பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

அம்மாக்கள் செய்த பல விஷயங்களை நாம் இப்போது கடைபிடிப்பதை விட்டுவிட்டோம். காரணம், அதை செய்ய நம்மிடம் நேரம் இருப்பதில்லை. ஆனால் அதையே யாராவது செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றுதான் நம் மனம் ஏங்கும். அதை நன்கு புரிந்துகொண்டுள்ளார் சரண்யா. இவர் நம் பாட்டி நமக்கு வீட்டில் காய்ச்சி தயாரிக்கும் தேங்காய் எண்ணெய், நலங்கு மாவு, சீயக்காய் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை அதே பாட்டி முறையில் தயாரித்து ‘ஹெர்ப்ஸ் அண்ட் எசென்ஸ்’ என்ற பெயரில் வழங்கி வருகிறார். ‘‘நான் பிறந்தது படிச்சது எல்லாம் சென்னையில்தான்.

பொறியியல் பட்டப்படிப்பு முடிச்ச பிறகு எட்டு வருஷம் சாஃப்ட்வேர் துறையில் வேலை பார்த்தேன். அதன் பிறகு திருமணம், குழந்தை என்று வந்த பிறகு குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதால் வேலையை ராஜினாமா செய்தேன். வேலைக்குப் போன எனக்கு வீட்டில் சும்மா இருக்க பிடிக்கல. அதனால ஒரு டியூஷன் சென்டரை ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட எட்டு வருஷம் அதனை நடத்தி வந்தேன். அந்த சமயத்தில்தான் கோவிட் பாதிப்பு ஏற்பட்டது. எல்லோரும் ஆன்லைனுக்கு மாறினாங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்பதால் நான் என் டியூஷன் சென்டரை தொடர முடியாமல் போனது.

கோவிட் என்பதால், எல்லோரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழல்… என்ன செய்றதுன்னே தெரியல. அதனால் வீட்டில் இருந்தபடியே சுமார் 100 பேருக்கு உணவினை தயாரித்து கொடுக்க திட்டமிட்டேன். பலருக்கு சரியான உணவு கிடைக்க சிரமமாக இருந்தது. அதனால் அதை நான் வாலன்டியரா செய்து வந்தேன்’’ என்றவர், முழுக்க முழுக்க ஆயுர்வேதப் பொருட்கள் தயாரிப்பில் இறங்க அவரின் மகள் தான் முக்கிய காரணம் என்றார். ‘‘பொதுவாக பெண்கள் என்றால் முடி உதிர்தல் போன்ற பிரச்னை இருக்கும். என் பொண்ணுக்கும் அந்தப் பிரச்னை இருந்தது. ஆனால் அவளுக்கு தலையில் ஒரு சில இடங்களில் வழுக்கையில் இருப்பது போல் இருந்தது. அதாவது, அந்த இடங்களில் முழுக்க முடி வளர்ச்சி இல்லாதது போல் இருக்கும்.

என் மகளுக்கு அதுவே பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. சரும நிபுணரிடம் காண்பித்த போது அவர் இது ஆட்டோ இம்யூன் நோய். சின்னக் குழந்தை என்பதால் ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் அவசியமில்லை என்று ெசால்லி சில மருந்துகளை பரிந்துரைத்தார். மேலும் சின்னக் குழந்தை என்பதால் தானாக சரியாகிடும் என்றும் கூறி இருந்தார். முடி உதிர்கிறது என்றால் உடனே நாம் முடி வளர நல்ல தேங்காய் எண்ணெய் இருக்கான்னுதான் தேடுவோம். நான் என் அம்மா, பாட்டி கறிவேப்பிலை, செம்பருத்தி எல்லாம் போட்டு வீட்டில் செய்த அதே தேங்காய் எண்ணெயை காய்ச்சினேன். அதைத்தான் என் மகளுக்கு பயன்படுத்தினேன். வீட்டில் உள்ள அனைவரும் அதையே பயன்படுத்த துவங்கினோம்.

தொடர்ந்து ஆறு மாசம் அந்த எண்ணெய் பயன்படுத்தியதில், என் மகளுக்கு முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடி வளர ஆரம்பித்தது. ஒருநாள் இரவு நேரம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, என் கணவர் என்னிடம் இந்த எண்ணெய் பற்றி கேட்டார். நானும் நம்முடைய பயன்பாட்டிற்கு தேவைப்படும் போது தயாரித்துக் கொள்வேன் என்றேன். அதற்கு அவர் உடனே ‘அந்த எண்ணெய் நன்றாக உள்ளது. நீ ஏன் அதை பிசினசா செய்யக்கூடாது’ன்னு கேட்டார். எனக்கும் அது நல்ல ஐடியாவாக இருந்தது. உடனே சாம்பிளாக என் நண்பர்கள், உறவினர்கள் என 30 பேருக்கு எண்ணெயை கொடுத்தேன்.

அவர்களும் அதற்கு நல்ல மதிப்பெண் தந்தார்கள். அதன் பிறகு என் இன்ஸ்டா பக்கத்தில் இது குறித்து பதிவு செய்தேன். அதைப் பார்த்து பலர் ஆர்டர் கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்படித்தான் எங்களின் ஹெர்ப்ஸ் அண்ட் எசென்ஸ் ஆரம்பிச்சது. இப்போது நாங்க 12 பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்’’ என்றவர், அவரிடம் உள்ள பொருட்கள் பற்றி விவரித்தார்.‘‘எண்ணெயில் தேங்காய் எண்ணெய், சின்ன வெங்காயம், பூண்டு, நெல்லிக்காய், பச்சைப்பயறு, கருப்பரிசி, பிளாக்ஸ் விதைகள், பாதாம், கடுகு, கருஞ்சீரகம், வெந்தயம், வெட்டிவேர், செம்பருத்தி, ஆவாரம்பூ, கறிவேப்பிலை, முருங்கை இலை, நொச்சி இலை என 30 பொருட்கள் சேர்த்துதான் இந்த எண்ணெயை தயார் செய்கிறோம்.

இவை அனைத்தும் என் அம்மா, பாட்டி மற்றும் மாமியார் சொன்ன பொருட்கள்தான். சின்ன வயசில் என் பாட்டி இதெல்லாம் போட்டு வீட்டில் எண்ணெய் காய்ச்சுவதைப் பார்த்திருக்கேன். அதைத்தான் அவங்க தலைக்கு தடவி விடுவாங்க. அதன் பிறகு காலம் மாற இதை வீட்டில் தயாரிக்க யாருக்கும் நேரமில்லை. கடையில் கிடைக்கும் எண்ணெயை பயன்படுத்த ஆரம்பித்தோம். ஆனால் அதே குணமுடைய எண்ணெயை யாராவது செய்து கொடுத்தால் நாம் வாங்க தயாராகத்தான் இருக்கிறோம். அதுதான் என்னுடைய சக்சஸ் ஆக மாறியது. ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இதனை தயாரித்து வந்தேன்.

ஒரு பேட்ச் செய்ய ஆறு நாட்கள் ஆகும். வீட்டிலேயே ஒரு பாத்திரத்தில் இதனை காய்ச்சினேன். பேக்கிங், டெலிவரி என என் மாமியார், மகன், மகள், என் கணவர் என குடும்பமாகத்தான் உழைத்தோம். அதன் பிறகு ஆர்டர் வர ஆரம்பித்ததும், வீட்டில் செய்ய முடியாது என்பதால் தனியாக இடம் பார்த்து ஒரு யூனிட் அமைத்தோம். இப்போது இங்கு ஐந்து பெண்கள் வேலை பார்க்கிறாங்க. இதைத் தொடர்ந்து போட்லியை அறிமுகம் செய்தோம். உடல் வலிக்கு மூலிகைகளை எல்லாம் மூட்டை போல் கட்டி சூடு செய்து ஒத்தடம் தருவது வழக்கம். அதே முறையில் நான் சளிக்கும் இந்த போட்லியை செய்தேன். என் மாமியார் சளி ஏற்பட்டால், ஒரு கசாயம் வைத்து தருவார். உடனடி ரிலீஃப் கிடைக்கும்.

அதையே நான் ஒத்தடத்திற்கும் பயன்படுத்தினேன். இதனால் சளி முழுமையாக குணமாகும்னு சொல்ல முடியாது. ஆனால் சளி ஏற்படும் முன் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, மூக்கடைப்பு, தலையில் நீர் கோர்த்து பாரமாக இருக்கும். அந்த சமயத்தில் இந்த போட்லி கொண்டு ஒத்தடம் வைத்தால் ஓரளவு நமக்கு ரிலீஃப் கிடைக்கும். மேலும் உடல் வலிக்கு இந்த ஒத்தடம் மிகவும் நல்ல பலனை அளிக்கும். அடுத்து மூக்கடைப்பு குறைக்க ஆவி பிடிக்கும் எண்ணெயும், களிம்பும் தயாரிக்கிறோம். இப்போது சீயக்காய் பயன்பாடு முற்றிலும் குறைந்துவிட்டது. அதனையும் அறிமுகம் செய்திருக்கிறோம்.

அடுத்து சாம்பிராணி பவுடர், நலங்கு மாவு, தைலம், சாம்பிராணி கப் போன்றவற்றையும் விற்பனை செய்கிறோம்’’ என்றவர் காஸ்மெடிக் பொருட்கள் விற்பனையில் விருப்பம் இல்லை என்று தெரிவித்தார்.‘‘நான் முழுக்க முழுக்க இலை, வேர் என்று மூலிகைப் பொருட்களை மட்டுமேதான் பயன்படுத்தி வருகிறேன். இவை எல்லாம் நாம் முன்பு பயன்படுத்திய பொருட்கள்தான். அவற்றை நான் மீண்டும் கொடுக்கிறேன். காஸ்மெடிக் பொறுத்தவரை எனக்கு அதற்கான காம்பினேஷன் தெரியாது. நான் அது குறித்து படிக்கவில்லை. அதனால் நான் அந்த துறையில் கவனம் செலுத்தவில்லை. மேலும் நான் விற்பனை செய்யும் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு தெரிந்தவை.

அவை இப்போது கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் இதனை வாங்க முன்வருகிறார்கள். இதே போல் மேலும் ெபாருட்களை அறிமுகம் செய்யும் எண்ணம் உள்ளது. அதற்கு முன் எனக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ஒரு வாடிக்கையாளர் என் பொருளை வாங்கினால், அவர்கள் மீண்டும் மீண்டும் அதை வாங்க வேண்டும். அதனால் பொருளை நான் தரமாகவும் எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் கொடுத்து வருகிறேன். தற்போது முகநூல் மற்றும் யுடியூப்பில் இதனை தயாரிக்கும் முறைகளையும் விவரித்து வருகிறேன். எனக்கு 30, 50 பொருட்கள் தயாரிக்கும் எண்ணமில்லை. 10 பொருட்களாக இருந்தாலும் அது தரமானதா இருக்கணும்’’ என்றார் சரண்யா.

தொகுப்பு:ஷன்மதி

The post பத்தென்றாலும் அது தரமா இருக்கணும்! appeared first on Dinakaran.

Related Stories: