சென்னைக்கு ரெட் அலர்ட்… உடனுக்குடன் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைள் என்ன?.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..!

சென்னை: சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கட்டுப்பாட்டு அறையில் அனைத்து துறை பணியாளர்கள் கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்பு கெண்டு பணியாற்றி வருவதையும், எல்.ஈ.டி திரை மூலம் மழை பெய்யும் பகுதிகள் குறித்து பார்வையிட்டும் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வடகிழக்கு பருவமழை சென்னை மாநகராட்சி பகுதிகளில் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை முடிவடைந்த 24 மணி நேரத்தில் 4.6 செ.மீ மழை பெய்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் பகுதியில், 6.1 செ.மீட்டரும், தேனாம்பேட்டையில் 6.1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. குறைந்தபட்சமாக தண்டையார்பேட்டையில் 2.8 செ.மீட்டர் மழையும், புழல் பகுதியில் 3.0 செ.மீட்டரும், மாதவரத்தில் 4.0 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. மழையின் காரணமாக சென்னை பெருநகர மாநகராட்சி பகுதியில் 8 மரங்கள் விழுந்துள்ளன. ஒரு மரம் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள 7 மரங்களை அகற்றும் பணிகள் இன்னும் 1 மணி நேரத்தில் முடிக்கப்படும்.

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் 50 முதல் 1,000 நபர்கள் தங்கும் வகையிலான நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிவாரண மையங்களில் தண்ணீர், பால்பாக்கெட், பிஸ்கெட், பிரட், உணவு ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 35 பொது சமயலறைகள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 20 சுரங்க பாதைகளில் எந்தவித இடையூறுமின்றி போக்குவரத்து நடைபெற்று வருகின்றது. கணேசபுரம், பெரம்பூர் ஆகிய இரண்டு சுரங்க பாதைகள் மட்டும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அந்த சுரங்கப்பாதைகளிலும் மோட்டார் பம்ப் மூலமாக தண்ணீர் அகற்றப்பட்டு வருகின்றது.

மழை ஒரு மணிநேரம் விட்டால் அந்த சுரங்கபாதைகளும் சரி செய்யப்பட்டு விடும். நீர்தேங்கியுள்ள 300 க்கும் மேற்பட்ட இடங்களில் நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் எங்கும் மின்தடை எற்படவில்லை. கடந்த 12 மணிநேரத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 1,500 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 600 அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக 13.5 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. விருதுநகரில் 7 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்புக்குழு மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் 26 இடங்களில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.

இதுவரை 24 குழுக்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 89 படகுகளும், பிறமாவட்டங்களில் 130 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 300 நிவாரண மையங்களும், சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் 631 நிவாரண மையங்கள் என மொத்தம் 931 மையங்கள் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும், அனைத்து மாவட்டங்களில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வெள்ளத்தை கண்காணிக்க கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவமுகாம் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 100 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 13,000 தன்னார்வலர்கள் பணியில் ஈடுபட பதிவு செய்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் 65,000 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தேவைப்பட்டால் பிறமாவட்ட தன்னார்வலர்கள் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணைமேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் தலைமை செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, துணை முதலமைச்சரின் செயலாளர் பிரதீப் யாதவ். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னைக்கு ரெட் அலர்ட்… உடனுக்குடன் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைள் என்ன?.. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்..! appeared first on Dinakaran.

Related Stories: