ராஜகோபுர மனசு

(வல்லாள கோபுரக் கதை)

பகுதி 8

அது, தன் பூதகணங்களுடன், அரண் மனைக்கப்பால் ஐம்பதடித் தொலைவில் தரையிறங்கியது. தன்னுடன் சேர்த்து, அனைவரையும் ஜடாமுடியும், திருநீறும் தரித்த, சிவனடியார்களாக மாற்றியது. உருமாறிய சிவகணங்களை, தலையைசாய்த்து ஒருமுறைப் பார்த்து மயக்கும்விதமாக சிரித்துவிட்டு, “சரி,நடக்கட்டும்” என்றது. அதன் எண்ணம்புரிந்து அவைகளும், “அப்படியே செய்கிறோம்” என்பதாக பணிந்துவணங்கி, குனிந்தபடியே பின்நோக்கி சில அடிகள் நகர்ந்துபோய், பின் அருவமாகமாறின. வாயுவேகத்தில்நகர்ந்து, ஊரெல்லையிலுள்ள தேவதாசிகளின் வீடுகளின் முன், தனித் தனியே போயிறங்கி, மீண்டும் உருவமாகின. கைவீசி நடந்துப் போய், நிலைக்கதவு தட்டின. மல்லிகைவாசமும், அலங்காரமும், அதீதப் புன்னகையுமாக கதவுதிறந்துநின்ற தாசிகளிடம், “இன்றைய இரவுக்குமட்டும்” என பேரம்பேசின.

வாசலில் சிவனடியாரைக் கண்டதிர்ந்துபோன தாசிகள், அவர்களைத் தவிர்க்க, “ஒரு இரவுக்கு நூறுபொன். ஆகுமாஉங்களால்?” என அடாதவிலை கூறினர். அடியாருவிலிருந்த சிவகணங்கள், தங்கள் கந்தல்துணியின் முடிச்சவிழ்த்து, தாசிகள் கேட்டகாசுகளை, எடுத்துக் கொடுக்க, வேறுவழியில்லாமல் தாசிகள் வரவேற்று கைகால்களைக் கழுவிவிட, கழுவிக் கொண்ட சிவபூதகணங்கள், உள்ளேயறைக்குள்போய் கட்டிலில்சாய்ந்துகொண்டு, இருகைகளையும் பின்பக்கம்வைத்தபடி ஆயாசமாக கால்களைநீட்டி, படுத்துக் கொண்டன.அன்றைய இரவு, நகரின் மொத்ததாசிகளின் இல்லமும், ஒருசிவலீலைக்குத் தயாராகின.

திருநீற்றுவாசம் காற்றில்மணக்க, மங்கலமுகத்துடன் தனியேநின்ற அதுவும், மெல்ல நடந்துபோய், அரண்மனையின் பிரதானக்கதவு முன்நின்று, எல்லோர்க்கும் கேட்கும்படியாக, உரத்தகுரலில் “சிவோஹம்” என்றது. குரல்கேட்டுத் திரும்பிப்பார்த்த காவலனொருவன், தகவல் சொல்ல உள்ளே ஓடினான். சில நிமிடங்களில் தன் அரசிகளோடு வந்தமன்னன், சிவனடியாருவிலிருந்த அதன்காலில், விழுந்து வணங்கி, உள்ளே வரவேற்றழைத்துப்போய், பாதபூஜைகள் செய்தான். அனைத்தையும் ஏற்றுக் கொண்ட அதனிடம், “என்னைநாடி வந்திருக்கும் தங்களுக்கு என்ன வேண்டுமென” மன்னன் பணிவுடன்கேட்க. அது கர்ஜித்தது. “ஆ என்னத்திமிர்? நான்கேட்டதைத் தரும் தகுதியுண்டா உனக்கு? மூடா, உனக்கென்ன வேண்டும், நீசொல்?” என்றது. அதன்கோபம்கண்டு, மன்னன் எச்சில்விழுங்கினான். என்னசொல்வதெனத் தெரியாது, விழித்தான்.

ராணிகளில் இளையவள், சட்டென முன்னேவந்து, “தங்களின் ஆசி சுவாமி” என்றதும், அது வாய்விட்டுச் சிரித்தது. “கெட்டிக்காரியடியம்மா நீ” என கைகள்தூக்கி ஆசிர்வதித்தது. சகஜமாகி, மன்னனைப் பார்த்து, “நீ சொல். எது உனக்குக்குறை” எனக் கேட்க, மன்னன் தனக்குப் பிள்ளையில்லாக் குறையைச் சொன்னான். “எனக்குப்பின் அரசாள ஆளில்லை” என புலம்பினான். அது பதில்சொல்லாது, மன்னனையே முறைத்துப் பார்த்தது. சிலநொடிகளில், “உன்னோடு தனியே பேசவேண்டும்” என்றது.

அரசிகளோடு மற்றவர்களையும் சேர்த்து, அங்கிருந்து நகர்த்தியது. அரசிகள் நகர்ந்ததும், தனியாய்நின்ற மன்னனிடம், “நான் கலவித்தியானம் செய்ய, எனக்கொரு தாசிவேண்டும். தருவாயா?” என்றது. அதிர்ந்துப் போய் நின்றமன்னனிடம், “என்னப் பார்க்கிறாய், இது யோகத்திலொரு வகை. உனக்குப்புரியாது.” என கூறியது. மன்னனோ, “தாங்கள் கொண்டுள்ள சிவகோலத்திற்கு, தாசிகள் தகாது. அதனால் உங்கள் யோகத்திற்கு துணைநிற்கிற, காலத்திற்கும் தங்களைப் பிரியாத, ரிஷிகாலத்து குருபத்தினிபோல, நல்லப் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, அடியேன் உங்களுக்கு விவாகம் செய்து வைக்கட்டுமா?” தயங்கியபடி கேட்க, அது மறுத்தது. “உனக்குப் புரியவில்லை. இந்த யோகக்கலைக்கு ஈடுகொடுக்க, தாசிகளால்தான் முடியும். எனக்கு தாசிதான் வேண்டும்” என்றது.

அரைமனத்துடன் சரியென்ற மன்னன் தாசிகளிலொருத்தியை அழைத்துவரும்படி ஆட்களனுப்பினான். ஆனால், போய்க் கேட்ட எல்லாதாசிகளும் ஒன்றுசேர்ந்தாற்போல, இன்று முடியாதென ஆட்களைத் திருப்பியனுப்பினார்கள். மன்னன் கோபமானான். இம்முறை அமைச்சர்களையனுப்பினான். அமைச்சர்களும், தனித் தனியாக தாசிகளை கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவர்களிடமும் தாசிகள் மறுப்பு தெரிவித்தார்கள். “இன்று சிவனடியார்களுக்கு ஒப்புக் கொண்டுள்ளோம்” என வாசலிலிருக்கும் பாதரட்சைகளைக் காண்பித்தார்கள்.

நாளையெனில், வரச்சம்மதமென்றார்கள். அரண்மனைக்குத்திரும்பிய அமைச்சர்கள், மன்னனிடம் விவரம்சொல்ல, மன்னன் குழம்பினான். “அங்கும் சிவனடியாரா? என்னயிது?” என யோசித்தபடி, “வாருங்கள். நானே வந்துபேசுகிறேன்” என தாசிகள் தெருநோக்கி கிளம்பினான். தெருவுக்குள் நுழையும்போது, தன்னை எதிர்நின்றுவரவேற்ற தாசிகளிடம், தன்னிலையிலிருந்து தாழ்ந்து,” எவ்வளவு பொன், பொருள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் குலத்திற்கு கூடுதல் சலுகைகள் தருவதற்குகூட, ஆணைப் பிறப்பிக்கிறேன். அரண்மனைக்கு வந்திருக்கும் சிவனடியாருடன் இன்றிரவு தங்குங்கள்” என விண்ணப்பித்தான். தாசிகளோ, “வாக்கு கொடுத்துவிட்டோம். கொடுத்தவாக்கை மீறுதல், எம்மன்னரான உமக்கே களங்கத்தைத்தரும். எம்மன்னருக்கு களங்கம்தரும் செயலை நாங்கள் செய்யமாட்டோம்” மன்னனிடமும் பணிவுடன் மறுத்தார்கள்.

என்ன செய்வதெனப் புரியாமல், தளர்ந்தநடையுடன் அரண்மனைத்திரும்பிய மன்னனிடம், எதிர்பட்ட அரசிகள் விவரங்கள் கேட்டார்கள். மன்னன் நடந்ததைச் சொன்னான். வந்திருக்கும் சிவனடியாருக்கு, என்ன பதில் சொல்வதென தெரியவில்லையென புலம்பினான். அத்தனையும்கேட்ட அரசிகளில் இளையவள், “நான்போகிறேன்’ என முன்னேவந்தாள். முதலில் அதிர்ந்தமன்னன், பின் அரைமனத்துடன் தன் இளையராணியை சிவனடியாரிடம் அனுப்ப சம்மதித்தான்.

மூத்தவள் அலங்கரித்துவிட, இளையவள் தயாரானாள். பள்ளியறைக்குச் சென்றாள். சிவனடியாரின் ரூபத்திலது கட்டிலில் கண்மூடிப்படுத்திருந்தது. இளையராணி, அதன்முன் விழுந்து வணங்கினாள். பின்னர், அதையெழுப்ப பன்னீர்த் தெளித்தாள். அதுயெழும்பவில்லை. அழகாக வீணைவாசித்து நாதமெழுப்பி, முயற்சித்தாள். அது அசையவில்லை. சரி, பெண் ஸ்பரிசம் பட்டால், அதற்கு விழிப்புத்தட்டுமென, மெல்லநகர்ந்து, கட்டிலில் படுத்திருந்ததைத் தொட்டாள். அவள் தொட்டக் கணத்தில், கண்கள் கூசும்படியாக, பெரும் ஒளிவெள்ளம் சூழ்ந்தது. வெளிச்சம் தந்த கூச்சத்தால் தன்கண்களை, அவள்கசக்கிக் கொண்டிருக்கும்போதே, குழந்தையின் அழுகுரல்கேட்டது.

அதிர்ந்து, கசக்கியகண்கள் விழித்துப்பார்க்க, அடியார்படுத்திருந்த இடத்தில், கைகால்கள் உதைத்தபடி, ஒரு குழந்தை படுத்திருந்தது. இளையராணி ஓடிப் போய் மன்னனிடம் சொல்ல, வந்துப்பார்த்த மன்னன், “வந்தது ஈசனே” என மகிழ்ந்து பிள்ளையை தொட்டுத்தூக்கி, முத்தமிட்டணைத்தான். அவன் அப்படிச் செய்து கொண்டிருக்கும்போதே, குழந்தையும் மாயமாக மறைந்து போனது. மன்னனோடு அரசிகளுட்பட எல்லோரும் அதிர்ந்துபோய்நிற்க, வானில் ரிசபவாகனரூபனாக, தன்தேவியோடு ஈசன் காட்சித்தந்தான். “மன்னா, எது. உனக்கில்லை? கேள். தருகிறோம்” என்றான். சிவதரிசனம் கண்டதிர்ச்சியில் மன்னன் வாய்குளறினான். “நாட்டையாள எனக்கொரு வாரிசில்லை.” என்பதற்குப்பதிலாக, “எனக்கு ஈமக்கடன் செய்யக்கூட புத்திரப்பாக்கியமில்லையே” என்றான். “கவலைவேண்டாம், யாமே உமக்கான ஈமக்கடன்களை, தவறாது செய்வோம்” என வரம்தந்து, ஈசன்மறைந்தான்.

அத்தோடு கனவு கலைந்தது மன்னர் வீரவல்லாளர் தூக்கி வாரிப்போட்டு, படுக்கைவிட்டெழுந்தார். “ச்சே என்னக்கனவிது, அர்த்தம் புரியாமல். நேற்று அரசிகளோடு, இயற்பகை நாயனார் கதையை பேசிவிட்டு, அதே நினைப்போடு உறங்கியதால் வந்தக் கனவோ. தன்மக்களை நேசிக்கிற எந்தமன்னனாவது கொள்ளியிடப்பிள்ளை வேண்டுமெனக் கேட்பானா? கனவில்வந்த அந்த மன்னன்முகமும் தெரியவில்லை. ஒருவேளை, கனவில் கண்ட அந்த மன்னனுக்கும், என்போல் இரண்டு மனைவியிருந்ததால், அது நானோ.” மன்னர் பெருமூச்சுவிட்டார்.

ம்ம்ம். அரண்மனைவிட்டு இங்குவந்து, இன்றோடு மூன்றிரவுகள், இரண்டு பகல்கள் கடந்தாயிற்று. சம்பிரதாயப்பூஜைகளுடன் துவங்கி, குலகுருமுன், வாய்ப்பொத்திநின்று, லிங்கப் பூஜைக்கான தீட்சையைப் பெற்று, இன்றோடு மூன்றுநாளாயிற்று. தீட்சையைப்பெற்றுக் கொண்டபின், மடத்திலிருக்க வேண்டுமாம். உபதேசமாக, குரு சொல்லித்தரும் மந்திரங்களை, உருப்போடவேண்டுமாம். இன்று விடிந்ததும் குருவினுடனான சந்திப்பு முடிந்ததும் கிளம்பிவிட வேண்டும். மனம் முழுக்க அருணை மலையே நிற்கிறது. கைப்பிடித்திருந்த தகப்பனை, திருவிழாவில் தொலைத்த, குழந்தையின் மனசாய், அருணாசலத்தையே தேடுகிறது. ஒருநாளும் அருணைமலையைப் பார்க்காமல், கண்விழித்ததில்லை. இதற்குமேல் தாங்காது. இன்று மாலைக்குள் அருணையை அடைந்துவிடும்படியாக, வேகமாக குதிரைகளைவிரட்டி, லாவகமாக தேரினை ஓட்டச்சொல்லி, போய் சேர்ந்துவிடவேண்டும்.”

மன்னர் வீரவல்லாளர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே பொலபொலவென விடிந்தது. அரசிகளும் உறக்கம் களைந்தெழுந்தார்கள். எல்லோரும் முகமலம்பி, காலைக் கடன்கள்முடித்து, குளித்துத்தயாராகி, புறப்பட்டுப்போய், மடத்தின் பிரதானஅறையில், தேவாங்க குலகுரு ஜகத்குரு ஸ்ரீபண்டிதா தாத்யச் சுவாமிகளை சந்திக்க காத்திருந்தார்கள். சிலநிமிடங்களில் பிரதானஅறைக்குள் வந்த தேவாங்க குலகுரு அனைவருக்கும் ஆசிவழங்கினார். அமரச் சொன்னார்.

பரஸ்பர விசாரிப்பிற்குப்பின் பேசத் தொடங்கினார். எப்படியிருக்கிறது “அருணசமுத்திர வல்லாளப்பட்டினம்” என்றார். நான்கு புறமும் நடந்து கொண்டிருக்கும் கோபுரப் பணிகளின் நிலவரம் கேட்டறிந்தார். முழுப்பணிகளும் நிறைவடைய இன்னும் எவ்வளவு காலமாகுமென வினவினார். மதுரை சுல்தானுடனான இணக்கமெப் படியிருக்கிறதென கேள்விஎழுப்பினார்.

அத்தனைக்கும் மன்னர் வீரவல்லாளன் பொறுமையுடன் பதிலளித்தார். அற்புதமாக எழும்புகிற கோபுரங்களைப் பற்றி பரவசத்துடன் விவரித்தார். மொத்தப் பணிகளும் முடிவடைய, இன்னும் பத்தாண்டுகள்கூட ஆகலாமென்றார். மதுரைசுல்தானுடன் புகைச்சல் இருந்துகொண்டேதானிருக்கிறது. என பதிலளித்தார். குலக்குரு,பேச்சின்களத்தை மாற்றினார்.

“சரி, நீங்கள் லிங்கபூஜைக்கான தீட்சையை ஏற்றுக் கொண்டதற்கான காரணம்?”
மன்னர் அக்கேள்விக்கு மௌனமானார். சிலநொடிகளில் புன்னகைத்தபடி பதில் கூறினார். “போதுமென்று தோன்றுகிறது. நகர்ந்துவிடலாமென பலமாக எண்ணமெழும்புகிறது”. அரசிகள் அதிர்ந்துபோய் மன்னரை திரும்பிப்பார்த்தார்கள். குலக்குரு தொடர்ந்தார்.

“எது, வாழ்ந்ததா?”

“இல்லை. அரசாண்டது”.

“காரணம்?’’

“சொல்லத் தெரியவில்லை. அறுபதைக் கடந்துவிட்ட இந்தவயதிலும், சதாகாலமும் போர்காலச் சூழலை எதிர்கொள்வது ஒருகாரணமாயிருக்கலாம். மக்களுக்கான வளர்ச்சி நிலைகளில் கவனம் செலுத்த முடியாதபடிக்கு, வடக்கத்தானுக்கு மொத்தமொத்தமாக கப்பம் செலுத்துகிற, வெறுப்பாயிருக்கலாம். என்முன்னோர்கள்போல, கோயில்கள், அணைக் கட்டுமானப் பணிகளென நற்பணிகள் செய்யமுடியாத சலிப்பாயிருக்கலாம். எத்தனை முயற்சித்தும் சுல்தானையெதிர்க்க ஒன்றுபடாத, இந்த ஒற்றுமையற்ற அண்டை நாட்டரசர்களின் செயல்பாடுகள்தருகிற கோபமாயிருக்கலாம். அரசுக்கு தகுதியற்ற வாரிசை, நான்பெற்ற வேதனையாகவுமிருக்கலாம், எனக்கு சொல்லத்தெரியவில்லை.

மன்னர் பெரிதாக பெருமூச்சை விட்டபடி, பேச்சினைத் தொடர்ந்தார். “ஆனாலொன்று, இத்தனை ஒவ்வாமைகளிருந்தாலும், மனதுக்குள் ஆசையொன்று உதித்துக் கொண்டேயிருக்கிறது. நான் இறப்பதற்குள் சிவதரிசனம் காணவேண்டும். ஹரியும், பிரம்மனும் அடிமுடிகாணமுடியா ஈசனை, அடியும்முடியுமாய் பிரம்மாண்ட ரூபனாய் நான் தரிசிக்க வேண்டும்.

அதற்கு தனியே நகர்ந்துவிட வேண்டும். நகர்ந்து, நடந்து, அருணைசமுத்திர மலைமீதேறி, மலைக்குகையிலோ, மரப்பொந்திலோ புகுந்து, சதா சிவநினைப்புடன் அமர்ந்து விடவேண்டும். அமர்ந்தபடி, இந்தத் தேகத்துடனேயே சிவபூத கணமாகி விடவேண்டும். அப்படி சதா சிவநினைப்புடன் இருப்பதற்கான முதல்படியாகவே, இந்த லிங்கபூஜைக்கான தீட்சையை நான் நினைக்கிறேன்.”

மன்னர் வீரவல்லாளன் பேசுவதை, சலனமற்று, தலையைக் குனிந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த குலக்குரு, திடீரென “கனவேதேனும் கண்டீர்களா?” என்றார். சட்டென பேச்சுமாறியதால் புரியாத மன்னர், “என்னகேட்கிறீர்களெனப் புரியவில்லை” என்றார். நிமிர்ந்து, மன்னரையே அமைதியாக சிலநொடிகள் நோக்கிய ஸ்ரீ பண்டிதா தாத்ய சுவாமிகள், “சொப்பனமேதும் கண்டீர்களா?” என்றார்.

“ஏன் கேட்கிறீர்கள்?”
“ஏற்றுக் கொண்ட தீட்சை, சிலசமயம் கனவில் சூட்சுமமாய் பதிலளிக்கும்.”மன்னர் வியந்தார். தான்கண்ட கனவுப்பற்றி விவரித்தார். கடைசிவரை அந்தமன்னன்முகம் நினைவுக்கு கொண்டுவர இயலவில்லையென்றார். “இந்தக்கனவில் அப்படியென்ன சூட்சுமபதிலிருக்கிறது” என ஆர்வத்துடன் கேள்வியெழுப்பினார். ஸ்ரீ பண்டிதா தாத்ய சுவாமிகள், நடுநெற்றியை விரல்களால் கீறியபடி கண்கள்மூடியபடி. அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தார். சிலநொடிகளில், கண்மூடிய அவர்முகம் பிரகாசமானது. ஆனால், வெகுநேரம் அது நீடிக்கவில்லை. பிரகாசமானமுகம் சிலநொடிகளிலேயே சட்டெனவாடியது. “ஜடாமுடிநாதா, ஜகன்மாதா, தாயே சூடாம்பிகா” என அவர் அலறினார்.

கண்விழித்து, மன்னரையே உற்றுநோக்கிய தேவாங்ககுலகுரு, நெஞ்சில் கைவைத்து, மெல்லியகுரலில், அதேநேரத்தில் வேகமாக ஸ்ரீருத்ரம் ஜெபித்தார். தன்னுடன் இணைந்து ஓதும்படி, தன்சிஷ்யர்களுக்கு கைகாட்டினார். கணீரென்ற குரல்களோடு, ஸ்ரீருத்ரப்ரசன்னம் அங்கு வேகமாகச் சொல்லப்பட்டது. சொல்லச் சொல்ல, ஒருவித அதிர்வலைகள் எழும்பி, பிரதானயறை முழுக்க பேரமைதி கூடியது. லயத்தோடு, எல்லோரும் ஸ்ரீருத்ரம் உரக்க ஓதிக் கொண்டிருக்கும்போதே தன் இருக்கையிலிருந்து எழுந்து, மன்னர் வீரவல்லாளரிடம் சென்ற ஸ்ரீ பண்டிதா தாத்ய சுவாமிகள், அரசிகளை நகரச் சொன்னார். மன்னரின் தலைமீது கைவைத்தார். எழமுயற்சித்த மன்னரை, அமரும்படி சைகைகாட்டி, தலைமீது வைத்த தன்கையை மேலும் அழுத்தமாக்கினார். அவரின்வாய் வேகமாக ஏதோ முணுமுணுத்தபடி இருந்தது. இடையிடையே “ஜெய் விஜயீ பவ. ஜெய் விஜயீ பவ” என கூறியது.

தொடர்ச்சியாக கிட்டத்தட்ட பத்துநிமிடங்கள் நீடித்த இவையெல்லாம், பிரதானயறையின் சூழலை வேறுவிதமாக்கின. குலக்குரு கைக்காட்ட, அறை நிதானமாகியது. மன்னரின் தலைமீது வைத்திருந்த தன்கையை அவர்யெடுத்தார். கைகள்தூக்கி மன்னரை ஆசிர்வதித்தார். “தாங்கள் போய்வரலாம்” என்றார்.ஒரு சடங்குபோல் நிகழ்ந்த இவைகளால், மன்னர் வீரவல்லாளருக்குள் ஏதோ நிரம்பியது. அவர் எழமுயற்சித்தும், ஏதோவொன்று அழுத்தியது. ஆனாலும், எழுந்த மன்னர் தன் கனத்த சரீரம் தள்ளாடினார்.

தன் குலகுருவின் பாதம்தொட்டு வணங்கினார். பரிசுகள் பல வழங்கினார். மடத்திற்குதான் வழங்கப்போகும் நிலத்தினை பட்டயமாக அவரிடம் சமர்பித்தார். தன் பரிவாரங்களோடு விடைபெற்றுக் கொண்டு, அரசிகளோடு தேரேறினார். மன்னன் வழங்கிய பட்டயத்தையே பார்த்துக் கொண்டிருந்த  பண்டிதா தாத்ய சுவாமிகள் அதிலிருந்த மன்னர் வீரவல்லாளன் என்கிற பெயரை தடவியபடி, “இந்த தேசத்தையாண்ட எந்த அரசனுக்கும் கிடைக்காத பாக்கியம், இந்த ஹொய்சால தேசத்து மன்னனுக்கு கிடைக்கப் போகிறது.” என்றார்.

‘விளங்கவில்லை குருவே, என சீடர்களிலொருவன் கேட்க, “இம்மன்னனுக்காக அந்த அருணாசலம் வானிலிருந்து மண்ணில் இறங்கிவரப் போகிறது. பிறப்பேயற்ற அது, இம்மண்ணில் பிறக்கின்ற உயிர்களுக்கான எக்கடமையிலும் சிக்காத அது, இம்மன்னனுக்காக காலாகாலத்திற்கும் ஒருகடமையை செய்ய, வல்லாளப் பட்டினத்திற்கு வரப் போகிறது. அதுவரை காலம், இம்மன்னன் வீரவல்லாளனுக்கு உடன் நிற்க வேண்டும். ஆனால் நிற்குமாவென்றுதான் தெரியவில்லை” என தரைபார்த்துப் பேசினார்.

“எனக்கும்தான் தெரியவில்லை” என்பதுபோல தென்திசைவானில், இடிஇடித்து மின்னல் வெட்டியது.

(தொடரும்)

The post ராஜகோபுர மனசு appeared first on Dinakaran.

Related Stories: