திருவனந்தபுரம்: 7 வருட ஜிஎஸ்டி பாக்கியான ரூ1.57 கோடியை உடனடியாக செலுத்தக் கோரி பத்மநாபசுவாமி கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கடந்த சில வருடங்களுக்கு முன் தெரியவந்தது. இதன் பிறகு இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. பத்மநாபசுவாமி கோயிலுக்கு கட்டிடங்கள், நிலங்கள் உள்பட ஏராளமான சொத்துக்கள் உள்ளன. பல கட்டிடங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
கட்டிட வாடகை, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடைகள் விற்பனை மற்றும் யானைகளை வாடகைக்கு விடுவதின் மூலமும், படங்கள், ஓவியங்கள் மற்றும் பொருட்கள் விற்பனை மூலமும் கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்திற்கும் ஜிஎஸ்டி வசூலிக்கின்ற போதிலும் அதை கடந்த 7 வருடங்களாக கோயில் நிர்வாகம் முறையாக கட்டவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 7 வருட ஜிஎஸ்டி பாக்கி ரூ1.57 கோடியை உடனடியாக கட்டக்கோரி கோயில் நிர்வாகத்திற்கு ஜிஎஸ்டி துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post ரூ1.57 கோடி ஜிஎஸ்டி பாக்கி; பத்மநாபசுவாமி கோயிலுக்கு நோட்டீஸ்: உடனே செலுத்த உத்தரவு appeared first on Dinakaran.