ரெட் அலெர்ட் எச்சரிக்கை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள் ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மழை பெய்து வரும் நிலையில், வடசென்னை பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி கனமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் 30.9.2024 மற்றும் 14.10.2024 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். முதலமைச்சரின் உத்தரவின்படி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நள்ளிரவு கனமழை பெய்து கொண்டிருந்த நிலையில், மயிலாப்பூர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, தேங்கும் மழைநீரை உடனடியாக அகற்றிடவும், மழைப்பொழிவை முறையாக கண்காணித்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், இன்று (15.10.2024) காலை பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையம் மற்றும் எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் தொடர்மழை பெய்துவரும் நிலையில், முதலமைச்சர் இன்று யானைக்கவுனி கால்வாயில் மழைநீர் தடையின்றி சென்றிட மழைநீரில் அடித்துவரப்படும் கழிவுகளை JCB இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பேசின் மேம்பாலத்திலிருந்து, முதலமைச்சர், காந்தி கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய் சேரும் இடமான பக்கிங்ஹாம் கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

பின்னர், முதலமைச்சர் டிமெல்லோஸ் சாலையில், அதிகமாக மழைநீர் தேங்கும் இடங்களான கே.எம். கார்டன் மற்றும் புளியந்தோப்பு பகுதிகளில் சேரும் மழைநீரை மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, புளியந்தோப்பு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு பணி மேற்கொண்டிருந்த பெருநகர சென்னை மாநகராட்சி முன்களப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடி, அருகிலிருந்த தேநீர் கடைக்கு அவர்களை அழைத்துச் சென்று தேநீர் அருந்தினார். பின்னர், ஸ்டீபன்சன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் பம்புகள் மூலம் பெரம்பூர் பிரதான சாலை பகுதிகளில் தேங்கும் மழைநீரை ஓட்டேரி நல்லா கால்வாய்க்கு சென்றடைவதை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஓட்டேரி நல்லா கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்வதை முதலமைச்சர் பார்வையிட்டு, ஆய்வு செய்த பின், அங்கு பணியில் இருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தேநீர் மற்றும் பிஸ்கட்களை வழங்கினார். இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே. சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் இ பரந்தாமன், திரு- தாயகம் கவி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் தா. கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர் பி. கணேசன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் பெய்த கனமழையின் விவரங்கள், பாதிப்புகள் மற்றும் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
தமிழ்நாட்டில் கடந்த 1ம் தேதி முதல் 14ம் தேதி வரை 10.52 செ.மீ. மழை பெய்துள்ளது. அதாவது வழக்கமான அளவைவிட 68 சதவிகிதம் கூடுதல் மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் சராசரியாக 2.241 செ.மீ., மழையும், சென்னையில் சராசரியாக 6.5 செ.மீ., மழையும், அதிகபட்ச மழைப்பொழிவுயாக புதுக்கோட்டை மாவட்டத்தில் குடுமியான்மலையில் 13.4 செ.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டியில் 10 செ.மீட்டரும். சென்னை மாவட்டத்தில் மண்டலம் 8 மலர் காலனியில் 9 செ.மீட்டரும், மண்டலம் 6 கொளத்தூரில் 9 செ.மீட்டரும் மழை பெய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நிவாரண முகாம் துவக்கப்பட்டு அங்கு 32 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 96 நபர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. வானிலை மைய அறிவிப்பின்படி, நாளை (16.10.2024) திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை. நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர். இராணிப்பேட்டை, திருவண்ணாமலை. கள்ளக்குறிச்சி. பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும். வேலூர். திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம். திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும், 17.10.2024 அன்று திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர். திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தருமபுரி, சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என்று அறிவித்துள்ளது. பொதுவான எச்சரிக்கை நடைமுறை (CAP) மூலம் 85 இலட்சம் கைபேசிகளுக்கு முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 444 வீரர்களைக் கொண்ட 16 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 10 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 89 மீட்புப் படகுகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் 300 நிவாரண மையங்களும், மாநிலம் முழுவதும் 5147 மையங்களும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து கொள்ள மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களாக 37 மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்கு 15 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும், 6 மாவட்ட வருவாய் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்பாக மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் பெறப்பட்ட 249 புகார்களில் 215 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு
நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், அத்தியாவசிய சேவை துறைகளான காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, உள்ளாட்சி நிர்வாகத் துறைகள், பால் வளத்துறை, குடிநீர் வழங்கல் துறை, மருத்துவமனைகள், மருந்தகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், மின்சாரத் துறை, காய்கறிகள் மற்றும் இதர அத்தியாவசிப் பொருட்களுக்கான போக்குவரத்து, மாநகர போக்குவரத்து, சென்னை மெட்ரோ ரயில், MRTS, ரயில்வே, விமான நிலையம், விமான போக்குவரத்து, பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் பேரிடர் மீட்பு நிவாரண பணிகள் மேற்கொள்ளும் துறைகள் ஆகியவை வழக்கம் போல் இயங்கும்.

பிற கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும். நாளை (16.10.2024) மிக அதிகனமழை எதிர்பார்க்கப்படுவதை முன்னிட்டு, சென்னையில் உள்ள தனியார் அலுவலகங்கள் மிகக் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டோ அல்லது தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்றும்படியோ அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

The post ரெட் அலெர்ட் எச்சரிக்கை: சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: