இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் கடையின் மேற்பார்வையாளர் உட்பட அனைத்து பணியாளர்களையும் சஸ்பென்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் அனைத்து மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது கண்டறியப்படும் பட்சத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட சுற்றறிக்கையின் படி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பணியாளர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய தண்டனைகள் அபராதம் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீபகாலமாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தொடர்ந்து கூடுதல் விலை வைத்து விற்பதாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
எனவே இதனை தடுக்கும் பொருட்டு, மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் கடைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் கடைப் பணியிலுள்ள அனைத்து கடைப் பணியாளர்கள் கடை மேற்பார்வையாளர் உட்பட அனைவரையும் கூட்டு பொறுப்பாக்கி அக்கடைப் பணியாளர்களை உடனடியாக தற்காலிகப் பணி இடைநீக்கம் செய்து தக்க நடவடிக்கை எடுக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் தேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும், இச்சுற்றறிக்கையினை அனைத்து பணியாளர்களுக்கும் சார்பு செய்து வழங்கி ஒப்புதல் பெற்று கோப்பில் பாராமரிக்குமாறும் மேற்படி சுற்றறிக்கையினை சார்பு செய்து ஒப்புதல் பெற்றுக்கொண்டமைக்கு மாவட்ட மேலாளர்கள் அளவில் ஒப்புதல் அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால் மேற்பார்வையாளர் உட்பட அனைத்து கடை பணியாளர்கள் சஸ்பென்ட்: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.