கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!

வாசகர் பகுதி

நன்றி குங்குமம் தோழி

*இங்கிலாந்து நாட்டில் நவம்பர் 25 முதலே கிறிஸ்துமஸ் லைட்டிங் என்ற பெயரில் அலங்கார விளக்குகள் மக்கள் கூடும் இடங்களில் ஜொலிக்கும். பிரபல தலைவர்கள், சினிமா நட்சத்திரங்களை அழைத்து லைட்டிங்கின் ஆரம்ப விழாவையே பெரு விழா போல நடத்துவர். பல பாடல்களில் ஜொலிக்கும் இந்த அலங்கார மின் விளக்குகளை வேடிக்கை பார்ப்பதற்கென்றே பொது மக்கள் வருகின்றனர்.

*ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் நார்வே நாட்டு அரசாங்கம் கிறிஸ்துமஸ் மரம் ஒன்றை இங்கிலாந்து அரசுக்கு பரிசாக வழங்குவது வழக்கம். இந்த நடைமுறை இரண்டாம் உலகப் போருக்குப் பின்பிருந்தே வழக்கத்திலுள்ளது. இந்தப் போரில் நார்வேக்கு இங்கிலாந்து உதவியதால் நன்றிக்கடன்.

*நம்ம ஊரு உரியடி திருவிழா போன்று மெக்ஸிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஒரு மண் பானை நிறைய இனிப்புகள் நிரப்பி அதை கட்டித் தொங்க விடுவர். குழந்தைகள் தடியால் அடித்து பானையை உடைக்க முயற்சிப்பர். பானை உடைந்ததும் இனிப்புகள் கொட்டும். சந்தோஷமாக அனைவரும் கை தட்டி மகிழ்வர்.

*ஜெர்மனியில் ஜிஞ்சர் பிரெட்மேன் என்ற குக்கீஸை கிறிஸ்துமஸ் விருந்துக்கு தயாரிப்பர். இதற்கு ‘பெர்னஸி’ என்று பெயர். பாதாம் மாவில் சர்க்கரை சேர்த்துக் குழைத்து காய்
கறிகள், பழ வகைகள் கலப்பர். பல்வேறு உருவங்கள் செய்து உண்பதற்கு ஏற்றபடி செய்து வைப்பர். இதற்கு ‘மார்ஸிமான்’ என்று பெயர்.

*போலந்து நாட்டு மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சாப்பிடும் வேபர் பிஸ்கெட்களில் மதம் சம்பந்தமான காட்சிகளை பொரித்து மத குருமார்களின் ஆசி பெறுவர். இப்படி தயாரித்த வேபர் பிஸ்கெட்களை மற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிசுப் பொருட்களாக அனுப்புவர். கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் மாலை குடும்பம் குடும்பமாக இந்த வேபர்களை வைத்து பிரார்த்தனை நடத்துவர்.

*ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் ‘டர்டே’ என்ற ரொட்டி பிரபலம். இது பல மடிப்புகள் கொண்டதாக இருக்கும். குழந்தை இயேசுவை பல மடிப்புகளுடைய துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்ததை இந்த ரொட்டி நினைவுறுத்துவதாக நம்புகின்றனர்.

தொகுப்பு: ச.லெட்சுமி, தென்காசி.

The post கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்! appeared first on Dinakaran.

Related Stories: