திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான சாலை 15 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இச்சாலைப் பகுதியில் 17 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. எனவே, இச்சாலையை கடக்க சுமார் 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை ஆகிறது. இச்சாலையில் தற்போது 69,000 வாகனங்கள் நாளொன்றுக்கு வந்து செல்கின்றன. திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான 15 கிலோ மீட்டர் தூரத்தில், சாலையின் இருபுறத்திலும் 347 சிறுசாலைகள், தெருக்கள் உள்ளன. எனவே இச்சாலையை எவ்வளவு அகலப்படுத்தினாலும், அதிகமான வாகனப் போக்குவரத்தின் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலை, திருவான்மியூர், மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக, கன்னியாகுமரியுடன் இணைக்கும் முக்கிய சாலையாக (மா.நெ.49) இது உள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பத் துறையின் அதிவேக வளர்ச்சி மற்றும் பெருகிவரும் அடுக்குமாடி கட்டிடங்களின் எண்ணிக்கை ஆகியவை இவ்வழித்தடத்தில் வாகனப் போக்குவரத்து நெரிசலுக்கு காரணங்களாக உள்ளன. இச்சாலையை 6வழித் தடமாக அகலப்படுத்துவதால் பெரும் வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணியானது, கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூரில் தொடங்கி அக்கரை வரை, 8.80 கி.மீ. நீளத்திற்கு நடைபெற்று வருகிறது. இச்சாலையை, திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6வழித் தடமாக அகலப்படுத்த நிலஎடுப்புப் பணிக்கு, ரூ.940 கோடிக்கு அரசு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் ஆகிய 6 கிராமங்களில் நில எடுப்புப் பணி 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
கிழக்குக் கடற்கரைச் சாலையை 6வழித் தடமாக அகலப்படுத்துவதற்கு கொட்டிவாக்கம் பகுதியில் ரூ.19 கோடி மதிப்பீட்டிலும், பாலவாக்கம் பகுதியில் ரூ.18 கோடி மதிப்பீட்டிலும், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லுார் பகுதிகளில் ரூ.135 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிவுடையும் என எதிர்ப்பார்ப்படுகிறது. இப்பணியில் சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புச் சுவர், தடுப்புச் சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு தார் தளம், 1.65 மீட்டர் அகலத்திற்கு பேவர் பிளாக் தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகால்வாய் மற்றும் நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
நிலஎடுப்பு செய்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இப்பணிகள் முடிவுற்ற இடங்களில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பயன்பாட்டு உபகரணங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின்சார உபகரணங்கள் மாற்றி அமைக்கப்பட்டவுடன், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் குடிநீர் குழாய் மற்றும் பாதாள கழிவு நீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் இருபுறமும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
* நெம்மேலி முதல் அக்கரை வரை ஆய்வு…
ஆறு வழிச்சாலைப் பணிக்காக இசிஆர் நெடுஞ்சாலை விரிவாக்கம் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. பட்டா நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் முதல் கட்டமாக மின் கம்பங்கள் அகற்றப்பட்டன. இப்பணிகளை விரைந்து முடிக்க வல்லூநர் குழு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது. இது சம்மந்தமாக நெம்மேலி கிராமம் முதல் அக்கரை கிராமம் வரை ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒரு சில பட்டா நிலங்களில் உபரி நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அக்கரை கிராமத்தில் விஜிபி மனைப்பிரிவில் சுமார் 4,000 சதுரடி நிலம் உபரி நிலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று மார்டன் லேஅவுட்டில் 10,000 சதுரஅடி உபரி நிலமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஒட்டினாற்போல் உள்ள தனியார் நிலங்கள் கண்றியப்பட்டு மின் மோட்டார்கள், மின் ஜெனரேட்டர்கள் அமைக்கும் பணிக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அதில் ஒரு சில இடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டங்கள் வணிக வளாகங்கள் அகற்றப்பட உள்ளன. இப்பணியில் அகற்றப்படும் மரங்களுக்கு மாற்றாக புதிய மரங்கள் வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
The post திருவான்மியூர் – அக்கரை ஆறு வழிச்சாலை விரைந்து முடிக்க திட்டம்: வல்லுநர் குழு ஆய்வு appeared first on Dinakaran.