காசா மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் ஐ.நா-வின் மனிதாபிமான ஏஜென்சிக்கு இஸ்ரேலில் தடை: பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிப்பு

காசா: காசாவில் செயல்பட்டு வந்த ஐ.நா சபையின் ஏஜென்சிக்கு இஸ்ரேலில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் ஓராண்டுக்கு மேலாக நடக்கும் நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.நா சார்பில் பல்வேறு நிவாரணமும், மனிதாபிமான உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காசா மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் ஐநா சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனம், இஸ்ரேலின் எல்லையோர பகுதியிலும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் இஸ்ரேல் நாடாளுமன்றம் கொண்டு வந்துள்ள தீர்மானத்தின்படி, ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவனமானது அதிகாரப்பூர்வ மாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இஸ்ரேல் நாட்டிற்குள் மேற்கண்ட நிறுவனம் செயல்பட முடியாது. இதுகுறித்து இஸ்ரேல் அரசு வௌியிட்ட அறிவிப்பில், ‘ஐ.நா நிறுவனமும் ஹமாஸ் அமைப்பும் ஒன்று தான்; இந்த நிறுவனம் ஒரு சார்பு பிரசார அமைப்பாக செயல்படுகிறது. இஸ்ரேலின் உரிமைகள் மறுக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்றம் கொண்டு வந்துள்ள மேற்கண்ட தடையின் மூலம், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்து, காசாவிற்கு எவ்வித நிவாரண உதவிகளும் கொண்டு செல்ல முடியாது. ஏற்கனவே கடுமையான விதிகளை நடைமுறையில் வைத்துள்ள இஸ்ரேல், தற்போது கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால் நிவாரண உதவிகள் விநியோக செயல்முறைகள் முற்றிலும் பாதிக்கும் என்கின்றனர்.

அதாவது இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரை – காசா ஆகிய பகுதியில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்படுவார்கள். கிட்டத்தட்ட ஒரு வருடமாக செயல்பட்ட இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த சில ஐ.நா பணியாளர்கள் கூட இஸ்ரேல் – காசா ேபாரினால் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி நிறுவன தலைவர் பிலிப் லஸ்ஸரினி கூறுகையில், ‘இஸ்ரேலால் விதிக்கப்பட்ட தடையானது, ஆபத்தான முன்னுதாரணமாக கருதுகிறேன். இதன் மூலம் பாலஸ்தீனியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் அதிகமாகும். எங்களது நிறுவனத்தை அவமதிக்கும் செயல்களை இஸ்ரேல் தொடர்ந்து செய்து வருகிறது.

மனிதாபிமான உதவிகளை செய்து வரும் ஐ.நா. ஏஜென்சியை வெளியேற்றுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் தவறு செய்துள்ளது’ என்றார். இஸ்ரேல் கொண்டு வந்துள்ள தடை சட்டத்திற்கு, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட பதிவில், ‘காசாவில் மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து கிடைத்திட வழிவகை செய்யப்படும். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயல்பட அனுதிக்கப்படும். நாங்கள் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம்’ என்று கூறியுள்ளார்.

The post காசா மக்களின் உயிர்நாடியாக கருதப்படும் ஐ.நா-வின் மனிதாபிமான ஏஜென்சிக்கு இஸ்ரேலில் தடை: பாலஸ்தீன மக்கள் வெகுவாக பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: