செனாய் நகர், தியாகராய அரங்கங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு

* 595 பூங்காக்கள் பராமரிப்பும் தனியாரிடம் செல்கிறது : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை : சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. இதில் மொத்தம் 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிறைவேற்ற முக்கிய தீர்மானங்கள் விவரம் வருமாறு: செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை பராமரிப்பதில் மாநகராட்சி மூலம் போதிய வருவாய் ஈட்டாத காரணத்தால், 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு குத்தகை விட அனுமதி அளித்து வாடகையை மறு நிர்ணயம் செய்து தனியாருக்கு குத்தகை விட மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

இதன் மூலம் செனாய் நகர் அம்மா அரங்கத்தில் தற்போதைய வாடகை ரூ.3.40 லட்சம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில, தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் ரூ.5.42 லட்சமாக வாடகை வசூல் செய்யப்படும். சர்.பிட்டி. தியாகராய அரங்கம் வாடகை ரூ.20 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு வரும் நிலையில், தனியாருக்கு டெண்டர் விடப்பட்ட பின்னர் உயர்த்தப்படும் வாடகை ரூ.50 ஆயிரம் மற்றும் ஜி.எஸ்.டி ரூ.9 ஆயிரம் என மொத்தம் ரூ.59,000 வாடகை நாள் ஒன்றுக்கு வசூலிக்கப்படும்.

மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கை புல் கால்பந்து விளையாட்டுத் திடல்களை பராமரிக்க ஆன்லைன் இ-டெண்டர் முறையில் தனியாருக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, வியாசர்பாடி முல்லை நகர், திரு.வி.க நகர், கே.பி.பார்க் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட 9 செயற்கை புல் கால்பந்து விளையாட்டு திடல்களை சந்தை விலை விவரத்தின் அடிப்படையில் பயனர் கட்டணம் விலை நிர்ணயம் செய்ய தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கால்பந்து செயற்கை புல் விளையாட்டுத் திடல்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபருக்கு குறைந்தபட்சம் ரூ.120 வீதம் நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ.93.31 லட்சம் வருவாய் கிடைக்கும்.சென்னையில் 595 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சென்னையில் ஒன்று முதல் 15-வது மண்டலம் வரை 871 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தற்போது 89 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும் 168 பூங்காக்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலமும் பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 595 பூங்காக்களுக்கு வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

செனாய் நகர், பீட்டர்ஸ் சாலை, நொளம்பூர், பெருங்குடி வீரபாண்டிய கட்டபொம்மன் குறுக்கு தெரு, 197வது வார்டு இஸ்கான் கோயில் அருகில் உள்ள உயிர் இயற்கை எரிவாயு உற்பத்தி கூடம் அருகே உள்ளிட்ட இடங்களில் ஒருங்கிணைந்த கோசாலை அமைக்கப்பட உள்ளது. கால்பந்து மைதானங்களை தனியாருக்கு விடும் மாநகராட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு, அதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட் கட்சிகளின் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

200 கவுன்சிலர்களுக்கும் கையடக்க கணினி

சென்னை மாநகராட்சியின் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சியின் 200 வார்டு உறுப்பினர்களுக்கும் டேப் கணினி வழங்கப்படும் என்றும், இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று நடந்த சென்னை மாநகராட்சி கூட்டத்தில், அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் கையடக்க கணினி வழங்கப்பட்டது.

The post செனாய் நகர், தியாகராய அரங்கங்களை தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவு appeared first on Dinakaran.

Related Stories: