பெண்ணாதிக்கம் என்பது பெண் சுதந்திரமல்ல…

நன்றி குங்குமம் தோழி

பாலின பேதங்கள் ஒரு பார்வை

பெண் சுதந்திரம் என்பது இங்கு நிறைய பெண்களால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவர்களின் தவறான புரிதலால், இதை ஆண்களுக்கும் சரியாக கொண்டு சேர்க்க இயலாமல் போகிறது. பெண் எவ்விதத்திலும் ஆணுக்கு தாழ்ந்தவளில்லை, அவள் எங்கும் இரண்டாம்தார பிரஜையாக உணர வேண்டியதில்லை. அவள் தனக்கான முடிவுகளை தானே எடுப்பதற்கான சுதந்திரம் தனக்குண்டு என்பதை முன்னிருத்துவதின் மூலம்தான் நாம் ஆணாதிக்கத்தை ஒழிக்க இயலுமே தவிர, ஆணாதிக்கத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லி, தான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், இங்கு இருபாலாரிடையேயும் புரிதல் வருவதற்கான வாய்ப்பும் இல்லை, மேலும் மேலும் இங்கு உயர்த்தலும் தாழ்த்தலும்தான்
நடந்து கொண்டேஇருக்கும்.

பெருவாரியாக நம் சமூகத்தின் குடும்பங்களில் ஆணாதிக்கம்தான் வழிவழியாக இருந்து கொண்டிருந்தாலும், நிறைய குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கமும் இருக்கத்தான் செய்கிறது. அதுவும் பெண் சுதந்திரம் என்ற பெயரில். சுதந்திரம் என்றாலே பொறுப்புகளுடன் வருவதுதான் என்பதனை ஏனோ நிறைய பெண்கள் மறந்துவிடுகிறார்கள். எனக்கு உரிமைகள் உண்டு. ஆனால் கடமைகள் இல்லை என்பது போல்தான் இருக்கிறது இவர்களின் எண்ணங்கள்.

குடும்பம் என்று வந்துவிட்டாலே அங்கு பலவிதமான பொறுப்புகள் ஏற்கப்படத்தான் வேண்டும். இருவராலுமோ, இல்லை மற்ற உறவுகளுடன் இருந்தால் பெரியவர்கள் அனைவராலுமோ. சுத்தம் செய்யும் வேலைகள், சமையல் வேலை, பணம் ஈட்டும் வேலை, குழந்தைகள் இருந்தால் அவர்களையும் கவனிக்கும் வேலை என்று பலவகையான பொறுப்புகள் ஏற்கத்தான் வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய சமூகத்தில், நிறைய குடும்பங்களில், ஒரு பெண் தனக்கான அத்தனை உரிமைகளையும் எடுத்துக்கொள்கிறாள்.

படித்திருந்தாலும், திருமணத்திற்குப் பிறகு வேலைக்குப் போவதும் போகாமல் இருப்பதும் அவள் விருப்பமாக இருக்கிறது. அதே சுதந்திரம் அவள் கணவனால் எடுத்துக்கொள்ள முடியுமா என்றால், முடியாது. உத்தியோகம் புருஷ லட்சணம் என்பதாக அவன் வேலைக்கு சென்றே ஆக வேண்டும், பொருள் ஈட்டியே ஆக வேண்டும். சரி, வேலைக்குப் போகவில்லை. வீட்டு வேலைகள் யார் செய்வது என வந்தால், பெண்கள்தான் சமைக்க வேண்டுமென யார் சொன்னது? வீட்டு வேலைகள் செய்வதற்கா திருமணம் செய்தீர்கள் என்னை என்று கேட்க வேண்டியது. கணவனின் வருமானம் குறைவோ கூடுதலோ அதைப்பற்றியெல்லாம் கவலை இல்லை. தனக்கு வேண்டியதெல்லாம் அவன் செய்தேயாக வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அப்படி அவனால் இயலாவிட்டால், அவனை அவமானப்படுத்துவது என நீள்கிறது வாழ்க்கை சில இல்லங்களில்.

எப்படி நிறைய பெண்களுக்கு தன் விருப்பத்திற்கு வெளியில் செல்வதற்கோ, தோழர்களை சந்தித்து மகிழ்வாக சில நிமிடங்கள் கழிப்பதற்கோ, தனக்கான சில செலவுகளை செய்து கொள்வதற்கோ இங்கு சுதந்திரம் இல்லையோ, அதே போல் நிறைய ஆண்களுக்கும் இவை மறுக்கப்படுகின்றன அவரவர் மனைவிகளால். தனக்கு மறுக்கப்படுவதனால் கூட இந்த நிலை இல்லை, தனக்கு இவையெல்லாம் மறுக்கப்படாமல் இருந்தாலும், கணவன்மார்களை தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் சாமர்த்தியமாம் இது.

வேலைக்குப் போக வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும், வீட்டு வேலைகளில் பங்கெடுக்க வேண்டும். வேறு எந்த உரிமையும் இல்லை. உனக்கு எதற்கு நண்பர்கள், என்னை விட்டு உனக்கென்ன பொழுதுபோக்கு, ஏன் நிறைய வீடுகளில் அவனின் பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் கூட ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். பெண்கள் ஒடுக்கப்படுவது ஆணாதிக்கத்தால் என்றால், ஆண்கள் ஒடுக்கப்படுவதும் இங்கும் அங்குமாக நிறைய இடங்களில் நடந்து கொண்டுதான் உள்ளது.

இது பெண்ணாதிக்கம் இல்லையா? ஆண்களுக்கு இந்த சமூகத்தில் ஒரு பிம்பம் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அவன் மனதாலும், உடலாலும் பலம் பொருந்தியவன் என்று. ஆண் பிள்ளைகள் அழக்கூடாது என்று. எத்தனை அடிகள் அவன் மேல் சரமாரியாக விழுந்தாலும், அவன் வெளியில் கர்வமாகவே சுற்றி வருவான். ஏனெனில் அவன் ஆண். அவன் படும் துன்பங்களை வெளியே கூறினால், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் துன்பங்களை அவன் வெளியே கூறினால் அவன் ஆண்மையே கேலிக்குள்ளாக்கப்படும்.

பெண்கள் பலவீனர்கள், பாவப்பட்ட ஜென்மங்கள் என்ற பிம்பத்துடன் சுற்றுவதால், அவளுக்கு தான்படும் துன்பங்களை, வேதனைகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்வதில் ஒரு பிரச்னையும் ஏற்படுவதில்லை. நெருங்கிய உறவுகளிடம், தோழிகளிடம் என்று மட்டுமில்லை, அவள் விரும்பினால் ஊருக்கே சொல்லலாம். அவள் மீது பரிதாபப்படுவதற்கு பல மக்கள் இருக்கிறார்கள். ஆனால் அதையே ஒரு ஆண் செய்ய முடியாமல் போவதற்கு காரணங்கள் இருக்கின்றன. உறவும், நட்பும், இவ்வூறும் அவனை கேலி செய்யும். ஒரு பெண்ணை அடக்கி வைக்கத் தெரியல, நீயெல்லாம் ஒரு ஆம்பளையானு கேட்கும். ஓர் ஆணின் கை ஓங்கி இருந்தாலே அவன் மதிக்கப்படுகிறான். நம் ஆணாதிக்க சமூகம் அவனுக்கும் முள்வேலிகளை போட்டு முடக்கித்தான் வைத்திருக்கிறது.

குழந்தைகளும் பிறந்துவிட்ட பிறகு விவாகரத்து என்ற ஒரு முடிவை பெண்ணால் எடுக்கும் அளவுக்கு ஒரு ஆணால் அத்தனை சுலபமாக எடுக்க இயலாது. ஏனெனில், ஒன்று அவனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஜீவனாம்சம், அதைவிட முக்கியமாக குழந்தைகள் வளர்ந்து ஒரு முடிவெடுக்கும் வரை அவர்கள் தங்கள் அம்மாக்களிடமே ஒப்படைக்கப்படுவார்கள். அப்பா என்பவன் அதற்குப் பிறகு பிள்ளைகளை பார்ப்பதும் பேசுவதும் கூட அம்மா தயை செய்தால் மட்டுமே நடக்கும்.

இங்கு பிரச்னை உண்மையில் ஆணா, பெண்ணா என்பதல்ல. ஒரு பாலின சமத்துவ சமுதாயம் உருவாக, மனிதராக பிறந்த அத்தனை உயிர்களும், ஆதிக்க மனப்பான்மையிலிருந்து வெளிவர வேண்டும். நம் முன்னோர்களிடமிருந்து நாம் கற்ற ஆண் என்பவனின் இலக்கணம் இது, பெண் என்பவளின் இலக்கணம் இது என்ற துரு ஏறிப்போன ஆயுதங்களை வீசியெறிந்துவிட்டு, அனைவரும் மனித இனம், ஆணாகவோ, பெண்ணாகவோ, இல்லை வேறு பாலினத்தினராகவோ பிறந்திருப்பது அவரவர் இயற்கை வழி என்பதை புரிந்து, எந்த பாலினத்தவராக பிறந்தாலும், பிறப்பில் மேன்மையும் இல்லை தாழ்மையும் இல்லை, நாம் வாழும் முறையில், மற்றவரை நமக்கு சமமாக நடத்தும் பண்பில்தான் நாம் உயர வேண்டும் என்பதை உணர்ந்து வாழ்தலே பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்க உதவும்.

பணம் சம்பாதிப்பதாகட்டும், வீட்டு வேலைகளாகட்டும், சமையல் வேலையாகட்டும், வெளி வேலைகளாகட்டும், குழந்தை வளர்ப்பாகட்டும், பெற்றோர்களை கவனிப்பதாகட்டும், எந்த பொறுப்பாக இருந்தாலும், பாலின பேதமின்றி பகிர்ந்து செய்தலில் பல நன்மைகள் உண்டு. நம்மை பார்த்து வளரும் நம் பிள்ளைகள் பாலின பேதங்களில் இருந்து வெளிவருவார்கள். அவர்கள் வகுத்துக்கொள்ளும் வாழ்வில் சமத்துவம் நிலவும்.அத்தனை வேலையும் இருவரும் அறிந்து வைத்திருப்பதால், ஒருவருக்கு உடல் நலக்குறைவோ இல்லை, வேறு ஏதாவது வேலையில் இருந்துவிட்டாலோ மற்றவருக்கு அது பெரிய பளுவாக தெரியாது. இருவரும் அத்தனை வேலைகளையும் செய்வதால், என் வேலைதான் கடினம், உன் வேலை சுலபம் என்ற வாக்குவாதங்கள் ஏற்படாது. இருவரும் பணம் ஈட்டுவதால், பணம் சம்பாதிப்பவர்தான் பெரிய ஆள் என்ற அகந்தை இருக்காது.

என்றாவது பிரிய நேர்ந்தாலோ, இல்லை சந்தர்ப்பவசமாக ஒருவர் இறந்துவிட்டாலோ இன்னொருவருக்கு துக்கம் இருக்கலாம், ஆனால் இனி இக்குடும்பத்தை எப்படி நிர்வகிக்கப் போகிறோம் என்ற பயம் வராது. இருவரும் தங்களுக்குள் சமத்துவம் பாராட்டுவதால், ஆதிக்கம் அங்கு உடைந்து போக சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. தாழ்வுமனப்பான்மைகளும், தன்னம்பிக்கை குறைவும்தான் பல உறவுகளில் ஆதிக்கம் நிலவுவதற்கு காரணிகளாக இருக்கின்றன.

எல்லாவற்றிலும் சமமாக பங்கெடுக்கையில் இம்மாதிரி பிரச்னைகள் காணாமல் போகும். மற்றவர் மேல் ஆதிக்கம் செலுத்துவதில் ஒரு பெருமையும் இல்லை. அது நாம் அடிமைப்படுத்துபவர்களை மட்டும் துன்புறுத்தாது, நம்மையும் சேர்த்தே பாதிக்கும். உண்மையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஆதிக்கம் என்பது ஒரு மனப்பிறழ்வு. எங்கோ நாம் அடிமைப்படுகிறோம் அதன் விளைவாக நம்மால் இயன்ற இடத்தில் நம்மைவிட எளியவர்களிடம் நாம் ஆதிக்கம் செலுத்தி திருப்தியடைந்து கொள்கிறோம்.

எனக்கும் அடிமைகள் இருக்கிறார்கள் என்று. இல்லையெனில், நம்மீது நமக்கு ஏதோ குறைபாடு தெரிகிறது. அதை மற்றவர்கள் உணர்ந்துவிட்டால், நம்மை மதிக்காமல் போய்விடுவார்களோ என்று அச்சம் கொள்கிறோம். தன்னம்பிக்கை கொண்ட மனிதர்கள், தன்னைத் தானே மதிக்கும் மனிதர்கள் மற்றவரின் மேல் ஆதிக்கம் செலுத்த முற்படமாட்டார்கள்.

(தொடர்ந்து சிந்திப்போம்!)

தொகுப்பு: லதா

 

 

The post பெண்ணாதிக்கம் என்பது பெண் சுதந்திரமல்ல… appeared first on Dinakaran.

Related Stories: