* ரூ.1500 கோடி சொத்தை அபகரிக்க திட்டம் என கூறிய ஸ்ரீகார்ய பொறுப்பாளர் திடீர் நீக்கம்
திருவிடைமருதூர்: 47 வயது பெண்ணை திருமணம் செய்த ஆதீனத்தை வெளியேற்றி மடத்தை மக்கள் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரூ.1500 கோடி சொத்தை அபகரிக்கவே இந்த திருமணம் நடந்து உள்ளதாக சந்தேகம் எழுப்பிய ஸ்ரீகார்ய பொறுப்பாளர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்றான சூரியனார்கோயில் ஆதீனத்தின் 28வது மடாதிபதியான மகாலிங்க சுவாமிகள் (54), கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஹேமா ஸ்ரீ என்ற 47வயதான பக்தையை கடந்த மாதம் 10ம்தேதி பெங்களூருவில் பதிவு திருமணம் செய்தார்.
துறவறம் வந்த பிறகு இல்லறம் ஏற்க கூடாது என்பது மரபு. இதற்கு மாறாக ஆதீனம் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள், ஆதீனம் மகாலிங்க சுவாமிகளிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்றனர். இதற்கிடையே திருமண பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சூரியனார்கோயில் ஸ்ரீகார்ய பொறுப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாத சுவாமிகள், ‘ஆதீனத்தின் சம்பிரதாயத்தை மீறி செயல்பட்டுள்ள மகாலிங்க சுவாமிகள், ஆதீன குருமகா சந்நிதானம் பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டார்.
ரூ.1500 கோடி சொத்தை அபகரிக்கவே இந்த திருமணம் நடந்ததாக சந்தேகம் எழுந்து உள்ளது. ஆதீனத்தின் மாண்பை காக்கும் வகையில் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்கள் ஒருமித்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். மகாலிங்க சுவாமிகள் பதவியில் இருந்து விலக வலியுறுத்தி சமூக வலைதளங்களில் உலா வந்த போஸ்டர் நேற்றுமுன்தினம் ஆதீனம் மடத்தின் வாசல் மற்றும் ஆடுதுறை, கும்பகோணம் பகுதிகளில் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஆதீனத்தின் ஸ்ரீகார்ய பொறுப்பிலிருந்து சுவாமிநாத சுவாமிகள் நீக்கப்படுவதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, ஆதீன பேஸ்புக்கிலும் அந்த அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை வெளியிடப்பட்டது. ஆதீனத்தில் ஸ்ரீகார்ய பொறுப்பில் உள்ள மற்ற 6 நபர்களில் ஒருவரை விரைவில் இளைய ஆதீனமாக நியமித்து இப்பிரச்னைக்கு சுமுக தீர்வு காண ஆதீனம் மகாலிங்க சுவாமிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இத குறித்து சுவாமிநாத சுவாமிகள் கூறுகையில், ‘மகாலிங்க சுவாமிகள், ஆதீனமாக நீடிக்க கூடாது. பதிவு திருமணம் செய்து கொண்ட ஹேமா ஸ்ரீ பக்தையின் 13 வயது மகனை வரும் காலங்களில் ஆதீனத்தின் வாரிசாக அறிவிக்க திட்டமிட்டு தான் இப்படி ஆதீனம் நடந்து கொண்டுள்ளார்’ என்றார். இந்நிலையில், இந்துமத கோட்பாட்டை மீறி திருமணம் ஆனவர்கள் ஆதீனமாக இருக்க கூடாது எனக்கூறி கிராம மக்கள் மகாலிங்க சுவாமிகளை மடத்தை விட்டு வெளியேற்றியதோடு, மடத்தை நேற்று மாலை இழுத்து பூட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மகாலிங்க சுவாமிகளை பத்திரமாக மீட்டு சூரியனார் கோயில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமர வைத்தனர். இந்நிலையில் திருவாவடுதுறை ஆதீனம், இந்த மடத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு சூரியனார் கோயில் ஆதினத்திடம் வலியுறுத்தினார்.
ஆனால், நான் இந்த மடத்தை அவரிடம் ஒப்படைக்க முடியாது என கூறி இந்து சமய அறநிலையத்துறையிடம் அவர் எழுதிக் கொடுத்துள்ளார். இதையடுத்து கதிராமங்கலம் அறநிலையத்துறை ஆய்வாளர் அருணா முன்னிலையில் பட்டீஸ்வரம் கோயில் செயல் அலுவலர் ஆறுமுகத்திடம் சூரியனார் கோயில் மடம், சொத்தை ஒப்படைத்து தனது உடமைகளை எடுத்து சென்றார். சூரியனார் கோயில் மடத்தின் முன்பாக அப்பகுதி கிராம மக்கள் குவிந்துள்ளதால் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.
The post 47 வயது பெண்ணுடன் திருமணம் செய்த ஆதீனத்தை வெளியேற்றி மடத்தை பூட்டிய மக்கள் appeared first on Dinakaran.