சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்..! பயணிகள் மகிழ்ச்சி

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மின்சார ரயில்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் 250க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைகின்றனர். ஆனால், இந்த வழித்தடத்தில் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 ரயில் பாதைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மற்றொரு பாதையில் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 4வது ரயில் பாதை இல்லாத காரணத்தால், கூடுதல் ரயில்கள் இயக்கவோ அல்லது சரக்கு ரயில்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவோ முடியாத சூழல் நிலவி வந்தது. ஆகவே சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது ரயில் பாதை அமைக்க பயணிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டத்தை துரிதமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆகையால், 4வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன. தற்போது, சென்னை கடற்கரை – எழும்பூர் 4வது ரயில் பாதை பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. எனவே நாளை முதல் மீண்டும் பறக்கும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது புறநகர் ரயில் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ள்து. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரிக்கு 45 ரயில்களும், மறுமார்க்கத்தில் 45 ரயில்களும் இயக்கப்பட உள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி காலை 4.53 மணிக்கு முதல் ரயிலும், வேளச்சேரியில் இருந்து கடற்கரை நோக்கி காலை 4.00 மணிக்கு முதல் ரயிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் பறக்கும் ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்..! பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: