பாம்பன் சாலை பாலத்தின் தூண் அடித்தளம் சேதம்: சுற்றுலாப்பயணிகள் பீதி

ராமேஸ்வரம்: பாம்பன் சாலைப்பாலத்தின் தூண் அடித்தளத்தில் சேதமடைந்துள்ளது. இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்ததால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய கடல் பாலங்களில் ஒன்றான பாம்பன் சாலைப்பாலம் ராமேஸ்வரத்துடன் பாம்பன் தீவை இணைக்கிறது. கடந்த 1988ல் திறக்கப்பட்ட இப்பாலத்தில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலைப்பாலத்தில் அடிக்கடி சேதம் ஏற்பட்டு வாகன ஒட்டிகளை அச்சத்திற்கு ஆளாக்கும் நிலை தொடர்ந்து நிலவுகிறது. பல ஆண்டுகளாக பாம்பன் சாலை பாலத்தில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து கிடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை பாலம் நடுவே இணைப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள இரும்பு பிளேட் சேதமடைந்து சரி செய்யப்பட்டது. பாலத்தில் ஆங்காங்கே குண்டும் குழியுமாய் கிடப்பதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக பாம்பன் பாக் ஜலசந்தி கடல் வழக்கத்துக்கு மாறாக கடல் பெருக்கு ஏற்பட்டு காணப்படுகிறது. பாம்பன் பகுதியில் இருந்து சாலை பாலம் துவங்கும் 5வது தூணின் கான்கிரீட் அடித்தளத்தின் ஒரு பக்கத்தில் மேல்கலவை உடைந்து காணப்பட்டது. கான்கிரீட் இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேதமான இடத்தில் தொடர்ந்து கடல் அலைகள் அடிப்பதால் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து மேலும் சேதமடைந்து வருகிறது. இதனால் தூணின் கான்கிரீட் அடித்தளம் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. இதனை உடனே சரி செய்ய வலியுறுத்தி கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாம்பன் சாலைப்பாலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை முழுமையாக வண்ணம் பூசி பராமரிப்பு செய்யப்படுகிறது. அப்பணியின்போது பாலத்தில் உள்ள கான்கிரீட் சேதங்களும் சரி செய்யப்படும். கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு பாலத்திற்கு பெயின்ட் பராமரிப்பு பணி நடைபெற்றது. அப்போது பாலத்தின் நடுவே இருந்த கான்கிரீட் சேதங்கள் சரி செய்யப்பட்டது. தற்போது திடீரென தூணில் அடித்தளப் பகுதியில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரி செய்ய மும்பையில் இருந்து கட்டுமான குழுவினர் வர உள்ளனர். சில தினங்களில் முறையாக சரி செய்யப்படும்’’ என்றனர்.

The post பாம்பன் சாலை பாலத்தின் தூண் அடித்தளம் சேதம்: சுற்றுலாப்பயணிகள் பீதி appeared first on Dinakaran.

Related Stories: