சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான இலவச பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகள், சர்வதேச முனையத்திற்கு செல்வதற்கும், சர்வதேச விமான பயணிகள் உள்நாட்டு முனையத்திற்கு செல்வதற்கும், விமான நிலைய வளாகத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்வதற்கும் இலவச பேட்டரி வாகனங்களை இந்திய விமான நிலைய ஆணையம் இயக்கி வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம், உள்நாட்டு முனைய வருகை பகுதி அருகே இருந்த பிக்கப் பாயிண்ட், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு மாற்றப்பட்டது.

இதனால் பயணிகள் நடந்து செல்வதை தவிர்ப்பதற்காக உள்நாட்டு முனைய வருகை பகுதியில் இருந்து கார் பார்க்கிங் பகுதிக்கும் செல்ல 9 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவைகள் போதுமானதாக இல்லை. அதிலும் பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களில் இருந்து, பிக்கப் பாயிண்ட் பகுதிக்கு, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல் உடமைகளுடன் பயணிகள் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் கூடுதல் பேட்டரி வாகனங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்திய விமான நிலைய ஆணையம், பயணிகளின் வசதிக்காக மேலும் 13 பேட்டரி வாகனங்களை வாங்கியுள்ளது. இவற்றுடன் மொத்தமாக 22 பேட்டரி வாகனங்கள் நேற்று முதல் இயங்க தொடங்கியுள்ளன.

இது யணிகளுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். ஆனாலும் தற்போது பயணிகள் கூட்டம் அதிகளவில் இருப்பதால், பேட்டரி வாகனங்களில் ஏறுவதற்கு பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்படி காத்திருந்து ஏறி, மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றாலும், அங்கிருந்து 2வது, 3வது தளத்திற்கு உடமைகளுடன் லிப்டில் ஏறி, மிகுந்த சிரமப்பட்டு பிக்கப் பாய்ண்டிற்கு செல்லும் நிலை உள்ளது. அதனால் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் பிக்கப் பாய்ண்ட் இருந்ததை போல் பழைய இடத்திலேயே பிக்கப் பாய்ண்ட் மாற்றப்படுவதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும் என்று பயணிகள் தரப்பில் கூறுகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கான இலவச பேட்டரி வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: