ஜூடோ போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வீராங்கனைகளுக்குப் பரிசு & சான்றிதழ்களை வழங்கினார் துணை முதல்வர்

சென்னை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான ஜூடோ போட்டியை தொடங்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, உணவு வழங்கும் கூடத்தை பார்வையிட்டு வீரர் வீராங்கனைகளுடன் உணவு அருந்தினார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.10.2024) நேரு விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான ஜூடோ கல்லூரி மாணவியர் 52(KG) எடை பிரிவு போட்டியை தொடங்கிவைத்து, பார்வையிட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, நேரு உள்விளையாட்டரங்கில் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் உணவு வழங்கும் கூடத்தை பார்வையிட்டு, உணவின் தரம் குறித்தும், தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்து வீரர் வீராங்கனைகளுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உணவு அருந்தினார்.

பின்னர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை – 2024 மாநில அளவிலான போட்டிக்கான ஏற்பாடுகளை இன்றைய தினம் நேரில் நான் ஆய்வு செய்திருக்கின்றேன். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.83 கோடியே 37 லட்சத்தை ஒதுக்கீடு செய்து நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டு இருந்தார்கள். சென்ற வருடத்தை விட அதிகப்படுத்தி உத்தரவிட்டு இருகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான பரிசுத் தொகை மட்டுமே ரூ.37 கோடியாக நம்முடைய முதலமைச்சர் உயர்த்தி கொடுத்திருகிறார்கள். அதுமட்டுமல்ல, சென்ற வருடம் இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 5 லட்சம் பேர் விண்ணப்பித்து பங்குபெற்று இருந்தார்கள். ஆனால் இந்த ஆண்டு நம் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 12 லட்சம் வீரர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்று விண்ணப்பித்து விளையாடி வருகிறார்கள். பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 36 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 15 நாட்கள் நடத்தப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டி நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பங்கேற்று இருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதில் 32 ஆயிரத்து 700 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலும் அவை தவிர்த்து பல்வேறு இடங்களிலும் 20 நாட்களுக்கு இந்த இறுதிப்போட்டிகள் நடைபெற்று வருகின்றது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அந்தந்த மாவட்டங்களிலிருந்து போட்டிகள் நடைபெறும் நகரங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதேபோல விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 150 க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் போதுமான வசதியான தங்குமிடத்திற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் தரமான உணவும் வழங்கப்பட்டு வருகின்றது. தினமும் மூன்று வேளை உணவு வழங்கப்படுவதுடன், காலை மற்றும் மாலை இடைவெளிகளில் சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றது. முதலமைச்சர் மாநில அளவில் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வருகின்ற 24ஆம் தேதி அன்று பரிசுகள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்க இருக்கின்றார். இப்போட்டிகளில் பங்கேற்கும் இளம் திறமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய நோக்கமாகும். இந்திய துணைக்கண்டத்தின் விளையாட்டுத் துறை தலைநகராக தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் அயராது உழைப்போம். வந்திருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

1. பத்திரிக்கையாளர் கேள்வி: மழையினால் போட்டிகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா?
துணை முதலமைச்சர் பதில்: மழையினால் பாதிக்க கூடாது. அப்படி பாதிக்கப்பட்டாலும் ஒரு நாள் இரண்டு நாள் அதிகப்படுத்தி விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடிப்போம்.

2. பத்திரிக்கையாளர் கேள்வி: மழை அறிவித்திருக்கிறார்கள் அதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவில் உள்ளன?
துணை முதலமைச்சர் பதில்: கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து கிட்டதட்ட 5 ஆய்வுக் கூட்டங்களை நடத்தி இருக்கின்றோம். நீர் வளத்துறை அமைச்சர், பொது பணித்துறை அமைச்சர், அனைத்து மூத்த அமைச்சர்கள், சென்னையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள், சென்னையில் இருக்கக் கூடிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், சில மாமன்ற உறுப்பினர்களை வைத்து தொடர்ந்து ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி இருக்கின்றோம். சட்டமன்ற உறுப்பினர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அதிகாரிகளிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆய்வு கூட்டம் நடந்தது. இன்று காலை மீண்டும் முதலமைச்சர் தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகள் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த முறை கண்டிப்பாக மழையை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எதிர்கொள்வோம். வெற்றிகரமாக எதிர்கொள்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது.

3. பத்திரிக்கையாளர் கேள்வி: மழையினால் போட்டி தடைபட்டால் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தங்கும் வசதிகள் எப்படி?
துணை முதலமைச்சர் பதில்: விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கடந்த 10 நாட்களாக இங்கேதான் தங்கி இருக்கிறார்கள். மழை வந்தாலும் தங்கும் வசதிகள், போக்குவரத்து வசதிகள், உணவு வசதிகள் அனைத்தும் தரமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அப்படி மழை வந்து ஓரிரு நாட்கள் போட்டிகள் நீடித்தாலும் அதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
நன்றி வணக்கம்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு பயிற்றுநர்கள் கலந்துகொண்டனர்.

The post ஜூடோ போட்டியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்திய வீராங்கனைகளுக்குப் பரிசு & சான்றிதழ்களை வழங்கினார் துணை முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: