அண்ணாமலை பல்கலையில் பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு

புவனகிரி, அக். 18: அண்ணாமலை பல்கலையில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு விழா நேற்று பல்கலைக்கழகத்தில் உள்ள சாஸ்திரி அரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி பங்கேற்று பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை தாங்கினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், இந்திய அரசின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசகரும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

பின்னர் ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். பிஹெச்டி பட்டம் பெற்ற 697 மாணவர்கள், பதக்கம் பெற்ற 38 மாணவர்கள், முதலிடம் பெற்ற 54 மாணவர்கள் என 789 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் நேரடியாக பட்டங்களை வழங்கினார்.இதுதவிர ஒட்டு மொத்தமாக 36,382 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் ஆளுநர் ரவி உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ், தொலைதூர கல்வி மைய இயக்குனர் சீனிவாசன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் குமார், கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி மலையரசன், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, சிதம்பரம் நகர்மன்ற துணை தலைவர் முத்துக்குமரன், சிதம்பரம் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகரன், பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் மற்றும் புல முதல்வர்கள், துறைத்தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post அண்ணாமலை பல்கலையில் பட்டமளிப்பு விழா ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: