பாஜ எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை திமுக கூட்டணி வலிமையாக உள்ளது குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் திட்டவட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த விண்ணவனூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: நடிகர் விஜய் முதல் மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறார். ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை எதிர்பார்த்தார்கள். ஆனால், தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி அல்லது இனிமேல் செய்யப் போகிற விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிக நேரத்தை எடுத்து கொண்டார். பிளவுவாத சக்திகள் முதல் எதிரி என்று சொல்லுகிறபோது, குறிப்பிட்ட இந்த கட்சி அல்லது அமைப்புதான் என்று அவர் அடையாளப்படுத்தவில்லை.

பெரும்பான்மை வாதத்திலும் உடன்பாடு இல்லை, சிறுபான்மை அரசியலிலும் உடன்பாடு இல்லை என்றால், பெரும்பான்மை வாதத்துக்கு துணைபோவதாக அமைந்துவிடும். பெரும்பான்மை வாதத்தை பேசுகிற கட்சி பாஜக. அதற்கு துணைபோகிற கட்சி சங்பரிவார். அதனால் சிறுபான்மை சமூகத்தினர் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பது உலகறிந்த உண்மை. அவர்கள் பாசிசம் என்றால் நீங்க பாயாசமா என்று கேட்கிறார். பாஜ எதிர்ப்பில் அவர் உறுதியாக இல்லை என்பதை அவருடைய பேச்சில் உணர முடிகிறது. திமுக எதிர்ப்பு என்பது மக்களிடத்திலே எடுபடவில்லை என்பதுதான் வரலாறு. அதிகார பகிர்வு என்ற பேச்சை, திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்துகிற முயற்சியாக மட்டும்தான் பார்க்கிறேன்.

அதிகார பகிர்வு குறித்து வேண்டுமென்றே பேசுகிறார். அவர் எதிர்பார்த்த விளைவுகளை அது ஏற்படுத்தாது. அவருடைய பாணியில் இது ஒரு அணுகுண்டு. ஆனால், அவருக்கு எதிராக வெடிக்கக்கூடிய நிலைதான் உருவாகி இருக்கிறது. ஆட்சியில், அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருக்கிறோம். ஆனால், அதற்கான சூழல் வெளியிலும், உள்ளேயும் இன்னும் கனியவில்லை. மக்களும் அதற்கு தயாராகவில்லை. மக்களை தயார்படுத்தாமல் எந்த கோரிக்கையும் வெல்லாது. திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என முதல்வர் சொன்னது உண்மைதான் என நான் வழிமொழிகிறேன்.இவ்வாறு அவர் ெதரிவித்தார்.

The post பாஜ எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை திமுக கூட்டணி வலிமையாக உள்ளது குழப்பத்தை ஏற்படுத்த முடியாது: திருமாவளவன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: