வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்: கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் 13ம் தேதி வரையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை மூலம் குறிப்பிடத்தகுந்த அளவில் மழை பெய்தது. அதன் பிறகு உருவான டானா புயல் ஓடிசா- மேற்கு வங்கம் இடையே கரையைக் கடந்ததால் தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

டானா புயலுக்கு பிறகு அக்டோபர் மாதத்தில் வேறு பிற புயல்கள் ஏதும் உருவாகாமல் போனதால், தமிழகத்தில் அக்டோபர் மாதம் மழையின்றி கடந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல கீழ் அடுக்கில் ஒரு காற்று சுழற்சி உருவானது. அது வட மேற்கு திசையில் நகர்ந்து தற்போது தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வந்து நிலை கொண்டுள்ளது.

மேலும், அந்த காற்று சுழற்சி மேற்கு திசையில் மெல்ல நகரத் தொடங்கியுள்ளதால் தமிழக கடலோரப் பகுதிகளில் சென்னை முதல் ராமநாதபுரம் வரையில் ஓரிரு இடங்களில் கனமழையும், பிற இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யத் தொடங்கியுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. அதன் காரணமாக அந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.

நேற்றைய நிலவரப்படி அந்த வளி மண்டல கீழடுக்கு சுழற்சி தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் வரை பரவி நிலை கொண்டது. அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும்.

அதன் தொடர்ச்சியாக 9ம் தேதி முதல் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராமநாதபுரம், விழுப்புரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, மதுரை, மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். அதனால் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் நேற்று, அனேக இடங்களில் மழை பெய்தது. புறநகர் பகுதிகளான தாம்பரம், பூந்தமல்லி, ஆவடி அம்பத்தூர், மணலி, செங்குன்றம், திருவொற்றியூர், திருவான்மியூர், வேளச்சேரி, மாமல்ல புரம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ஓரிரு இடத்தில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்தது. அதே நிலை இன்றும் நீடிக்கும். இந்நிலையில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகத்தில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று வீசும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

The post வளி மண்டல கீழடுக்கு சுழற்சி எதிரொலி தமிழகத்தில் 6 நாட்கள் கனமழை கொட்டும்: கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.

Related Stories: