*தூர் வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் 42 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சனத்குமார் நதி, தனது அடையாளத்தை இழந்து சாக்கடை ஆறாக காட்சியளிக்கிறது. சனத்குமார் நதியின் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் துணை நதிகளில் முக்கியமானது சனத்குமார் நதி. இந்த நதியின் கால்வாய்க்கு, வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால்பள்ளம் வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தது.
மலைப்பகுதி அடிவாரத்தில் இருந்து வரும் நீர் பெரியஏரி, அதியமான்கோட்டை ஏரி, மாதேமங்கலம் ஏரி, ஏமக்குட்டியூர் வழியாக இலக்கியம்பட்டி ஏரிக்கு வருகிறது. தர்மபுரி நகரம், அன்னசாகரம் வழியாக கம்பைநல்லூர் சென்று இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. கடந்த 1970ம் ஆண்டுகளில், சனத்குமார் நதியில் நல்ல தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. வழிநெடுக பல்வேறு ஏரிகளுக்கு இந்த தண்ணீர் கிடைத்தது. அந்த ஏரிகளை சுற்றியுள்ள கிணறுகளும் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருந்தது. இதனால் ஆண்டு முழுவதும் சனத்குமார் ஆற்றுப்படுகையில் விவசாயிகள் நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டனர்.
பருவநிலை மாற்றத்தால், தர்மபுரி மாவட்டத்தில் மழையளவு குறைந்தது. மேலும், நதியின் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது சாக்கடை கழிவுநீர் ஓடும் பகுதியாக, கால்வாய் மாறி விட்டது. பல இடங்களில் கால்வாய் பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கால்வாய் இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு குறுகியும், புதர் மண்டியும் காணப்படுகிறது. ஏமகுட்டியூர், ராமன்நகர், பாரதிபுரம், அன்னசாகரம், குப்பாண்டி தெரு, காமாட்சியம்மன் தெரு, மதிகோன் பாளையம், கிருஷ்ணாபுரம், கம்பைநல்லூர் வழியாக இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றில், இந்த நதியின் கால்வாயில் கழிவுநீர் தேக்கம் அடைந்து கலக்கிறது.
குறிப்பாக, தர்மபுரி நகர பகுதியில், சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் சாக்கடை கால்வாய் தேங்கி நிற்கிறது. குப்பை கொட்டும் இடமாக சனத்குமார் நதியின் கால்வாய் மாறியுள்ளது. பதிகால்பள்ளம் வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியில், தண்ணீர் வரும் கால்வாய் முழுவதும் கட்டிடம் எழுப்பப்பட்டு விட்டது. சனத்குமார நதியில் அமைக்கப்பட்டிருந்த வண்ணான் படித்துறை முழுவதும் அழிக்கப்பட்டு விட்டது. வத்தல்மலை நீர்ப்பிடிப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, தூர்வாராமல் கால்வாய் இருக்கும் இடமே தெரியாத வகையில் செடி, கொடிகள் உள்ளன. கால்வாயில் கழிவுநீர் ஆண்டுக்கணக்கில் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. மண்வளமும் கெட்டு விட்டது.
கால்வாய் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு தண்ணீரில் சாக்கடை வாசனை வருகிறது. இதனால் அந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, சனத்குமார் நதியை தூர்வார, ₹50 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தற்போது மீண்டும் திட்ட மதிப்பீடு ₹62 கோடியாக தயாரித்து, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதுகுறித்து சனத்குமார் நதியின் கால்வாய் பாதுகாப்பு சங்க தலைவர் கந்தசாமி மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘தர்மபுரி நகரின் வழியாக, கம்பைநல்லூர் தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் சனத்குமார் நதி, புதர்மண்டி தனது அடையாளத்தை இழந்து சாக்கடை ஆறாக காட்சி அளிக்கிறது. வத்தல்மலை அடிவாரத்தில் தொடங்கி கம்பைநல்லூர் தென்பெண்ணை ஆறு இணையும் பகுதி வரை, சுமார் 43 கி.மீ., தூரம் சனத்குமார் நதியின் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதியாக உள்ளது. எனவே, உடனடியாக நிதியை ஒதுக்கி, சனத்குமார் நதியின் கால்வாயை தூர்வார வேண்டும்,’ என்றனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ₹62 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு கிடைத்தவுடன் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்,’ என்றனர்.
* தர்மபுரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் துணை நதிகளில் முக்கியமானது சனத்குமார் நதி. இந்த நதியின் கால்வாய்க்கு, வத்தல்மலை அடிவாரம் மற்றும் பதிகால்பள்ளம் வனப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தது.
* பருவநிலை மாற்றத்தால், தர்மபுரி மாவட்டத்தில் மழையளவு குறைந்தது. மேலும், நதியின் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை. தற்போது சாக்கடை கழிவுநீர் ஓடும் பகுதியாக, கால்வாய் மாறி விட்டது.
The post அடையாளத்தை இழந்து சாக்கடையாக காட்சியளிக்கும் சனத்குமார் நதி கால்வாய் appeared first on Dinakaran.