்பட தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வலியுறுத்தினர்.

எந்தவிதத்திலும் நாட்டின் கவுரவம், பண்பாடு, கலாசாரத்தை கேள்விக்குறியாக்கும் கருத்துகளை அனுமதிக்க முடியாது. அதேபோல ‘அமரன்’ போன்ற நாட்டுப்பற்று கொண்ட படங்கள் அதிகம் வெளிவர வேண்டும். ஜம்மு-காஷ்மீர் நிலைமையை, அங்கு இருக்கும் சூழலைத்தான் அப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

The post வரும் 20ம் தேதி முதல் 28 வரை கோவாவில் 55-வது சர்வதேச திரைப்பட விழா: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: