அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பு கடி ‘அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக’ அறிவிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பு கடியை அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939-ன் கீழ், தமிழ்நாடு அரசு பாம்பு கடியை “அறிவிக்கை செய்யக்கூடிய நோயாக” தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்ட பிறகு, இதற்கான அறிவிப்பு கடந்த 6ம் தேதி தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறி இருப்பதாவது: பாம்பு கடி விஷம் என்பது உயிருக்கு ஆபத்தான ஒரு தீவிர மருத்துவ நிலை. இது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு தடுக்கக்கூடிய பொது சுகாதார நிலை. உலக சுகாதார அமைப்பு பாம்பு கடியால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குறைபாடுகளை கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பாம்பு கடி விஷத்தை தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டம் ஒரு சுகாதார அணுகுமுறை மூலம் 2030ம் ஆண்டுக்குள் பாம்பு கடி இறப்புகளை பாதியாக குறைப்பதற்கான வரைபடத்தை உருவாக்கி உள்ளது. பாம்பு கடியை ‘அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக’ மாற்றுவதன் மூலம், தரவு சேகரிப்பு, மருத்துவ உட்கட்டமைப்பு மற்றும் பாம்பு கடியால் இறப்பதை தடுப்பதற்கான விஷமுறிவு மருந்து வழங்குவதன் மூலம் சிகிச்சை மேம்படுத்தப்படும்.

இதுவரை பாம்பு கடி மற்றும் பாம்பு கடியால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கையிலும், IHIP – IDSP தரவுகளின் எண்ணிக்கையிலும் வேறுபாடு உள்ளது. பாம்பு கடி பற்றிய அறிவிப்பு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு தரவை தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகிறது. இது, தமிழ்நாட்டில் பாம்பு கடிக்கான விரிவான தடுப்பு மற்றும் சிகிச்சை உத்திகளுக்கு பயன்படுத்தக்கூடிய சிறந்த தரவு சேகரிப்புக்கு வழிவகுக்கும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post அனைத்து மருத்துவமனைகளும் அரசுக்கு தெரிவிக்கும் வகையில் பாம்பு கடி ‘அறிவிக்கை செய்யக் கூடிய நோயாக’ அறிவிப்பு: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: