தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: சென்னை தீவுத் திடலில் பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கு, கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட டெண்டரை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. தீவுத்திடலில் 50 பட்டாசுக் கடைகள் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், 46 கடைகள் பட்டாசு விற்பனையாளர்களுக்கும், மீதமுள்ள 4 கடைகள் கூட்டுறவு சங்கம் சார்பில் அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

டெண்டரை நியாயமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு கடந்த 13-ம் தேதி டெண்டர் விடப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசுகள் விற்பனை செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்த டெண்டருக்கு விண்ணப்பித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தினரின் டெண்டர் விண்ணப்பத்தை அரசு நிராகரித்துவிட்டது.

மேலும், தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகவே, எந்த நேரத்திலும் சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்துக்கு டெண்டர் வழங்கப்படலாம் என்பதால், டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.

இதுமட்டும் அல்லாது, சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் கோரப்பட்ட டெண்டர் விண்ணப்பத்தை ஏற்க உத்தரவிட வேண்டும்” எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணைக்கு வந்தது. இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில் நீதிபதி தண்டபாணி கூட்டுறவு சங்கம் மூலம் டெண்டர் விட அனுமதி வழங்கி உத்தரவு அளித்துள்ளார்.

 

The post தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைக்க டெண்டர் விட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: