கோத்தகிரி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய மயானம் ஆக்கிரமிப்பு சர்ச்சையால் பரபரப்பு

கோத்தகிரி : கோத்தகிரி அருகே பில்லிக்கம்பை பகுதியில் 40 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்திய மயானம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக எழுந்த சர்ச்சையால் கோத்தகிரி காவல் நிலையத்தில் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கோத்தகிரி கட்டப்பெட்டு பகுதியை அடுத்து பில்லிக்கம்பை கிராமம் அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகளும் 300-க்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுக்கும் மேலாக அரசு நிலத்தை மயானமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

தற்போது தனி நபர் ஒருவர் மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து தனக்கு சொந்தமான நிலம் என்று கூறி கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து கோத்தகிரி காவல் நிலையத்தின் முன்பு கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. மேலும் ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நாட்டாமை மார்க்கண்டேயன் என 40க்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், ‘‘40 ஆண்டுகளாக இந்த இடத்தை மயானமாக ஊர் மக்கள் பயன்படுத்தி வருகிறோம். தற்போது அருவங்காடு பேக்டரியில் பணிபுரிந்து வந்த அதே ஊரை சேர்ந்த ஒருவர், இது தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோத்தகிரி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும்’’ என கோரிக்கை விடுத்தனர்.

The post கோத்தகிரி அருகே பொதுமக்கள் பயன்படுத்திய மயானம் ஆக்கிரமிப்பு சர்ச்சையால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: