சென்னையில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுத்துபவர்கள் கண்டுபிடிக்க கடந்த 2 மாதத்திற்கு முன்பு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதில் ஒரு உதவி கமிஷனர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய குழுவினர் இடம்பெற்று தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் போதை பொருட்கள் விற்பவர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் மெத்தபெட்டைமன் போதை பொருட்கள் கை மாறுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஏற்கனவே அண்ணா நகர், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தி சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், கல்லூரி மாணவர்கள் சிலர் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று மாலை கொடுங்கையூர் பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு நுண்ணுறிவு பிரிவு போலீசார், 7 பேரை கைது செய்து 250 கிராம் மெத்தமெட்டைமன், இரண்டு செல்போன்கள், நவீன எடை போடும் இயந்திரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் 7 பேரையும் கொடுங்கையூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த பிளமிங் பிரான்சிஸ் (21), பூந்தமல்லி பகுதியை சேர்ந்த நவீன் (22), கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன் பிரணவ் (21), நந்தியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கிஷோர் (21), ஞானபாண்டியன் (22), கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (22), மணலி பகுதியை சேர்ந்த தனுஷ் (23) ஆகியோர் என்பது தெரிந்தது.
இதில் பிரவீன் பிரணவ், கிஷோர், நவீன் மற்றும் தனுஷ் ஆகிய 4 பேரும் சென்னையில் உள்ள பிரபல இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கின்றனர். ஞானபாண்டியன் சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வேதியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர்கள் சேர்ந்து கொடுங்கையூர் பின்னி நகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரவீன் பிரணவ் வீட்டில் வைத்து மெத்தபெட்டைமனை தயாரிக்க பல நாட்களாக திட்டமிட்டு அதற்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதற்காக இவர்கள் மெத்தபெட்டைமன் போதை பொருளை அருண்குமார், தினேஷ்குமார் மூலம் வாங்கியதும் மூலக்கூறுகளை ஆய்வு செய்து அதில் என்னென்ன சேர்க்க வேண்டுமோ குறிப்பிட்ட அந்த மூலக்கூறுகளை பாரிசில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்கு வேண்டும் எனக் கூறி சில கெமிக்கல்களை வாங்கியுள்ளனர். இதற்காக தனுஷ் என்பவர் 3 லட்ச ரூபாயை பிரவீனிடம் கொடுத்துள்ளார்.
அந்த பணத்தை வைத்து மெத்தபெட்டைமன் தயாரித்து விற்பனை செய்யும்போது லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று கருதி வீட்டிலேயே ஆய்வகத்தை வைத்து போதை பொருளை தயாரித்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களும் வேதியியல் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் என கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
இவர்கள் போதை பொருளை வாங்குவதற்காக அருண்குமார், தினேஷ்குமார் ஆகியோரை அணுகியபோது மேற்கண்ட 7 பேரையும் கைது செய்துவிட்டனர். மெத்தபெட்டைமன் தயாரிப்பு விஷயத்தில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது, கல்லூரி மாணவர்களுக்கு பொருளை கொடுத்த நபர்கள் யாரிடம் இருந்து வாங்குகிறார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
சென்னை அருகே பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி கைது செய்யப்பட்டனர். தற்போது வீட்டிலேயே போதை பொருளை தயாரித்து மாணவர்கள் சிக்கியுள்ளனர்.
The post வேதியியல் படிக்கும் மாணவரின் உதவியுடன் வீட்டிலேயே மெத்தபெட்டமைன் போதைப்பொருள் தயாரித்த 7 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.