சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை வடசென்னையில் முதல்வர் நேரில் ஆய்வு: ஊழியர்களுடன் ஒன்றாக சேர்ந்து தேநீர் அருந்தினார்

சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் நேற்று காலை முதல் மழை வெளுத்து வாங்குகிறது. வடசென்னையில் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அங்கிருந்த சாலையோர கடையில் தேநீர் வாங்கி மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுக்கு கொடுத்து, அவர்களுடன் இணைந்து முதல்வரும் தேநீர் அருந்தினார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காலை உருவானது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்கள் உள்பட வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மழை நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக் கொண்டார். வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது போன்று, நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. நேற்று சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். வடசென்னை பகுதியில் உள்ள யானைக்கவுனி, புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சென்றனர். யானைக்கவுனி பகுதியில் கொட்டும் மழையில் நேரில் ஆய்வு செய்தபோது, சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதேபோன்று புளியந்தோப்பு பகுதியிலும் முதல்வர் ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த புளியந்தோப்பு பகுதியில், மழைநீர் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த 15க்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களை நேரில் அழைத்து பாராட்டினார். பின்னர் அவர்களை, அருகில் இருந்த தேநீர் கடைக்கு அழைத்துச் சென்று அனைவருக்கும் டீ, பிஸ்கட் வாங்கித் தந்து ஊக்கப்படுத்தி உற்சாகமளித்தார்.

முதல்வரின் இந்த செயலை முன்கள பணியாளர் அனைவரும் வியந்து வெகுவாக பாராட்டினர். முதல்வரே தங்களை அழைத்துச் சென்று தேநீர் வாங்கித்தந்து உற்சாகப்படுத்தியது அவரின் பெருந்தன்மையையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்தியதாக பணியாளர்கள் கூறினர். முதல்வர் அளித்துள்ள ஊக்கம் மேலும் பணியில் மிகுந்த ஆர்வமுடன் தொடர்ந்து ஈடுபட வழிவகுக்கும் என தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கென சென்னை மாநகராட்சி சார்பில் 21 ஆயிரம் பணியாளர்கள் சுழற்றி முறையில் 15 மண்டலங்களிலும் பணி செய்கின்றனர்.

அதேபோன்று தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் 2,149 பணியாளர்கள், தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக சென்னையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கள பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,000 இடங்களில் மழைக்கால சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுகிறது.

* முன்கள வீரனாக துணை நிற்பேன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: கொட்டும் மழை உள்ளிட்ட இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தன்னலம் கருதாமல் – நேரம் காலம் பார்க்காமல் நம் துயர்துடைக்க களம் காண்பவர்கள் தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள். அவர்களுடன் நானும் எப்போதும் முன்கள வீரனாக துணை நிற்பேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை வடசென்னையில் முதல்வர் நேரில் ஆய்வு: ஊழியர்களுடன் ஒன்றாக சேர்ந்து தேநீர் அருந்தினார் appeared first on Dinakaran.

Related Stories: