தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு நடிகை கஸ்தூரிக்கு பாஜ கண்டனம்: உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அதில் கஸ்தூரி, தெலுங்கின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். ‘அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் சாதிப் பெயர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.

சாதியை சொல்லாமல் அவர்கள் படம் எடுக்கிறார்களாம். ரொம்ப சந்தோஷம். அப்போ… மத்த எல்லா இடங்களிலும் சொல்லாமல் இருக்கனும்ல… மதத்தை சொல்லாம இருக்கனும்ல.. தமிழ்நாட்டில் எத்தனையோ வருடம், எத்தனையோ பத்தாண்டாக 60 ஆண்டுகளுக்கு மேல் நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலைதான். ஒருவனின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அளிப்பதற்கு சமம்தான்’ என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார்.

தெலுங்கு மக்களை இழிவுபடுத்திய கஸ்தூரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. பாஜ தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழர், தெலுங்கர் அனைவரும் அண்ணன், தம்பியாக பழகிக்கொண்டிருக்கின்றனர். முன்பு சென்னை மாகாணத்துடன் தான் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைந்து இருந்தன. கஸ்தூரியின் கருத்து தமிழக மக்களிடையேயான ஒற்றுமையான சூழலை பாதிக்கும். தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதற்காக கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசிய அவதூறு கருத்துகளை கஸ்தூரி திரும்ப பெற வேண்டும்.

பிராமணர் சங்க கூட்டத்தில் தெலுங்கு மக்கள் பற்றி கஸ்தூரி பேசியது ஏன்? தமிழர்களை பற்றி உயர்வாக பேச வேண்டும் என்பதற்காக தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். கஸ்தூரியின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகை கஸ்தூரி பாஜவில் இல்லை என்றும் சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆனால், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை நடத்தினார். இந்த யாத்திரை வந்த போது சென்னை கொளத்தூரில் அண்ணாமலையுடன் சிறப்பு விருந்தினராக நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். ஆனால் இன்று ஆந்திராவில் கஸ்தூரி பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்ததோடு அவர் கட்சியிலேயே இல்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், பாஜ மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத்தும் கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் தமிழர்களையும் தெலுங்கு மொழி பேசும் தமிழ் தெலுங்கர்களையும் யாராலும் பிரிக்க முடியாது. இந்த பிரித்தாளும் சூழ்ச்சி இனி எடுபடாது. இந்த ஆணவ பேச்சின் பின்னணியில் உள்ள சதிகார கும்பல்களின் சூழ்ச்சிகள் குறித்து முழுமையாக தமிழக அரசு விசாரிக்க வேண்டும். சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளார்.

* நான் அப்படி பேசினேனா? தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து நடிகை கஸ்தூரி நேற்று அளித்த பேட்டி: தெலுங்கர்கள் குறித்து எனது பேச்சு தவறாக திரிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள். பிராமணர்களை வந்தேறிகள் எனக் கூறும் நபர்கள் தமிழர்களா என்றுதான் நான் பேசினேன். என் மாமியார் வீட்டில் எல்லோரும் தெலுங்கு பேசுபவர்கள்தான்.

என்னை தெலுங்கு பேசும் மக்கள், மருமகளாகவும் அவர்கள் வீட்டு மகளாகவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள் போன்றது. பொய்யான குற்றச்சாட்டுக்கு ஓடிஒளியும் ஆள் நான் இல்லை. எனக்கு குடிப்பழக்கமே கிடையாது. என்னை ஓசி குடி என்கிறார்கள், குடிகாரி என சித்தரிக்கிறார்கள். எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன். அதில் இவையும் அடங்கும். இவ்வாறு கஸ்தூரி கூறினார்.

The post தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு நடிகை கஸ்தூரிக்கு பாஜ கண்டனம்: உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: