பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது என்று திருமாவளவன் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் நேற்று நடைபெற்றது. லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய், ‘பிளவுவாத சக்தியும், ஊழலுமே நம் எதிரிகள், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிப்போம்’ என்று தெரிவித்தார். தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு விசிக தலைவர் திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது: முதல் அடி மாநாடு, அடுத்த அடி ஆட்சிப் பீடம்’ என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில், பல லட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது.

பாசிச எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டை அல்லது இந்தியாவைப் பொறுத்தவரையில் பாஜக எதிர்ப்பு தான். அவரோ “அவங்க பாசிசம் என்றால் நீங்க பாயசமா ” என்று பாசிச எதிர்ப்பாளர்களை நையாண்டி செய்துள்ளார். பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் அவருக்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா ? “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை முன்னிறுத்துவதாலும்; “பிளவுவாதத்தை எதிர்ப்போம்” என கூறுவதாலும்; அவர் பாஜகவை எதிர்க்கிறார் என்று நாம் புரிந்துகொண்டால், பாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வது ஏனென்ற கேள்வி எழுகிறது.திமுகவை முதல் எதிரி என்று கூறியிருப்பதும், திமுக கூட்டணியை குறிவைத்திருப்பது தான் விஜய்யின் ஒட்டுமொத்த உரையின் சாராம்சமாக உள்ளது. திமுக கூட்டணியை பொறுத்தவரையில் வலுவாக இருக்கிறது; வலுவாக தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

The post பாசிச எதிர்ப்பில் அல்லது பாஜக எதிர்ப்பில் விஜய்க்கு உடன்பாடில்லை என்று புரிந்துகொள்வதா? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: