அனைத்துக் கலைகளுக்கும் கலைமகளே

சரஸ்வதி பூஜை 11-10-2024
விஜயதசமி 12-10-2024

மூன்று தேவியரும் ஒன்றா?

நவராத்திரியில் அலைமகள், கலை மகள், மலைமகள் என மூவருக்கும் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. தனித் தனியாக பிரித்து மூன்று மூன்று நாட்களாகக் கொண்டாடப்பட்டாலும், தேவியர்கள் ஒருவருக்குள் ஒருவராக இருந்து, கல்வி செல்வம் வீரம் என மூன்றையும் அளிக்கின்றனர். துர்க்கை தசமகா வித்தைகளில் அமர்ந்து சகல கலைகளையும் ஒருவருக்குத் தருகிறாள். அதைப்போலவே திருமகளான மகாலட்சுமி வித்யா லட்சுமி எனும் சரஸ்வதி ரூபமாக ஒருவருக்குக் கல்வி நலனைத் தருகின்றாள்.

கல்வியா, செல்வமா, வீரமா?

மலை அசையாதது. வீரமும் அசையாது. மலைமகள் பார்வதி அசைவற்ற வீரத்தைத் தருகிறாள். செல்வம் திருமகளுக்கு உரியது. அசைவுடன் கூடியது. சென்று கொண்டேயிருப்பதால்தான் அதற்கு செல்வம் என்று பெயர். ஆனால் கல்வி ஸ்திரமாக இருப்பதால் அசைவற்றதாகவும் நிலை நின்றதாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் கல்வி ஒருவருக்கு ஒருவர் நீரோட்டம் போல கற்பிக்கப்படுவதால் சென்றுகொண்டேயிருக்கிறது. கல்வி இல்லாவிட்டால் வீரம் இருந்தும் பயன்படாது. புத்தி இல்லாத பலம் பிரயோஜனம் இல்லாதது. அதைப் போலவே பயன்படுத்தத் தெரியாதவனிடம் செல்வம் இருந்தால் அது அவனை அழித்துவிடும். எனவே கல்வி தான் பிரதானமானது என்பதால் முப்பெரும் தேவியர்களும் வித்தை எனப்படும் கல்வியை அளிப்பதில் முன் நிற்கின்றனர். அதில் கல்விக்கே ஒரு வடிவம் என்பதால் கலைமகள் வடிவமாக நம்முடைய முன்னோர்கள் வைத்தனர்.

கலைமகளுக்கு என்ன சிறப்பு?

கலைமகள் என்றால் என்ன பொருள்? கலைமகள் = கலை + மகள். படைப்பே (Creativity) ஒரு கலைதானே. அதனால் படைக்கும் கடவுளான நான்முகனின் நாவில் அமர்ந்தவள். அதனால் கலை மகளுக்கு நாமகள் என்றும் பெயர். சகல கலைகளும், கல்வியும், ஞானமும் அருளும் தெய்வமானதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள். வித்யா தேவதை என்று சொல்வார்கள். யாரை உபாசித்தால் கலைகளெல்லாம் ஒருவருக்கு வசப்படுமோ அந்த கலைகளுக்கு அதிதேவதை என்பதாலும் கலைமகள் என்று அழைக்கப்படுகிறாள்.

சரஸ்வதி

நிறைந்த கல்வியின் அடையாளங்களை நிரல் பட தொகுத்தால் தேவியின் திருவுருவம் நம் மனதை கொள்ளை கொள்ளும். வெள்ளைத்தாமரையில், வெண்பட்டாடை அணிந்து, அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்திருப்பாள். அதாவது ஒரு திருவடி மடக்கியும், ஒரு திருவடி தொங்கவிட்டபடியும் அமர்ந்திருப்பாள். நான்கு கரங்களில், வியாக்யான முத்திரை, அக்கமாலையை வலது கரங்களிலும், இடது கரங்களில் புத்தகமும், தலையில் சடா மகுடமும் தரித்திருப்பாள். அனைத்து விதமான அணிகலன்களும்
அணிந்திருப்பாள்.

நதியாக விளங்கும் நாயகி

வேத காலம் தொட்டு சரஸ்வதிக்கு மிக முக்கியமான இடம் உண்டு. வீணையை வைத்திருப்பதால் வீணாவாதினி என்றும், நாடிச் சுவடிகளை வைத்திருப்பதால் புஸ்தக வாணி என்றும் வழங்கப்படுகிறாள். வேதங்கள் சரஸ்வதியை நதியாகக் குறிப்பிடுகின்றன. சரஸ்வதி என்னும் சமஸ்கிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. ரிக் வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. ரிக் வேதம் சரஸ்வதியை எதையும் தூய்மைப்படுத்துபவளாகக் கருதுகிறது. மூன்று ஸ்லோகங்கள் சரஸ்வதி நதிக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.

கலைமகளின் வெவ்வேறு பெயர்கள்

ஓங்காரஒலியில் உறைந்திருப்பவளும், நாதமயமான இசையில் கலந்திருப்பவளும், அறிவின் உறை விடமாகவும், நினைவின் நிறைவிடமாகவும், சகல மொழிகள் மற்றும் எழுத்தின் வடிவமானவளும், அறிவியல், ஜோதிடம் போன்ற அனைத்துக் கலைகளின் ஒருமித்த முழு வடிவமாகவும் விளங்கும் கலைமகளுக்கு பற்பல பெயர்கள் உண்டு. அவற்றில் சில நாமங்கள்: பத்மாக்ஷி, விமலா, ஞானமுத்ரா, சாவித்ரி, சௌதாமினி, பிரம்மி, சுபத்ரா எனப் பல பெயர்கள் உள்ளன. கிளத்தி, நாமகள், நாமடந்தை, நாமாது, வாணி, திருமகள், கல்யாணி, கானமனோகரி, சரஸ்வதி, பாரதி, மாதவி, மாலினி, வாணி.

கலைமகள் குடியிருக்கும் இடங்கள்

தேவிபாகவதம், கல்வி நிலையங்கள், நூலகங்களை கலைமகள் குடியிருக்கும் இடங்களாகச் சுட்டிக் காட்டுகிறது. அறிவும் ஆற்றலும் நிறைந்த இடத்தில் கலைமகள் வீற்றிருப்பாள். எண்ணும் எழுத்தும் அறிந்தவர் இதயத்தில் கலைமகள் எழுந்தருளி இருப்பாள். குருவாய் திகழ்பவர்கள், குருவின் நல்ல சீடர்கள், நல்லவற்றையே பேசும் “நா” உடையவர்களிடத்தில் சரஸ்வதி வீற்றிருப்பாள். வேதம் பயிலும் இடம், நாதம் ஒலிக்கும் இடம், நடனக் கலைகள் சிறக்கும் இடம், கீதம் இசைக்கும் இடம், போன்ற இடங்கள் எல்லாம் கலைமகள் விரும்பிக் குடியிருக்கும் இடங்களாகும். நான்கு நல்ல புத்தகங்கள் எங்கே இருந்தாலும் அந்த இடத்தில் கலைமகளின் சாந்நித்தியம் இருப்பதாகவே பொருள்.

வசந்த பஞ்சமி

சரஸ்வதியின் நட்சத்திரம் மூலம். ஞானகாரகனாகிய கேதுவின் நட்சத்திரம். பரம பண்டிதனும் சொல்லின் செல்வனும் ஆன அனுமனின் நட்சத்திரமும் மூலம். சரஸ்வதிக்குரிய திதி நவமி. ஆனால் அவளுடைய அவதாரம் வசந்த பஞ்சமியில் நிகழ்ந்ததாகக் கருதுவது உண்டு. அதனால் வடக்கே உள்ளவர்கள் வசந்த பஞ்சமியை சரஸ்வதிபூஜை தினமாகக் கொண்டாடுகின்றனர்.

சரஸ்வதி சப்தமி

சப்தமி திதி கல்விக்கும் சரஸ்வதிக்கு உரிய நாள். நவராத்திரியில் சப்தமி நாளில் இருந்து சரஸ்வதியை வணங்க வேண்டும். சரஸ்வதியை ஆவாகனம் செய்யும் அந்த நாளை சரஸ்வதி சப்தமி என்று சொல்வார்கள். அன்றிலிருந்து மூன்று நாட்கள் அதாவது சப்தமி, அஷ்டமி, நவமி கலைமகளுக்கு உரிய நாட்கள்.

சாரதா நவராத்திரி

சாக்த ஆகமங்கள், பிரதி மாதமும் வளர்பிறை பிரதமையில் தொடங்கி நவராத்திரி உற்சவத்தைக் கொண்டாட வேண்டும் என்று சொல்வதாக பெரியவர்கள் குறிப்பிடுவார்கள். ஆயினும் அதில் நான்கு நவராத்திரிகள் மிக முக்கிய
மாகக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு நவராத்திரிக்கும் பிரதான தேவதைகள் உண்டு.
1. ஆஷாட நவராத்திரி – வராகி தேவி
2. சாரதா நவராத்திரி – துர்கா, லட்சுமி, சரஸ்வதி
3. சியாமளா நவராத்திரி – ராஜ மாதங்கி தேவி
4. வசந்த நவராத்திரி – லலிதா திரிபுரசுந்தரி

வஸந்த நவராத்திரி. (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது. ஆஷாட நவராத்திரி. (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்). சரத்ரு துவான புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி.

சாரதா என்பது கலைமகளின் பெயர். முப்பெரும் தேவியருக்கும் இந்த நவராத்திரியில் சிறப்பு உண்டு என்றாலும், தென்னகத்தில் சரஸ்வதிபூஜை ஆயுதபூஜையை பிரதானமாகக் கொண்டாடுவது இந்த நவராத்திரியில்தான்.

ஹயக்ரீவர் கலைமகளும்

கல்விக்கு தேவதை சரஸ்வதி. சரஸ்வதிக்கு குரு யார் தெரியுமா? ஹயக்ரீவர். ஹயக்ரீவர் அவதாரம் எப்படி நடந்தது என்று பார்க்க வேண்டும். முன்பு ஒரு நாள் வேதங்களின் துணை கொண்டு, பிரம்மா தனது படைப்புத் தொழிலை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மது, கைடபர் என்னும் இரு அரக்கர்கள் தங்களை பிரம்மனைவிடவும் பெரியவர்களாய் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேதங்களைப் பெண் குதிரை வடிவில் உருமாற்றி பிரம்மாவிடம் இருந்து பறித்துச் சென்றனர். வேதங்கள் இல்லாமல் உலகை இருள் சூழ்ந்தது. பிரம்மா திகைத்தார். வேதங்களை இழந்த பிரம்மன் பெருமாளைச் சரண் அடைந்தார்.

மகாவிஷ்ணு இவ்வுலகைக் காக்கவும், வேதங்களை மீட்டு வரவும், அற்புதமான வடிவம் எடுத்தார். அந்த வடிவம்தான் ஹயக்ரீவ அவதாரம். ஹயக்ரீவருக்கு பரிமுகன் என்றொரு பெயர் உண்டு. உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றி சொல்லப்பட்டுள்ளது. மத்வ ஸம்ப்ராயதத்தில் ஸ்ரீ வாதிராஜ ஸ்வாமிகள் ஹயக்ரீவ உபாசகராக விளங்கி புகழ் பெற்றார். அவருடைய ஸ்லோகம் இது. நாளும் சொல்ல வேண்டும்.

“ஞானானந்தமயம் தேவம் நிர்மலஸ்படிகாக்ருதம்
ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே’’

ஹயக்ரீவருக்கும் சரஸ்வதிக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஞானமும் ஆனந்தமயமானவரும், தூய்மையான ஸ்படிகம் போன்ற தேகத்தையும் உடையவர்கள். சகல கல்விக் கலைகளுக்கும் ஆதாரமுமானவர்கள். சரஸ்வதிபூஜையன்று அவர் குருவான ஹயக்ரீவரையும் வணங்க வேண்டும்.

தட்சிணாமூர்த்தியும் கலைமகளும்

சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. சரஸ்வதி ஞானமூர்த்தி. தட்சிணாமூர்த்தியும் ஞான வித்தையை அருள்பவர். சர்வ கலைகளுக்கும் பிரபு அவர். மேதா தட்சிணாமூர்த்தி அறிவு வெளிச்சத்தையும் வாக்கு வன்மையையும் அருளும் தெய்வமாக இருக்கிறார். சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி என இருவருமே அட்ச மாலை, சுவடி இவற்றோடு சந்திர கலையைத் தலையில் தரித்து காட்சி தருகிறார்கள். சரஸ்வதிக்கும் தட்சிணாமூர்த்தியைப் போல நெற்றிக்கண் உண்டு. அது காமத்தை எரித்து ஞானத்தை உணர்த்தும். இரண்டு தெய்வங்களுக்கும் ஜடாமகுடம் உண்டு. இருவருமே சுத்தமான வெண்மையை விரும்புபவர்கள். அதனால்தான் அனைத்தையும் ஊடுருவிப் பார்க்கும் ஸ்படிக மாலையை இருவரும் கையில் வைத்திருக்கிறார்கள். இரண்டு தெய்வங்களையும் வணங்கினால் ஞானம் தானே வந்தடையும். ஞானம் வந்தால் உள்ளம் நிறைவு பெற்று, அடங்கி, சாந்தி பெறும்.

ராமாயணத்தில் நவராத்திரி

ராமாயணத்திற்கும் நவராத்திரிக்கும் தொடர்பு உண்டு. ராம்லீலா என்பது துளசிதாசர் எழுதிய ராமாயணமான ராமசரித மானசில் கூறப்பட்டுள்ள ராமபிரானின் கதையை நடித்துக் காட்டும் நாடகமாகும். தொடர்ந்து 31 நாட்களுக்கு மாலைநேரத்தில் நடைபெறும், விழாவின் இறுதி நாளில் சூரசம்ஹாரம் போல ராவண சம்ஹாரம் நடைபெறும். ராவண உருவத்தை பெரிய பொம்மையாகச் செய்து அதனை தீயிட்டு அழிப்பார்கள். வாண வேடிக்கையுடன் கோலாகலமாக நடைபெறும் இந்த விழா நவராத்திரியில் நடைபெறும். இது ஒரு கலை விழாவாக நடப்பதால் கலை தேவதையான கலைமகளுக்கும் இடமுண்டு. தற்போது மேற்குலக நாடுகளிலும் இராமலீலை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வியாசரும் சரஸ்வதியும்

மகாபாரதத்தை வியாசர் சரஸ்வதியின் அருளால் எழுதினார். அதற்காக அவர் வடக்கே சென்று குகையில் தங்கி இருந்து எழுதினார் என்பார்கள். ஒன்றின் பின் ஒன்றாக எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை அடுக்கி வைத்தால் எப்படி இருக்குமோ அதைப்போலவே இந்த மலை அடுக்குகளாக இருக்கும். எனவே இந்த மலைக் குகைக்கு வியாச புஸ்தக் (புத்தகம்) என்று பெயர்.

மகாபாரதத்தில் ஆயுதபூஜை

மகாபாரதத்தில் ஆயுத பூஜை குறித்து இன்னொரு செய்தியும் உண்டு. மகாபாரதத்தில் பாண்டவர்கள் யார் கண்ணிலும் படாமல் மறைந்திருந்து வாழும் அஞ்ஞாத வாசத்தை மேற்கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் விராட தேசத்தில் வேலைக்காரர்களாக இருந்தனர். அவர்களை எப்படியாவது கண்டுபிடித்து மறுபடியும் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று துரியோதனன் மும் முரமாகத் தேடிக்கொண்டிருந்தான். அப்போது ஒற்றர்கள் மூலம் பாண்டவர்கள் விராட தேசத்தில் மறைந்து இருக்கிறார்கள் என்பதை ஊகித்து, அந்த நாட்டின் மீது படை யெடுத்தான். அங்கு பெண் வேடம் பூண்டு இருந்த அர்ஜுனன் விராடனின் மகனான உத்தரனை முன்னிறுத்தி தேரில் வருகின்றான். அந்த ஊர் மயானத்தில் உள்ள வன்னி மரத்துப் பக்கம் தேரைச் செலுத்தி, அம்மரத்தின்மீது மறைத்து வைத்திருந்த தனது ஆயுதங்களை எடுக்கின்றான். அப்பொழுது அந்த ஆயுதங்களுக்கு, ஒரு படையல் போட்டு விட்டு, போர் செய்யத் தொடங்குகிறான். இது மகாபாரதத்தில் நாம் காணும் ஆயுத பூஜை விழா.

ராகங்களில் கலைமகள்

இசைக்கு அதிபதி சரஸ்வதிதான். வாக்கு, குரல் முதலியவற்றை ஆளும் தெய்வமும் அவள்தான். எனவே சரஸ்வதியின் பெயரிலேயே ஒரு ராகம் உண்டு. அதற்கு சரஸ்வதி ராகம் என்று பெயர். இந்த ராகத்தை ஸ்ரீ கல்யாணி என்று ஹிந்துஸ்தானியில் அழைப்பார்கள். முத்து சுவாமிதிஷீதர் போன்ற மகான்கள் சரஸ்வதிமீது பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். இந்த ராகத்தில் பாபநாசம் சிவன் இயற்றிய பாடல் சரஸ்வதி தேவியின் சகல குணங்களையும் நமக்குக் கண்ணாடி போல் காட்டுகிறது.

சரஸ்வதி தயைநிதி! நீ கதி!

தண்ணருள் தந்தருள்வாய் பாரதி! (சரஸ்வதி)
கரமலர் மிளிர் மணி மாலையும் வீணையும்
கருணை பொழியும் கடைக் கண்ணழகும் வளர் (சரஸ்வதி)
நின்னருள் ஒளி இல்லையானால்-மன இருள்
நீங்குமோ! சகல கலை மாதே-வெள்
ளன்ன வாஹனி வெண் கமல மலர் வளரும்
வாணி வெள்ளைக் கலையணி புராணி! (சரஸ்வதி)

இது தவிர வாகதீஸ்வரி என்ற ராகமும் அவளைக் குறிப்பிடுகிறது. வீணா வாதினி என்றொரு ராகமும் கலைமகளின் பெயரில் அமைந்திருக்கிறது. எனவே சரஸ்வதி தேவியை வணங்கி இசைப்பயிற்சியைத் தொடங்க வேண்டும்.

எப்படி வழிபட வேண்டும்?

சரஸ்வதியை வெண்ணிறமலர்கள் கொண்டு வழிபடுவது விசேஷம். சரஸ்வதிக்குரிய அஷ்டோத்திரங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து வழிபடலாம். புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருள்களை வைத்து வழிபடுவது வழக்கம். கல்விக்குரிய பொருள்களையும் பூஜையில் வைப்பர். முடிந்தவர்கள் லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை செய்து சாதம், பாயசம் மற்றும் ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ, ஜாதிக்காய் போன்றவற்றைச் சேர்த்து செய்த தாம்பூலத்தையும் நிவேதம் செய்து வழிபட்டால், கலைமகளின் திருவருள் சித்திக்கும்.

ஆயுதபூஜையும் சரஸ்வதிபூஜையும்

ஆயுத பூஜை அன்று வீட்டிலுள்ள அரிவாள் மனை, சுத்தி, கத்தி போன்ற கருவிகளையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு வழிபடுவர். ஒவ்வொரு கருவியும் கலைமகளின் வடிவம்தான் காரணம். அதைக்கொண்டு தானே பல விஷயங்களை படைக்கிறோம். ‘‘செய்யும் தொழில் தான் தெய்வம்’’ என்பதற்காகவே, கல்விக்கு அதிபதியான சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜை தினமாகவும் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு தொழிலும் ஒவ் வொரு கலைதான். ஆய கலைகள் அறுபத்து நான்கும், அந்த 64 கலைகளுக்குத் துணையாகத் தோன்றியிருக்கும் ஆயிரக்கணக்கான கலைகளுக்கும் அதிபதி கலைமகள் அல்லவா. எனவே ஒவ்வொரு தொழிலாளியும் தான் செய்கின்ற வேலையில் திறன் பெறவும், புகழ் பெறவும் சரஸ்வதி பூஜையை ஆயுதபூஜையாகக் கொண்டாடுகிறார்கள். அடுத்த நாளான விஜயதசமியன்று புனர்பூஜை செய்து இவற்றை எடுத்து பணிகளில் ஈடுபட்டால் தொழில் வளம் பெருகும்.

வீணை இல்லாத சரஸ்வதி

பொதுவாக வீணையுடன்தான் கலைமகள் காட்சி தருவாள். ஆனால், வேதாரண்யம் திருத்தலத்தில் அருளும் சரஸ்வதி வீணை இல்லாமல் காட்சி தருகிறாள். இந்த தேவியை, ‘ஆதி சரஸ்வதி’ எனப் போற்றுகின்றன சிற்ப நூல்கள். இக்கோவிலின் பிரகாரத்தில் மிகப் பெரிய சரஸ்வதி கைகளில் வீணை இல்லாமல், ஆனால் சுவடிகளை வைத்தபடி வீற்றிருக்கிறாள். இந்த தலத்து நாயகி அம்பிகையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதை குறிக்கும் வகையில் சரஸ்வதிக்கு வீணை இல்லை என்பது ஐதீகம்.

The post அனைத்துக் கலைகளுக்கும் கலைமகளே appeared first on Dinakaran.

Related Stories: