மலர்ந்த முகம்
தனுசுராசிப் பெண்கள் இருக்கும் இடத்தில் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. எப்போதும் சிரித்த முகத்துடன் பெரியவர் முதல் குழந்தை வரை எல்லோரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பாசமாகவும் நேசமாகவும் பழகுவார்கள். இவர்கள் மனதில் கள்ளம் கபடம் சூதுவாது இருக்காது. எப்போதும் தன்னுடைய நல்ல பெயர், ஒழுக்கம், ஞானம், பக்தி இவற்றைப் பற்றிய அக்கறை அதிகம். ஆனால் தன் இமேஜை டேமேஜ் செய்யும் விஷயம் எதுவாக இருந்தாலும் அங்கு அவர்கள் எந்த முடிவுக்கும் தயாராக இருப்பார்கள். ஒழுக்கம் இருக்கும் ஞானச் செருக்கும் மிகுந்தவர்கள்.
காதலா! நட்பா!
தனுசு ராசி பெண் ஒருவருடன் பழகும்போது காதலிப்பது போலத் தோன்றும் ஆனால் கடைசியில் நண்பர் என்று சொல்வார். காதலித்தால் சிக்கிக் கொள்வோம் என்ற பயம் இருக்கும். சுதந்திர மனப்பான்மைகொண்ட இவர்களுக்குக் காதலை விட நட்பு முக்கியமாகும். பாதுகாப்பாகத் தோன்றும். நிறைய நல்ல குணமான நண்பர்கள் இவர்களுக்குக் கிடைப்பார்கள்.
ஒரே காதல் ஒரே கல்யாணம்
தனுசு ராசி பெண் காதலில் விழுந்தால் அது கல்யாணத்தில் தான் முடியும். அல்லது வாழ்நாள் முழுக்க காதல் தோல்வி தான். இவர்கள் வாழ்வில் இரண்டு, மூன்று காதல், இரண்டு, மூன்று திருமணம் வருவது அரிது. காதலரோ கணவரோ இவர்களை எந்நேரமும் கொஞ்சிக் கொண்டிருக்க வேண்டும் என்று இவர்கள் ஆசைப்படுவார்கள். அதற்கு தயாராக இருக்கும் ஆடவர் மட்டுமே இவர்களுடன் குடும்பம் நடத்த முடியும். இந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் பலர் வாழ்வு விவாகரத்தில் முடியும்.
காதலா? கடமையா?
காதலா கடமையா என்ற கேள்வி எழுந்தால் கடமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இனிவரும் நான்கு ராசிகளுமே அப்படித்தான் இருக்கும். முதல் ராசிகளுக்கு இருக்கும் காதல் உணர்ச்சி பின்வரும் ராசிகளுக்கு காதலை வெளிப்படுத்துவதில் இருக்காது. இவர்களுக்கு தனியாக வாழ்வதில் எந்த சிரமமும் கிடையாது எனினும் எப்போதும் சுற்றமும் நட்பும் சூழ இருப்பார்கள். பணத்தைச் சம்பாதிப்பதில் காட்டும் அக்கறையை விட சொந்தங்களைச் சம்பாதிப்பதில் அதிக அக்கறை காட்டுவார்கள். இவர்களைக் காதலிப்பதோ காதலில் ஜெயிப்பதோ அரிது. ஏனெனில் இவர்கள் காதலிக்கும் நபர்களை நண்பர்களாகத் தான் ஏற்றுக் கொள்வார்களே தவிர காதல் என்ற புதைகுழிக்குள் சிக்க விரும்புவதில்லை. காதல் என்றாலே இவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கும். எனவே சுதந்திர மனப்பான்மை உடைய இவர்கள் காதலில் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை.
ஆண்களிடம்…
தனுசு ராசிப் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில் அன்பாகவும் அதே நேரத்தில் ஆணவத்தோடும் இருப்பார்கள். ஆண்களிடம் ‘நைசாக’ பேசி தன் வேலையை அவர்கள் மூலம் செய்து வாங்குவது இவர்களுக்குப் பிடிக்காது. அந்நிய ஆண்களை கண்ணியமான தூரத்தில் வைத்திருப்பார்கள். ஆண்களிடம் இவர்கள் பல நேரங்களில் வெகு நிதானமாக செயல்படுவார்கள். எதிர்பாலினரிடம் மனம் விட்டுப் பேசுவார்கள். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் இவர்களுக்கு கிடையாது. யார் என்ன நினைத்தாலும் சரி என் மனது சுத்தமானது என்ற மனத்துணிவில் தொடர்ந்து தங்கள் வேலைகளைச் செய்து கொண்டு போவார்கள்.
செயல் திறன்
தனுசு ராசி பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பிரச்னைகளைத் தீர்ப்பதில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் இவர்களுக்கு இருக்காது. ஆனால் கணப் பொழுதில் எத்தகைய பெரிய சிக்கலுக்கும் தீர்வு கண்டு விடுவார்கள். குருவின் ராசியில் பிறந்திருப்பதால் தீர்வுகளைக் கண்டறிய இவர்களுக்கு நொடிப்பொழுது போதும். செயல் திறனும் செயல் நுட்பமும் மிக்கவர்கள். புதிய வழிகளை கண்டறிவார்கள். புலம்ப மாட்டார்கள்.
வெற்றிக் கொடி கட்டு
தனுசு ராசிப் பெண்கள் யாரிடமும் தன்னுடைய பிரச்னைகளை முறையீடாகச் சொல்வது கிடையாது. அந்த பிரச்னையை எப்படி சமாளித்தேன் வெற்றி பெற்றேன் என்று பிரமாதப்படுத்துவார்கள். இவர்களுக்கு நல்ல வாக்கு வன்மை இருப்பதனால் எதையும் நாடகப் பாங்குடன் வார்த்தைகளில் ஏற்ற இறக்கத்தைக் கொடுத்து முகத்திலும் குறிப்பாக கண்களிலும் சிரிப்பிலும் பாவனைகள் காட்டி நடிகை சாவித்திரி, பத்மினி, ஜோதிகா போல ஒரு விஷயம் சொல்வதற்குள் பத்து எக்ஸ்பிரஷன் காட்டி விடுவார்கள்.
வேலை வாங்குவது எப்படி?
தனுசு ராசி பெண்களிடம் வேலை சொல்லக்கூடாது. வேலையை கூட உதவியாகத்தான் கேட்க வேண்டும். உதவி செய் என்று சொல்லாதீர்கள். செய்கிறாயா என்று கேளுங்கள். இதைச் செய்து தர முடியுமா என்று வேண்டுதல் வையுங்கள். என்னால் முடியாததா என்ற கர்வத்தில் உடனடியாக செய்து கொடுப்பார்கள். அன்புக்கும் புகழ்ச்சிக்கும் அடிமையானவர்கள் தன்னை புகழ்ந்து பேசுபவரிடம் மிகவும் நட்பாக இருப்பார்கள்.
வேலையும் வேலைக்காரரும்
தன்னுடைய வேலைகளை திருப்தியாக செய்யும் தனுசு ராசிப் பெண்கள் வேலைக்காரர் வைத்து வேலை வாங்குவதில் திறமையானவர்கள் கிடையாது. அடிக்கடி அடுத்தவர்களை குறிப்பாக வேலைக்காரர்களை குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். தன்னை மாதிரி ஒழுங்காக வேலை செய்வதில்லை என்ற ஒரு எண்ணம் இவர்கள் மனதில் இருப்பதால் இவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் தங்குவது மிகவும் கடினம். அதிக ‘பொசசிவ்னஸ்’ உடையவர்கள் என்பதால் இவர்களுடைய எல்லைக்குள் உறவுகள் எவரையும் அனுமதிப்பது கிடையாது. பலர் சமையல் அறை ராணிகளாக இருப்பார்கள். விதவிதமான உணவுகளை சமைப்பதிலும் பரிமாறுவதிலும் மற்றவர்களைச் சாப்பிட வைப்பதிலும் மகிழ்ச்சி அடைவார்கள்.
The post தனுசு ராசிப் பெண் கண்ணியமும் கட்டுப்பாடும்! appeared first on Dinakaran.