இந்நிலையில் மதுரை திருநகர் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில், முன்ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், நடிகை கஸ்தூரி பேசிய வீடியோ காட்சி நீதிபதி முன்பு போட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘நடிகை கஸ்தூரி பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழ்நாட்டில் இருந்து தெலுங்கு மக்களை எப்படி பிரித்து பார்க்க முடியும். தெலுங்கர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் அல்ல.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியினர் தான். தெலுங்கு மக்கள் வடசென்னையில் அதிகளவில் வசிக்கின்றனர். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள் தான்’’ என்றார். அரசு தரப்பில், ‘‘குறிப்பிட்ட சமூக பெண்களின் மாண்பை குலைக்கும் வகையில் கஸ்தூரி பேசியுள்ளார். அவரது பேச்சு சாதிய மோதல்களுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. இது தெலுங்கு சமூக மக்களை மிகவும் புண்படுத்தியுள்ளது. வருத்தம் தெரிவித்தால் சரியாகி விடாது. நடிகை கஸ்தூரி மீது இதுவரை 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
அவர் தெரிந்தே, வேண்டுமென்று திட்டமிட்டே பேசியுள்ளார். இரு மொழி பேசும் மாநிலங்கள் இடையே பிரச்னை உருவாக்கும் வகையில் திட்டமிட்டே பேசியுள்ளார். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது’’ என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘‘குறிப்பிட்ட சமூகத்தினரைக் கொண்டு மட்டும் 3ம் தேதி கூட்டம் நடைபெறவில்லை. மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் வேண்டும்’’ என கூறப்பட்டது. இதையடுத்து விசாரணை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி, ‘‘கற்றவர், சமூக ஆர்வலர், அரசியல்வாதி என கூறிக்கொள்ளும் கஸ்தூரி எப்படி, இப்படி பேச முடியும். தவறை உணர்ந்து அவர் மன்னிப்பு கேட்கவில்லை. தான் கூறியதை நியாயப்படுத்தவே கஸ்தூரி விரும்புவதாக அவரது விளக்கம் உள்ளது. அந்தப்புரத்துக்காக வந்தவர்கள் தெலுங்கு மக்கள் என குறிப்பிட்டு ஏன் கூறுகிறார்? அதற்கு என்ன அவசியம்? தெலுங்கு மக்கள் குறித்த அவரது பேச்சு தேவையற்றது. அவரது பேச்சு ஆபத்தை விளைவிக்கும்’’ என்றார்.
அப்போது கஸ்தூரி தரப்பில், ‘‘தெலுங்கு மக்கள் அனைவரையும் குறிப்பிட்டு அத்தகைய கருத்து தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட தனிநபர்கள் குறித்தே கருத்தை தெரிவித்துள்ளார். ஆனால் மன்னிப்பு கேட்டப் பிறகும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை’’ என வாதிடப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘அவர் பேசியது தேவையற்றது. அந்த வீடியோக்களை பார்க்கையில் அது தேவையற்ற விளைவை ஏற்படுத்தும் தானே? மன்னிப்பு கேட்கும்போது அதை உணர்ந்ததாக தெரியவில்லை. கூறியதை நியாயப்படுத்த விரும்புவதாக உள்ளது’’ என்றார்.
கஸ்தூரி தரப்பில், ‘‘குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிக்கு சேவை செய்ய வந்தவர்கள் என்ற அடிப்படையிலேயே சொல்லப்பட்டது. தெலுங்கு பேசும் பெண்களின் மதிப்பை குலைக்கும் வகையில் பேசவில்லை. புகாரில் மனுதாரரின் பேச்சு தவறாக காண்பிக்கப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டது. அரசு தரப்பில், ‘‘மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அண்டை மாநிலங்களுக்கிடையே பிரச்னை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேசியுள்ளார்.
தெலுங்கு பேசும் நட்பு மாநிலத்தில் உள்ள திருப்பதி கோயிலுக்கு 40 சதவீத தமிழக பக்தர்கள் சென்று வரும் சூழலில், மனுதாரரின் பேச்சு சரியானது அல்ல. அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களின் சிந்தனை ஒன்றே. இது போன்ற சம்பவங்களை இப்படியே விட்டால், மற்றவர்களை ஊக்குவிப்பதைப் போல் அமைந்துவிடும். ஆகவே, அவருக்கு முன் ஜாமீன் வழங்கக்கூடாது’’ என கூறப்பட்டது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மனுவின் மீது நாளை (14ம் தேதி) தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* தெலுங்கு மக்கள் என குறிப்பிட்டு ஏன் கூறுகிறார்? அதற்கு என்ன அவசியம்? தெலுங்கு மக்கள் குறித்த அவரது பேச்சு தேவையற்றது.
The post தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை கஸ்தூரி பேச்சு சமூகத்தில் ஆபத்தை விளைவிக்கும்: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறுக்கு ஐகோர்ட் கிளை நீதிபதி கடும் கண்டனம் appeared first on Dinakaran.