கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து இந்தியா-சீனா இடையே உடன்பாடு: வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா-சீனா இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். கடந்த 2020 ஜூன் மாதத்தில் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் சுமார் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த மோதலால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகளின் மட்டங்கள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. சமீபத்தில் ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,பீஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சரை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில்,‘‘ லடாக் எல்லை பிரச்னை 75 சதவீதம் தீர்க்கப்பட்டு விட்டது’’ என்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ரஷ்யா செல்கிறார். இந்த நிலையில்,ஒன்றிய வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறுகையில்,‘‘ இந்தியா-சீனா இடையே உள்ள எஞ்சிய பிரச்னைகள் தீர்ப்பது தொடர்பாக இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், கிழக்கு லடாக்கின் டெப்சாங்,டெம்சோக் பகுதிகளில் மீண்டும் ராணுவம் ரோந்து செல்வதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது’’ என்றார். ஆனால் சீன வெளியுறவு துறை அதிகாரிகள் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

The post கிழக்கு லடாக் எல்லையில் ரோந்து இந்தியா-சீனா இடையே உடன்பாடு: வெளியுறவுத்துறை அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: