உன்னத உறவுகள்-சமயத்தில் உதவும் உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

ஒரு வாரம் நடைபெற்ற திருமணங்கள் பற்றியும், வீடு நிறைய காணப்பட்ட மனிதர்களும், அன்று காணப்பட்ட சந்தோஷமான சம்பவங்களும் இன்று நாம் சொன்னால்தான் புரியும். இன்று காணப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள் ரொம்ப வந்திராத காலகட்டம். நகரங்களில் ஒரு சில இடங்களில் அடுக்குமாடிக் கட்டடங்கள் இருந்தன. ஆனால் சிறிய ஊர்களில் வீடுகள் பெரிதாக காணப்பட்டது. இன்றைய காலகட்டம் போல தனி அறைகள் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. பெரிய கூடங்கள், அதை ஒட்டிய தாழ்வாரங்கள், சமையலறை, படுக்கையறை என வீட்டிற்குப் பொதுவாக இருக்கும். இரண்டு, மூன்று அறைகள் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு அறை என்றெல்லாம் தரப்படவில்லை.

தனியாக எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டாது. பெரியவர்கள் என்ன சொல்வார்களோ அதையே பிள்ளைகள் செய்தார்கள். ஒரே வீட்டில் இரண்டு மூன்று குடும்பங்கள் தனித்தனி போர்ஷனில் வசித்தார்கள். வீட்டில் ஒரு விசேஷம் என்றால் அனைவருக்கும் கொண்டாட்டம்தான். வாரத்திற்கு கல்யாண வீட்டுச் சமையல் சாப்பாடுதான் எல்லோருக்கும். பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அவர்களுக்குள் பேசி காரியங்களை சிறப்பாகச் செய்தார்கள். சிறு வயது பிள்ளைகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து திருமணம் முடியும் வரை கொண்டாட்டம் போடுவார்கள். இன்னொரு வீட்டுக் கல்யாணத்திற்கு பல நாட்கள் முன்பே பிள்ளைகள் லீவு சொல்லி விடுவார்கள்.

பெண் பார்க்க வந்தால், குறிப்பிட்ட வீட்டில் கேசரி, பஜ்ஜி போன்ற தின்பண்டங்கள் செய்வார்கள். அது குடுத்தனம் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் வந்து சேரும். ‘கேட்டரிங் சர்வீஸ்’ அப்பொழுதெல்லாம் ரொம்பக் கிடையாது. நாமே ஆட்களை வைத்து ஏற்பாடு செய்வது அல்லது அனுபவமிக்க சமையல்காரரிடம் மொத்தமாகப் பேசி விடுவார்கள். திருமண தினங்களில் இரண்டு, மூன்று நாட்களுக்கு சத்திரத்திலோ, கல்யாண மண்டபத்திலோ அதனருகிலோ சமையல் சாப்பாடுகள் நடைபெறும்.

அப்பொழுது ‘டைனிங் டேபிள்’ முறை கிடையாது. தரையில் பாய் விரித்து சாப்பிடும் முறைதான். இட வசதிக்கேற்றபடி பல பந்திகள் நடைபெறும். ஒரு பெரிய வீட்டில் 3, 4 குடுத்தனக்காரர்கள் இருப்பார்கள். வீட்டின் பின்புறம் தனியாக கொட்டகை அமைத்து விறகடுப்பில் அனைத்தும் செய்வார்கள். எல்லா குடும்பத்துக் குழந்தைகளும் ஒன்று சேர்ந்து குறுக்கும் நெருக்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள். வீடு முழுவதும் தின்பண்டங்கள் வாசனை மணக்கும். வயதிற்கேற்ற உறவுமுறை பெரியோர்களால் சொல்லித் தரப்படும். அடையாளம் சொல்ல வேண்டுமானால் முன் வீட்டு அண்ணன்-அக்காள், பின் வீட்டு மாமா-மாமி, நடு வீட்டு பாப்பா என்றுதான் சொல்வார்கள்.

உன் வீடு, என் வீடு என்று பேசாமல் அனைத்துக் குடும்பங்களும் ஒன்றாக செயல்பட்டன. இன்று ஒரு குடும்பத்திலேயே சிறிய விஷயங்களுக்குக்கூட வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன. அதுவும் வெவ்வேறு குடும்பத்தவர் ஒன்றாகக் குடியிருப்பதன் மூலம் ஒரே குடும்பமாக மாறி செயல்பட்ட காலங்கள்தான் நம் சிறுபிள்ளை காலகட்டம். கல்யாண மண்டபத்தில் மொத்தமாக பணம் கட்டி விட்டால் மாக்கோலம் கூட இன்று அவர்களே போட்டு விடுகிறார்கள். அன்று கல்யாண மண்டபம் முழுவதும் உறவினர்கள், மணப்பெண்ணின் தோழிகள் என அனைவரும் ஒன்று கூடி மாக்கோலம் போடுவார்கள். ஒன்றாகக் கூடி பழகுவதும், பெரியவர்களிடமிருந்து பல கலைகளை கற்றுக் கொள்வதும், விட்டுக் கொடுப்பதும், சுறுசுறுப்புடன் இயங்குவதும் என அனைத்தும் குடும்பங்கள் மூலமே வழிவழியாக வந்தன.

சொல்லப் போனால் உறவுகளைவிட ஒன்றாகக் குடியிருப்பவர்கள் நம்மைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். உறவினர்கள் அடிக்கடி வந்து போனாலும், உடன் வசிப்பவர்களுக்கு அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் தெரியவரும். காரணம், மொத்தமாக தபால்காரர் அனைத்து வீட்டுக் கடிதங்களையும் தபால்பெட்டியில் ஒன்றாகப் போட்டு விடுவார். யார் வீட்டுக்கு எங்கிருந்து கடிதம் வந்திருக்கிறது என்பதைக்கூட அனைவரும் அறிவர். கைப்பேசிகள் கிடையாது என்பதால் ஃபோன் உள்ளவர்கள் வீட்டில் நட்பு வைத்திருப்பார்கள். திடீரென யார் வீட்டுக்காவது உறவினர் வந்துவிட்டால் அடுத்த ‘போர்ஷன்’காரர்கள் குழம்பு, கறி போன்ற சாப்பாட்டு அயிட்டங்களை தானே கொண்டு வந்து வைத்து விடுவார்கள். அதுபோல், ஏதேனும் சிறப்பாக பதார்த்தம் செய்தால் எல்லா போர்ஷனுக்கும் வந்து விடும்.

சிலருக்கு கிராமத்திலிருந்து பொருட்களும் வரும். அதை அவர்கள் அனைத்து வீட்டிற்கும் பங்கிட்டு கொடுப்பார்கள். அதே போல் ஒருவர் வீட்டில் திருமண நிகழ்வு இருந்தால், திருமணம் முடியும் வரை அவர் வீட்டில்தான் சாப்பாடு. திருமணத்திற்கு மட்டும் இல்லை. திருமணம் முடிந்து மண்டபம் காலி செய்வதிலும் அனைவரும் முடிந்த உதவிகளை செய்வது வழக்கம். கல்யாணத்திற்கு வாங்கிய பொருட்களில் மீந்து போனது முதல் பட்சணங்கள், காபி டிக்காஷன் வரை அனைத்தையும் வீட்டு உறுப்பினர் எண்ணிக்கைக்கேற்றவாறு அனைத்து குடுத்தனக்காரர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடுவார்கள். என்ன ஒரு அற்புதமான காலம்!

ஒருவர் வீட்டில் யாரேனும் அவசியமாக வெளியூர் போக நேர்ந்தால் பக்கத்தில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டுக் குழந்தைகளை பார்த்துக் கொள்வார்கள். தங்கள் பிள்ளைகளுடன் அவர்களையும் பிள்ளைகள் போன்றே கவனித்துக் கொள்வார்கள். வேளா வேளைக்கு டிபன், சாப்பாடு, நொறுக்குத் தீனி என அப்படி ஒரு கவனிப்பு இருக்கும். அவர்களின் குழந்தைகளை விட இவர்களிடம் அனுசரிப்பு கூடவே இருந்ததாம். விருந்தோம்பல் என்பது அனைவராலும் கடைபிடிக்கப்பட்டது. பிறருக்கு உதவுவதில் யாரும் செலவு கணக்கு பார்க்காமல் இருந்திருக்கிறார்கள். பிள்ளைகளும் தங்கள் வீட்டைவிட அதிகம் அங்குள்ள பிள்ளைகளுடன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டிருக்கிறார்கள்.

ஒரே கட்டடத்தில் குடியிருப்பவர்கள் ஒருவருக்கொருவர் உறவாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்திலும் முதலில் ஆலோசனை தருவதும், பிரச்னைகளை தீர்ப்பதிலும், ஒன்றாகக் கூடி மகிழ்வதிலும் அந்தக்கால அக்கம் பக்க மனிதர்களை மிஞ்சவே முடியாது. நட்பாக இருந்து உறவாக அமைந்தவர்கள்தான் அத்தகைய மனிதர்கள். அவர்களை ஏன் நாம் உறவு என்று சொல்லக் கூடாது. அவர்களின் முதல் உதவிக்கு பிறகுதான் சொந்தங்களுக்கு விஷயங்கள் தெரியவரும்.

ஆக, இவர்களை சமயத்தில் கை கொடுக்கும் உறவுகள் என்று சொல்வதில் தப்பில்லை.அடுக்குமாடிக் கட்டடங்களில் வசிக்கும் நாம் பக்கத்து வீட்டில் நடப்பது கூட தெரியாமல்தான் இன்று வசிக்கிறோம். அருகில் யாருக்காவது ஆபத்து என்றால் உதவக்கூட பயம். காரணம், அதனால் நமக்கு ஏதாவது பிரச்னை வந்து சேருமோஎன்று. அன்பும் பாசமும் பந்தமும் இருந்த காலத்தில் ஏழ்மை கூட நம்மை பாதிக்கவில்லை. இன்று எல்லாம் கிடைத்தும் அன்பு கிடைக்காமல் அலைகிறோம். பாசம் இல்லாமல் பாதிக்கப்படுகிறோம். உலகில் அன்பினால் சாதிக்க முடியாததை எதனாலும் சாதித்து விட முடியாது.

சரஸ்வதி ஸ்ரீ நிவாசன்

The post உன்னத உறவுகள்-சமயத்தில் உதவும் உறவுகள் appeared first on Dinakaran.

Related Stories: