வேலூர் : வேலூரில் நேற்று நடந்த குறைதீர்வு கூட்டத்தின்போது, கலெக்டரிடம் மனு அளித்த மாணவ, மாணவிகள், எங்கள் கிராமத்திற்கு பஸ் சரிவர இயக்காததால் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே பஸ்சை தினமும் இயக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், வேலூர் அடுத்த நாயக்கனேரி, குளவிமேடு, வாணியங்குளம், பள்ளஇடையம்பட்டி கிராமங்களை சேர்ந்த சீருடையுடன் வந்த மாணவ, மாணவிகள் அளித்த மனுவில், நாயக்கனேரி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
எங்கள் கிராமத்தைச் சுற்றி குளவிமேடு, வாணியங்குளம், பள்ளஇடையம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. வேலூரில் இருந்து ஓட்டேரி வழியாக நாயக்கனேரிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த பஸ் தற்போது சரியாக வருவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் நாங்கள், வேலைக்கும், விவசாய பணிக்கு செல்பவர்கள் யாரும் உரிய இடத்திற்கு, உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம். இதனால் எங்களுக்கான டவுன் பஸ்சை சரியான நேரத்தில் தினமும் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
காட்பாடி உழவர் சந்தையை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், உழவர் சந்தையில் பைக்குகள், பொருட்கள் அடிக்கடி திருட்டு போகிறது. இதனை தடுக்க உழவர் சந்தையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.காட்பாடி உள்ளிப்புதூரை சேர்ந்த கிராம மக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆவலாக உள்ளனர். ஆனால் அவர்கள் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் இல்லை. எனவே எங்கள் கிராமத்தில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.
பேரணாம்பட்டு அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், வெளியூர்களில் இருந்து வந்து பேரணாம்பட்டு பஜார் வீதிகளில் நடைபாதையில் கடை வைத்து பலர் வியாபாரம் செய்கின்றனர். கடைகளில் வியாபாரம் செய்யும் நாங்கள் கடை வாடகை மற்றும் ஜிஎஸ்டி வரி, சொத்துவரி, தொழில்வரி உள்ளிட்ட வரிகளை கட்டிவிட்டு வியாபாரம் செய்து வருகிறோம்.
நடைபாதை கடைகளால் எங்கள் வியாபாரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே, வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி தெருக்களிலோ, கடை வாசல்களிலோ தங்களது கடைகளை போட்டு வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் எந்த ஒரு நஷ்டமும் போக்குவரத்து நெரிசலும் இல்லாமலும் இருக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர்.
தனது குடும்பத்தினருடன், தலையில் வெட்டுகாயத்துடன் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை முக்குன்றத்தை சேர்ந்த கலாதுரை என்பவர் அளித்த மனுவில், எனது குடும்பத்துக்கும், எனது உறவினருக்கும் முன்விரோதம் இருந்து வரும் நிலையில், அவர்கள் எங்களிடம் வந்து தகராறில் ஈடுபடுவது, தாக்குதலில் ஈடுபடுவது, கொலை மிரட்டல் விடுப்பது என்று அடிக்கடி வீட்டுக்குள் நுழைந்து மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றனர்.
கடந்த 2ம் தேதி மாலை 5.30 மணியளவில் எனது உறவினரும், அவரது மூன்று மகன்கள் மற்றும் அவர்களது ஆட்கள் திரண்டு வந்து எங்கள் வீட்டில் நுழைந்து என்னை கத்தி, கட்டை, கட்டுக்கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.
அவர்கள் மீது போலீசில் புகார் அளித்தும் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து எனக்கும், எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிக்க வேணடும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து நிலப்பட்டா, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, காவல்துறை பாதுகாப்பு, கூட்டுறவு கடனுதவி, குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் மனுக்கள் என மொத்தம் 332 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் மீது உரிய துறை அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்க கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் இயற்கை மரணம் அடைந்த 10 மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கு ஈமசடங்கு உதவித்தொகை தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.இக்கூட்டத்தில், டிஆர்ஓக்கள் மாலதி, ராஜ்குமார்(நிலஎடுப்பு), திட்ட இயக்குநர் செந்தில்குமரன், மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன், தனித்துணை ஆட்சியர்(சபாதி) கலியமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சீதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமா, ஆர்டிஓ பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் பள்ளி நேரத்தில் வரக்கூடாது- கலெக்டர் அட்வைஸ்
பஸ் வசதி கேட்டு மனு அளிக்க வந்த மாணவ, மாணவிகளிடம் மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் சுப்புலட்சுமி, மனு கொடுப்பதற்காக பள்ளி நேரத்தில் எதற்காக வந்தீர்கள்?, உங்களுக்கு பதிலாக உங்களின் பெற்றோரை அனுப்பி வைத்திருக்கலாமே. பள்ளி நேரத்தில் இதுபோன்று வரக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை கூறியதுடன், அவர்கள் வந்த லோடு ஆட்டோவை அனுப்பிவிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் வேன் ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
The post வேலூரில் இருந்து ஓட்டேரி வழியாக நாயக்கனேரிக்கு அரசு டவுன் பஸ்சை சரியான நேரத்தில் தினமும் தொடர்ந்து இயக்க வேண்டும் appeared first on Dinakaran.