நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 81 (பகவத்கீதை உரை)

யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய
ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
‘‘உடலைத் தன் வசமாக்கிக்கொண்டிருக்கும் ஒருவன், புலன்களை அடக்கியாள முடிந்த ஒருவன், உலக உயிர்களனைத்தும் ஆன்ம சொரூபமே என்று தெளிவடைந்த ஒருவன், உலகியல் கர்மங்களில் ஈடுபட்டாலும், நிச்சயமாக அவன் கறை படிந்தவனாக ஆவதில்லை.’’ சரீரம் என்ற ஒன்றை உணர்ந்தவன், அதுவே தான் மற்றும் எல்லாம் என்ற உணர்வுக்கும் ஆட்படுகிறான். உலகியல் வாழ்க்கையில் சரீரத்தை முன்னிறுத்த வேண்டியது அவசியமாகிறது. அதுவே அடையாளமாகவும் ஆகிறது.

ஆனால் மேம்போக்கான, வெளிப்படையான செயல்களுக்குப் பயன்படும் அந்த சரீரத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நாம் யாருமே விழைவதில்லை. உடலைச் செயல்பாட்டுக்கான ஒரு கருவி என்றே எடுத்துக்கொள்வோம். அந்த உடலுக்குள் உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வேண்டுமானால் விஞ்ஞானம் சோதனை ரீதியாக விவரிக்கலாமே தவிர, அவற்றை இயக்குவது எது என்ற கேள்விக்குப் பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை.

விழுங்கும் ஆகாரம் எப்படி செரிக்கிறது, அவ்வாறு செரிக்கும் ஆகாரத்திலிருந்து நன்மை தரும் சத்துகளையும், வேண்டாதவற்றையும் பிரிக்கும் சக்தி இரைப்பைக்கும், ஈரலுக்கும் எப்படி வந்தது? வேண்டாதவற்றை வெளியேற்றும் பொறுப்பைக் குடல் எப்படி வெகு இயல்பாகச் செய்கிறது, இது பகலில் மட்டுமா, அதாவது நாம் விழித்திருக்கும்போது மட்டுமா, இரவிலும் கூடத்தான் நடக்கிறது. அதாவது நாம் நிம்மதியாக ஓய்வு எடுத்துக் கொள்ள, நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் நமக்கு உறுதுணையாக நிற்கின்றன. நம் தூக்கத்திலும் ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதயம் ரத்தத்தை வாங்கி, வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நுரையீரல் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறது.

இவற்றையெல்லாம் இயக்குவது யார் அல்லது எது?

கைகளை அசைக்கிறோம், கால்களை இயக்குகிறோம். அவற்றில் அமைந்திருக்கும் மூட்டுகளுக்கு எண்ணெய் போட்டு அவற்றை இலகுவாக இயங்கவைக்கும் மெக்கானிக் யார் அல்லது எது?லௌகீகமாக இப்படி நம் உடற்கூறுகளை நாம் ஆராய முற்படும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படும். நம்மை இயக்குபவர், நம்மை நாமாக உலவவிடுபவர், அந்தப் பரமாத்மா அன்றி வேறு எவரும் இலர். ஆகவே, நம் சரீரத்தைத் தவிரவும் வேறு ஏதோ ஒன்றும் நமக்குள் இருக்கிறது.

அது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று விலகுபவர், அனுபவங்களின் பலன்களை அந்தந்த உணர்வுகளின்படி நுகர்கிறார். அவ்வாறு விலகாமல் இருப்பவர், அதாவது அந்த ஆன்மாவை உணர்பவர், எந்த அனுபவத்தினாலும், எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனாலும் அவர் தன் கர்மாக்களை இயற்றிக்கொண்டுதான் இருக்கிறார். இவ்வாறு ஆன்மாவை உணர்வது என்பது ஓர் ஒழுங்குமுறைதான். நம்மை நடத்துபவர், நம்மைக் கட்டுப்படுத்துபவர் என்று ஒருவர் இருக்கும் பட்சத்தில், அதை உணரும் பட்சத்தில், நமக்குள் ஒழுக்கம் தானாக நிலைபெற்று விடுகிறது.

தேசியக்கொடியைப் பார்த்ததும் நம் வலது கை, வலது நெற்றிப் பொட்டை நோக்கிச் சென்று சல்யூட் அடிப்பதைப் போல, ஆசிரியர் வகுப்புக்குள் நுழையும்போது பளிச்சென்று எழுந்து நிற்கும் மாணவர்களைப் போல, முதலாளி வருகிறார் என்று தெரிந்ததும், ஊழியர்களுக்கிடையே ஏற்படும் மரியாதை எச்சரிக்கை உணர்வு போல.அதாவது, சரீரத்துக்குள்ளேயே அதனினும் உயர்ந்து இருப்பதை உணர்ந்து கொண்டால் சரீரம் நம் வசப்பட்டுவிடும். இன்பம், துன்பம் இரண்டிற்குமான வேறுபாட்டை உணரக்கூடியவனால் அது சாத்தியமாகும். சந்தோஷம் தனது உரிமை என்றும், வேதனை பிறருக்கானது என்றும் கருதும் ஒருவனால் அது முடியாது.

வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஊரை அழித்துவிடும் ஆபத்து வந்தது. பாண்டிய மன்னர் கரையை பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தார். நாட்டு மக்கள் அனைவருக்குமான பொதுப் பொறுப்பு அது என்பதால் வீட்டுக்கு ஒருவர் இந்தப் பணியில் கட்டாயமாக ஈடுபட வேண்டும் என்று கட்டளையையும் பிறப்பித்தார். அந்த வகையில் வந்தி என்ற மூதாட்டியும் பங்கேற்க வேண்டி வந்தது. அவளுடைய குடும்பம் என்றால் அதில் அவள் மட்டுமே! அதனால் மன்னரின் ஆணைப்படி அவள் தன் பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.

ஆனால் வயது முதிர்ந்த தன்னால் அது சாத்தியமில்லை என்று உணர்ந்த அவள், சொக்கநாதப் பெருமானை மனமுருக வேண்டிக்கொண்டாள். உடனே மஹேஸ்வரனும் ஒரு கூலியாளாக அவள் முன் தோன்றினார். அவளுடைய வருத்தத்தை அவளே சொல்லக் கேட்ட பெருமான், அவளுக்கு பதிலாக அவள் சார்பில் தான் கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவதாகவும், அதற்காகத் தனக்கு ஏதேனும் கூலியை அவள் தரவேண்டும் என்றும் கோரினார்.

தன்னிடம், தான் தினமும் தயாரித்து விற்கும் பிட்டைத் தவிர வேறெதுவும் இல்லை என்றும், இதையே தான் அளிக்கும் கூலியாக ஏற்றுக்கொண்டு பணிக்குச் செல்லுமாறு மூதாட்டி கேட்டுக்கொண்டாள். இதில் வேடிக்கை பாருங்கள், வேலையை முடித்துவிட்டு வந்து கூலியைப் பெற்றுக் கொள் என்று அவள் சொல்லவில்லை. தன் துயரைப் போக்க வந்தானே என்ற ஆறுதலில் முதலில் கூலியைக் கொடுத்து விட்டு பிறகு பணியில் அமர்த்தியிருக்கிறாள் அந்த அப்பாவிப் பெண்மணி!

அதன்படியே பிட்டைப் பெற்றுக் கொண்ட பரமன், அதனை வயிறார(!) உண்டுவிட்டு அப்படியே உண்ட மயக்கத்தில் களைத்து உறங்கிவிட்டார். பணியை மேற்பார்வையிட்ட அரசு அதிகாரிகள், பிற அனைவரும் தத்தமது வேலைகளைச் செய்து கொண்டிருக்கும்போது இந்தக் கூலியாள் மட்டும் கொஞ்சமும் பொறுப்பின்றி உறங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்து மன்னரிடம் முறையிட்டார்கள்.

நாட்டிற்குத் தேவையான பொதுவான ஒரு பணி, தனி ஒருவனால் முடங்குவதா என்று கோபம் கொண்டான் மன்னன். உடனே ஒரு பிரம்பை எடுத்து உறங்கிக் கொண்டிருந்த கூலியாளின் முதுகில் ஓங்கி அடித்தான். பரமன் பொய்த் தூக்கம் கலைந்து முறுவலித்தபடி விழித்தார். அதேசமயம் அரசன் உட்பட அனைவருமே பிரம்படி பட்ட வலியை உணர்ந்தார்கள். இது என்ன நியாயம்? பிரம்படி வலி மட்டும் பொதுவாகலாம், பிட்டு தின்ற சுகம் எப்படி பரமனுக்கு மட்டும் உரித்தாகும்?

உண்மை அதுவல்ல, வலியைப் போலவே அந்த பிட்டு ருசியையும் அனைவருமே உணரத்தான் செய்தார்கள். ஆனால், அது தன் தனிப்பட்ட ஒருவருக்குக் கிடைத்த சுகம், அதைப் பிறரிடம் சொல்லி ஏன் அவர்களுடைய பொறாமையைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களுக்கு அந்த சுகம் கூடுதலாகக் கிடைத்திருக்குமானால், அதைக் கேட்டு நாம் அவர்கள் மீது பொறாமைப்படுவானேன், நமக்கென்று கிடைத்த அந்த சுகத்தைக் குறைத்துக் கொள்வானேன் என்று அவர்கள் அதை ஒருவருக்கொருவர், யாரிடமும் சொல்லவில்லை. நாவில் கரைந்த இனிமை, சுயநல ருசியில் மறைந்துவிட்டது.

ஆனால், முதுகில் பட்ட வலி மட்டும் ‘எனக்கு ஏன் துன்பம் வந்தது?’ என்ற சுயநல கோபத்தில் அதிகமாகத் தெரிந்தது. பிட்டு ருசியைப் போலவே பிரம்பு வலியையும் சம உணர்வாக ஏற்றுக்கொள்ள இயலாத, விரும்பாத தன்மையே இப்படி இரண்டிற்குமான வித்தியாசத்தை உணர வைத்தது.உடல் ஏற்கும் எந்த உணவிற்கும் சரி, எந்த வகையான உடல் நோவுக்கும் சரி, ஆன்மா சம்பந்தப்படுவதில்லை. பசியினால் உடல் வாடினாலும் ஆன்மா பலமுடனேயே இருக்கிறது. அதற்குப் பரந்தாமனின் உத்தரவு வரவேண்டும். அதுவரை இந்த உடலுக்குள் அது இருக்கிறது. உத்தரவு வந்தால் அவர் ஆணைப்படி அது வேறொரு உடலை அடைந்து அடுத்த பிறவியாகப் பரிணமிக்கிறது. இந்தப் புதுப் பிறவியிலும் அது உடலுக்கு அந்நியமாகவே இருக்கிறது. ஆகவே வருத்துதல் என்பதும் வாழ்த்துதல் என்பதுமான இரண்டும் சரீரத்துக்குத்தானே தவிர ஆன்மாவுக்கு அல்ல.

பேருந்தில், ரயிலில், விமானத்தில் பயணிக்கிறோம். நமக்கென்று ஒதுக்கப்படும் இருக்கையில் அமர்ந்துகொள்கிறோம். நம் இலக்கு வந்ததுமே இறங்கி நம் பணியைப் பார்க்க முற்படுகிறோம். ஆனால் அதுவரை நம்மைத் தாங்கிவந்த இருக்கை மட்டும் அங்கேயே, அப்படியே இருக்கிறது. அடுத்த பயணியைத் தாங்கிக் கொள்ளத் தயாராகக் காத்திருக்கிறது. இந்த இருக்கைதான் ஆன்மா. இதற்கு பாரபட்சமில்லை, ஏற்றத் தாழ்வு இல்லை, நன்மை – தீமை இல்லை. எதுவுமே இல்லை. சிறிது காலம் நம் உடலுக்குள் புகுந்திருக்கிறது, பிறகு வேறு உடல்தேடிப் போய்விடுகிறது, அவ்வளவுதான்! இதைப் புரிந்து கொள்பவன்தான் ஞானி. இதனாலேயே அவனுடைய பணிகளில் எந்தத் தொய்வும் ஏற்படுவதில்லை. முக்கிய காரணம், அந்தப் பணிகளின் பலாபலன்களில் அவன் அக்கறை செலுத்துவதில்லை.

“நம் கடம்பனை பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக் கர கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே’’
– என்றார் திருநாவுக்கரசர்.

கடம்ப மாலை அணிந்த முருகனைப் பெற்றவள் பார்வதி. அவளைத் தன் உடலின் வலப்பாகத்தைக் கொண்டவர் சிவபெருமான். தென்கடம்பை திருக்கரக் கோயிலில் கொலுவிருக்கும் அமிர்தகடேஸ்வரரான இந்த ஈசனுக்குப் பணிசெய்து கிடப்பதே என் கடன் என்று உள்ளம் உருகுகிறார் அப்பர் பெருமான். தன் தள்ளாத வயதிலும் கோயில் கோயிலாகச் சென்று உழவாரப் பணி மேற்கொண்ட இந்த அடியார் தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறியதில் அதிசயம் ஒன்றும் இல்லைதான். ஆனால் இறைவனுக்கும் ஒரு கடன் இருப்பதை இவர் குறிப்பிட்டதுதான் ஆச்சரியம். ஆமாம், ‘ஈசன் தன் கடன் அடியேனைத் தாங்குதல்’ என்கிறார் இவர். அதாவது ‘நான் இவ்வாறு என் கடனாகப் பணி செய்து கிடப்பதற்கு, என்னைக் காப்பது அந்த ஈசனின் கடனே’ என்கிறார். இப்படி எல்லாவற்றையும் பரமாத்மாவிடம் அர்ப்பணித்து விடுபவன்தான் ஞானி.

‘அந்தக் கரணம் சுத்தமாக இருப்பவன், தனது சுகங்களுக்காக யாரையும், எதையும் சார்ந்து, எதிர்பார்த்துக் காத்திருக்க மாட்டான்’ என்கிறார் கிருஷ்ணன். விரும்பியன கிடைக்காவிட்டால், தேவைகள் பூர்த்தியடையா விட்டால், துக்கம் எங்கிருந்தோ வந்துவிடுகிறது என்பது உண்மைதான். இதில் சோகம் என்னவென்றால், விரும்பியது கிடைத்தாலும், அடுத்ததை மனம் விரும்புவதும், அடுத்த தேவையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதும்தான், முந்தின துக்கத்தைவிட அதிக துக்கம் தருகிறது!

சரீரத்தை வென்றவனுக்கு இந்த ஆரம்ப துக்கமே இருப்பதில்லை. அதற்குப் பிறகுதானே, துக்கத்தின் பரிமாணம் கூடிக்கொண்டே போவதற்கு? ஆரம்ப துக்கமே இல்லையென்றால், அது அவனை எப்போதுமே தொடமுடியாது என்றுதான் கிருஷ்ணன் உபதேசிக்கிறார். இந்த சரீரம்தான் நான் என்று ஒருவன் கருதுவானானால், அவன் இறைவனோடு ஒன்ற முடியாதவனாகிவிடுவான். ஏனென்றால் இறைவனுக்கும் மேலே அவனுக்குத் தன் சரீர அபிமானம் ஏற்பட்டுவிடுகிறது. அவனே ‘நானு’ம், சரீரமும் வேறு என்று அறிந்துகொள்வானானால், ‘நானு’ம் இறைவனும் ஒன்றே என்பதையும் புரிந்து கொள்வான்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

The post நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்! appeared first on Dinakaran.

Related Stories: