அகத்தில் ஒளிரும் தீபங்கள்

தீபாவளி போன்ற பண்டிகைகள் ஒரு புறம் நாம் தினமும் சந்திக்கும் அன்றாடங்களிலிருந்தும் பிரச்னைகளிலிருந்தும் விலகி குடும்பத்தோடு சந்தோஷமாக இருப்பதற்குண்டானது. நின்று நிதானமாக உறவினர்களையும் நண்பர்களையும் பார்த்துவிட்டு வருவது என்று வைத்துக் கொண்டாலும் கூட புராணங்கள் கூறும் சில தத்துவங்களை அன்று தனியே அமர்ந்து யோசிக்க வேண்டிய அவசியத்தையும் பண்டிகைகள் கற்றுத் தருகின்றன.

உண்மையிலேயே நீங்கள் யார்? எதற்காக இத்தனை பண்டிகைகள். எழுந்தது முதல் இரவு வரை ஏதோ ஒருவிதத்தில் உழைத்துக் கொண்டிருக்கின்றோம். நமக்காகவோ, குடும்பத்திற்காகவோ, ஊருக்காகவோ இன்ன பிறருக்காகவோ நாம் வேலையில் ஈடுபடுகின்றோம். இந்த தொடர்ச்சியான ஜென்ம ஜென்மமாகத்தொடரும் விஷயத்தை ஞானிகள் கொஞ்சம் உற்றுக்கவனிக்கச் சொல்கிறார்கள்.

நீங்கள் இப்படி வாழ்வது எதற்காகத் தெரியுமா? நீங்கள் வாழ்க்கை என்று கூறும் இதற்குள் எதைத் தேடுகின்றீர்கள் என்பதை உண்மையாக அறிந்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்கின்றார்கள். இறுதியாக நீங்கள் தேடுவது சந்தோஷத்தைத்தான் தவிர வேறொன்றுமில்லை. அந்த சந்தோஷம் வெளியிலிருந்து கிடைக்கின்றது என்றும் அப்படித்தான் வரவும் கூடும் என்றும் தவறாக வெளியே தேடிக்கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், நீங்கள் தேட வேண்டியது உங்களுக்குள்ளேதானே தவிர வெளியில் அல்ல என்று தொடர்ந்து ஞானியர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

சரி, இப்போது உள்ளுக்குள் பார்த்தல் என்பது என்ன என்பதை பல்வேறு படிநிலைகளாக ஆங்காங்கு தோன்றிய மகான்கள் அதற்குரிய பக்குவம் மிக்கவர்களுக்கு சொல்லித் தருகின்றார்கள். அப்படி உங்களின் பார்வையை உள்ளே திருப்பும் அந்த கிரியைக்கு அனுகூலமாகவே பக்தி, பூஜை, யோகம் என்று பல்வேறு பாதைகளை காட்டியிருக்கின்றனர். இவை அனைத்திற்கும் லட்சியமே ஞானம்தான்.

அந்த ஞானம் எனும் துக்கமற்ற சந்தோஷம் உங்களுக்கு உள்ளேயே உள்ளது. அதுவே நீங்கள்தான் என்று உரத்துச் சொல்கின்றனர். வெளிப்புறமாகவே சென்றுகொண்டிருக்கும் பார்வையை உள்ளே திருப்பும் விதமாகவே இவ்வளவு சம்பிரதாயங்களையும் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நாம் எங்கிருக்கின்றோம்… நம்முடைய லட்சியார்த்தம் எது என்பதை புத்திபூர்வமாக தெளிந்து அப்படி தெளியும்போதே நம்முடைய அகம் ஏற்கும் வழியாக பூஜையையோ யோகக்கலையாகவோ தொடங்குகின்றோம்.

அப்படி நாம் தொடங்கும் ஒரு வழியை இடைவிடாது தினமும் செயல்வடிவில் கொண்டு வரவேண்டும். அதுதான் முக்கியம். அது பூஜையின் ஒரு அங்கமாக விளங்கும் அபிஷேகமாகவோ, அர்ச்சித்தலாகவோ, துதிகளாகவோ இருக்கும். சிலருக்கு யோகக்கலையை கைக்கொண்டு பயணிக்கலாம். கோயிலுக்குத்தினமும் சென்றபடியே அங்கிருக்கும் திருமேனியை தரிசித்து அதில் ஒருமுகப்பட்டு, அப்படி இந்த வழிகளிலெல்லாம் ஒருமுகப்பட்ட மனதை மெல்ல உள்ளே திருப்ப வேண்டியதுதான் முக்கியம்.

உலகத்திற்காக ஒவ்வொரு நாளினுடைய ஒவ்வொரு மணித்துளிகளையும் கொடுக்கும் நாம் நம்முடைய சொந்த சொத்துபோல நம்முள்ளே விளங்கும் ஞானத்தை அடைய அல்லது அதைப்புரிந்துகொள்ள மிக நிச்சயமாகத் தினமும் அமர்ந்து மேலே சொன்னவற்றை கைக்கொள்ள வேண்டும். ஏனெனில், இத்தனை பூஜை, யோக கிரியைகளுக்கும் அப்பால் உள்ள அந்த லட்சியார்த்தமாகிய ஞானம் பெறுதல் எனும் தன்னை அறிதலே ஆன்மிகத்தின் மையப்புள்ளியாகும். எனவே, ஆன்மிகத்தின் விளிம்புகளில் உள்ளோர்கள் அதன் மையம் என்பதை அறிதல் இன்னும் நம்மைத் தெளிவுடையவர்களாக மாற்றுகின்றது. அப்படித்தான் தீபாவளி என்பது நமக்குள் ஒளிரும் ஞான விளக்கைப்புறத்தே காண்பிக்கும் ஒரு பண்டிகையாகும். நரகாசுரன் என்கிற அகந்தை அழிந்தால் இருக்கும் ஆத்ம உணர்வு தானாக பிரகாசிக்கும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

தொகுப்பு: கிருஷ்ணா (பொறுப்பாசிரியர்)

The post அகத்தில் ஒளிரும் தீபங்கள் appeared first on Dinakaran.