முனைவர் பட்டம் வாங்கிய மேடையில் பாரதியார் பல்கலை மீது கவர்னரிடம் மாணவர் புகார்


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கோபால், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குனர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று முனைவர், முதுகலை, இளங்கலையில் பட்டம் பெற்ற 1,622 பேருக்கு பட்டங்களை வழங்கினார். அப்போது, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த வ.புதுப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆங்கிலத்திற்கான முனைவர் பட்டத்தை கவர்னரிடம் பெற்றார். அப்போது அவர் மேடையிலேயே புகார் மனுவை கவர்னரிடம் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தும் பயிற்சியாளர்கள் (கைடுகள்) சரியாக வழி நடத்துவது இல்லை.

அவர்களது வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொள்கின்றனர். சாக்கடையை சரி செய்யவும், குழந்தைகளை பராமரிக்கவும், அவர்களது வங்கி கணக்குகளை பராமரிக்கவும் பயன்படுத்தி வருகின்றனர். ஆராய்ச்சி மாணவர்களை கீழ்த்தரமாக நடத்துகின்றனர். மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள 2 ஆதிதிராவிடர்கள் விடுதிகளை சரிவர பராமரிப்பது இல்லை. ஆராய்ச்சி மாணவர்கள், கைடுகளுக்கு என ரூ50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டிய சூழல் உள்ளது. பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என மனுவில் கூறியுள்ளேன் என்றார். இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில் ‘‘புகார் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

The post முனைவர் பட்டம் வாங்கிய மேடையில் பாரதியார் பல்கலை மீது கவர்னரிடம் மாணவர் புகார் appeared first on Dinakaran.

Related Stories: