கோத்தகிரி : கோத்தகிரியில் 2 நாளுக்கு முன்பு பெய்த கனமழையால் மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாளுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை பெய்யத் துவங்கியது.
இதில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதையில் அமைந்துள்ள சேட்டு பேட்டை பகுதியில் சாலையோர தடுப்புச்சுவர் இடிந்து சுமார் 300 அடி பள்ளம் வரை கட்டுமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை கோட்ட பொறியாளர் குழந்தைராஜ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மழை பாதிப்பை தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து, விரைவில் பணிகள் நடைபெறவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினர்.
The post கோத்தகிரியில் 2 நாளுக்கு முன்பு பெய்த கனமழையால் மலைப்பாதையில் மண் சரிவு appeared first on Dinakaran.