ஐப்பசி மாத அமாவாசை சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இக்கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 8 நாள் மட்டுமே பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு அக்.29ம் தேதி முதல் நவ.2ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று அமாவாசை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே தாணிப்பாறையில் குவிந்தனர். இன்று காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது, இரவில் தங்க அனுமதி கிடையாது என பக்தர்களுக்கு அறிவுரை போலீசார் வனத்துறையினர் அனுப்பி வைத்தனர்.

 

The post ஐப்பசி மாத அமாவாசை சதுரகிரி கோயிலில் பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: