குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்


சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இடைநிலை நிர்வாகி, வனக்காவலர், தட்டச்சர், குறுக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான குரூப் 4 தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.

இதற்கான விண்ணப்பபதிவு இந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்படி தமிழ்நாட்டில் 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஜூன் 9ஆம் தேர்வு நடைபெற்று முடிந்தது. சுமார் 20 லட்சம் மாணவர்கள் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் 15 லட்சத்து 80ஆயிரம் தேர்வர்கள் தேர்வை எழுதி இருந்தனர்.

முதன்முறையாக தேர்வு நடைபெற்று மூன்று மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் துறை ரீதியாக பெறப்பட்டு கொண்டிருந்தது. அதன்படி ஏற்கனவே 6244 பணியிடங்களுக்கு முதலில் அறிவிக்கப்பட்ட தேர்வில் கூடுதலாக 480 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு 6724 ஆக உயர்ந்தது. தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும்பணி நடைபெற்றுவரும் நிலையில், தற்போது கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு மொத்தமாக 8,932 ஆக காலி பணியிடம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி முழுமையாக முடிவுற்று இணையதளத்தில் பதிவேற்றும் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி அதிகார பூர்வ இணையதளம் மூலமாக தேர்வர்கள் சென்று தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் அதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் டி.என்.பி.எஸ்.சி உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: