ப்ளம் கேக்கின் வரலாறு!

நன்றி குங்குமம் தோழி

கிறிஸ்துமஸ், நியூ இயர் கொண்டாட்டங்கள் என்றாலே அங்கு முதலில் இடம்பெறுவது கேக்தான். அதுவும் பாரம்பரியமான முறையில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக். இந்த கேக்கை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காகவே மிகவும் பாரம்பரிய முறையில் இன்றும் தயாரித்து வருகிறார்கள். உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் ப்ளம் கேக் தயாரிப்பை கிறிஸ்துமஸ் இரவின் சில மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிடுவார்கள். அதில் சேர்க்கப்படும் உலர் பழங்களை மதுபானத்தில் கலக்கும் நாள் என்று கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

ஏன் இந்த கேக் மட்டும் இவ்வளவு நாட்களுக்கு முன்பே தயாரிக்கப்படுகிறது? அப்படி என்ன இந்த கேக்கில் சிறப்புள்ளது. இதனை ஏன் ப்ளம் கேக் என்று குறிப்பிடுகிறோம். பெயருக்கு ஏற்ப இந்த கேக்கில் ப்ளம் பழங்கள் இருப்பதில்லை. இது போன்ற கேள்வி களுக்கு விடை ெதரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்கு பின் ப்ளம் கேக்கிற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு உள்ளது.

மிடிவல் இங்கிலாந்து எனப்படும் இங்கிலாந்தின் இடைக்காலத்தின் போது இந்த ப்ளம் கேக் தயாரிப்பு ஆரம்பமானது என்று குறிப்பிடப்படுகிறது. அந்தக் காலக்கட்டத்தில் மக்கள் கிறிஸ்துமஸ் விழாவினை சில வாரங்களுக்கு முன்பிருந்தே கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர். இந்த விழா கொண்டாட்ட நாட்களில் சிறப்பான உணவினை உண்ண வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். மேலும் அந்த உணவு ஒருவரின் வயிற்றை நிரப்புவதாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவினை தயாரிக்க திட்டமிட்டார்கள்.

அதில் முதலில் ஓட்ஸ், உலர் பழங்கள் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து கஞ்சி போன்ற உணவினை தயாரித்தனர். விழா தொடங்கிய நாளிலிருந்து கிறிஸ்துமஸ் ஈவ் வரையிலும் இந்த உணவுதான் அனைவராலும் உண்ணப்பட்டது. கிறிஸ்துமஸ் தின சிறப்பு உணவான இது நாளடைவில் ஓட்ஸுக்கு பதிலாக மாவு, வெண்ணெய் போன்ற பொருட்களைக் கொண்டு ஃபுட்டிங் போன்ற பதத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தக் கலவைகளை ஒரு துணியில் கட்டி அவித்து தயாரித்தனர். நல்ல வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் இருக்கும் பேக்கிங் உபகரணங்களை கொண்டு இந்தக் கலவையினை கேக் போன்ற வடிவத்தில் தயாரித்து உட்கொண்டனர்.

இவ்வாறு 16ம் நூற்றாண்டிற்குப் பிறகு இந்த உணவானது ப்ளம் கேக்காக உருவெடுத்திருக்கிறது. மாவு, வெண்ணெய், உலர் பழ வகைகள் கொண்ட இந்த தயாரிப்பில் வைன் போன்ற மது வகைகளும் சேர்க்கப்படுகிறது. ப்ளம் கேக் தயாரிப்பில் சேர்க்கப்படும் உலர் பழங்கள் சில வாரங்களுக்கு முன்பே ஊறவைக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் உலர் பழங்களை ஊறவைக்கும் செய்முறையை ஒரு சிறப்பான நாளாகவே கொண்டாடுகின்றனர்.

இதற்காக குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் ஒன்று கூடி எல்லா உலர் பழ வகைகளையும் பெரிய டிரேயில் கொட்டி அதில் மதுவினை ஊற்றி கலந்து விடுகின்றனர். கேக் தயாரிப்புகளை மிக்ஸ் செய்யும் இந்த சிறப்பு தினத்தை ‘ஸ்டிர்-அப்-சண்டே’ என்று அழைக்கின்றனர். சில வாரங்களுக்கு பின்னர் ஊறவைத்த உலர் பழ கலவையில் மாவு, வெண்ணெய் போன்றவற்றுடன் சேர்த்து தயாரிக்கப்படும் கேக்தான் ப்ளம் கேக்.

ப்ளம் கேக்கானது ஒவ்வொரு நாடுகளிலும் அவர்களின் விருப்பங்கள் மற்றும் சுவைக்கு தகுந்தவாறு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் ப்ளம் கேக்கினை உறவினர்கள், நண்பர்கள் என பல்வேறு நாடுகளையும், கண்டங்களையும் தாண்டியும் அனுப்பப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட இந்த ப்ளம் கேக் தயாரிப்பு பழக்கமானது தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பரவலடைந்தது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக்கின் பின் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு. 1883ம் ஆண்டில் மர்டாக் பிரவுன் (Murdock Brown) என்ற வணிகர் கேரளாவில் அமைந்துள்ள ராயல் பிஸ்கெட் ஃபேக்டரியின் (Royal Biskat Factory) நிறுவனரான மாம்பலி பாபு (Mamballi Bapu) என்பவரிடம் கிறிஸ்துமஸ் விழாவிற்காக சிறப்பான கேக் தயாரித்து தரும்படி கேட்டிருக்கிறார். மர்டாக், மாம்பலியிடம் தான் பிரிட்டனிலிருந்து கொண்டு வந்த சாம்பிள் ப்ளம் கேக்கை அவரிடம் கொடுத்துள்ளார்.

அந்த பேக்கரி நிறுவனர் அந்த கேக்கில் உள்ள மூலப்பொருட்களை கண்டறிந்து அதை அடிப்படையாக வைத்து தன்னுடைய ஸ்டைலில் தனித்துவமான ஒரு சுவையில் கிறிஸ்துமஸ் கேக்கினை தயாரித்து கொடுத்தார். அந்த சுவை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதுதான் இந்தியாவின் முதல் கிறிஸ்துமஸ் கேக் எனப்படுகிறது. அதன்பின்னர் இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் பல்வேறு செய்முறைகளில் ப்ளம் கேக் பல சுவைகளில் தயாரிக்கப்படுகிறது. இப்போதும் இந்த பேக்கரி கேரளாவில் பிரபலமாக உள்ளது.

இவ்வாறு இங்கிலாந்தில் தொடங்கி பல்வேறு நாடுகளுக்கும் பிரபலமடைந்த இந்த ப்ளம் கேக்கிற்கு பெயர் வரக் காரணம் ப்ளம் பழம் இல்லை. இங்கிலாந்தில் கேக் தயாரிப்பின் போது பயன்படுத்தப்பட்ட உலர் திராட்சை வகைகளை ‘ப்ளம்’ என்ற பெயரைக் கொண்டு அழைத்திருக்கின்றனர். எனவே, இதற்கு ‘ப்ளம் கேக்’ என்ற பெயர் வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்

The post ப்ளம் கேக்கின் வரலாறு! appeared first on Dinakaran.

Related Stories: