ரூ4.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனையில் திருப்பம்: தாய் உள்பட மேலும் 4 பேர் கைது

ஈரோடு: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பள்ளனத்தை சேர்ந்தவர் நித்யா (28). இவருக்கு எடிசன் என்பவருடன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் பிரிந்து, ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த சந்தோஷ் குமாருடன் (28) கடந்த 2 ஆண்டாக வசித்து வருகிறார். இதில் கர்ப்பமான நித்யாவுக்கு ஒன்றரை மாதத்துக்கு முன் ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை விற்று விடலாம் என சந்தோஷ்குமார் கூறியதற்கு நித்யாவும் சம்மதிதுள்ளார். இதையடுத்து புரோக்கர்கள் மூலம் கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதிக்கு ரூ4.50 லட்சத்துக்கு குழந்தையை விற்றனர். இதில், புரோக்கர்கள் கமிஷன் போக மீதம் வந்த பணத்தில் பெரும் பங்கை சந்தோஷ்குமார் பெற்றுக்கொண்டு, நித்யாவுக்கு குறைந்த பணத்தை மட்டும் கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட கோபம் மற்றும் குழந்தையை பிரிந்த ஏக்கத்தில் இருந்த நித்யா இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மூலம் ஈரோடு வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமார், குழந்தை விற்பனைக்கு உதவிய புரோக்கர்கள் செல்வி, ரேவதி, பானு, ராதா ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதைதொடர்ந்து நித்யாவிடம் இருந்து ரூ4.50 லட்சத்திற்கு குழந்தையை விலைக்கு வாங்கிய கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை கல்லுவிளை, பால பள்ளியை சேர்ந்த ஜெயசந்திரன் (46), அவரது மனைவி அகிலா ராணி (38) ஆகியோரையும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பெரம்பத்தூரை சேர்ந்த ஜெயபாலன் (40) என்ற புரோக்கரையும் நேற்று இரவு ஈரோடு வடக்கு போலீசார் கைது செய்தனர். குழந்தையின் தாய் நித்யாவும் கைது செய்யப்பட்டார்.

The post ரூ4.5 லட்சத்துக்கு குழந்தை விற்பனையில் திருப்பம்: தாய் உள்பட மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: