வாலாஜா அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்காமல் ₹27.27 லட்சம் நிதியை விடுவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்கு: விஜிலென்ஸ் போலீசார் விசாரணை

வேலூர்: வாலாஜா அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்காமல் ₹27.27 லட்சம் நிதியை விடுவித்த முன்னாள் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு மருத்துவமனையில் கடந்த 2017-2018ம் ஆண்டு லேப், ஐசியூ, டயாசிலிஸ், லிப்ட் வசதியுடன் கூடிய புதிய வெளிநோயாளிகள் பிளாக் கட்டுவதற்காக ₹5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கட்டுமானப்பணிகளை ஒப்பந்ததாரர் வாலாஜாவை சேர்ந்த செந்தில்குமார் மேற்கொண்டார்.

மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து. ஆனால் லிப்ட் அமைக்கவில்லை. அப்போது பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியளர்கள் முரளிதரன், செந்தில்குமார், அப்போதைய உதவி ெசயற்பொறியாளர் தேவன், இளநிலை பொறியாளர் ராஜாமணி ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம்தேதி லிப்ட் வாங்குவதற்கு ₹20 லட்சத்து 45 ஆயிரத்து 625 நிதியை விடுவித்துள்ளனர். இதையடுத்து, லிப்ட் அமைக்கும் இறுதிகட்ட பணிக்காக 2ம் கட்டமாக ₹6 லட்சத்து 81 ஆயிரத்து 875 நிதி ஒப்பந்ததாரருக்கு விடுவித்துள்ளனர். மொத்தம் ₹27 லட்சத்து 27 ஆயிரத்து 500 நிதி விடுவித்தும் லிப்ட் அமைக்கவில்லை.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதன்பிறகு கடந்த 2022ம் ஆண்டு லிப்ட் அமைப்பதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டனர். பின்னர், மே, ஜூன் மாதத்தில் லிப்ட் அமைப்பதற்கான பொருட்கள் வந்த பிறகு டிசம்பர் 2022ம் ஆண்டு நிறைவுபெற்றது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம்தேதி லிப்ட் மருத்துவமனை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். லிப்ட் அமைக்காமல் நிதி விடுவிக்கப்பட்டதாக வேலூர் விஜிலென்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டிஎஸ்பி சங்கர், விசாரணை தொடங்கினார்.

விசாரணையில், லிப்ட் அமைக்காமல் 2 கட்டமாக ₹27 லட்சத்து 27 ஆயிரத்து 500ஐ முறைகேடாக நிதி விடுவித்து தெரியவந்தது. இதையடுத்து டிஎஸ்பி சங்கர் புகாரில் பொதுப்பணித்துறை முன்னாள் செயற்பொறியளர்கள் முரளிதரன், செந்தில்குமார், தற்போது பொதுப்பணித்துறையில் அதிகாரிகளாக உள்ள தேவன், ராஜாமணி மற்றும் ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஆகிய 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் செயற்பொறியாளர் செந்தில்குமாரின் பணி ஓய்வை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வாலாஜா அரசு மருத்துவமனையில் லிப்ட் அமைக்காமல் ₹27.27 லட்சம் நிதியை விடுவித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்கு: விஜிலென்ஸ் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: